Unordered List

02 பிப்ரவரி 2013

கடல் - அலைகளைக்கடந்து ஆழம்


”எனக்கு நிம்மதியா இருக்குறதை விட உஷாரா இருக்குறதுதான் பிடிக்கும்” 


”சாத்தான் யேசுவோட அண்ணன். அப்படின்னா அவனுக்கு யேசுவோட நிறைய தெரியும். என்னோட சேத்து இங்க இருக்குற 12 பேரு சைத்தானுக்க ஆளுங்க”

என்று பேசும் பெர்க்மான்ஸ்(அர்ஜுன்) தான் இந்த படத்தின் அச்சு. தான் தான் மிகுந்த அறிவாளி, சைத்தானின் பிரதி என நினைக்கும் அவரை, தான் எதிரியாக நினைக்கும் அனைவரையும் அவர்கள் யோசிக்க இடம் கொடுக்காமல் தனது திறமையால் தோற்கடித்துக்கொண்டே வரும் அவரை, தன் அறிவால் யோசிக்க கூட முடியாத ஒரு சிறு பெண், எளிய அன்பினால் வெற்றி கொள்வதே இந்தக் கடல்.

--


அர்ஜுனின் பாத்திரம் எந்த ஒரு ஹீரோவும் விரும்பும் ஒரு வில்லன் பாத்திரம், பெர்க்மான்ஸ். ஃபாதரான அரவிந்த் சாமியுடனான ஆரம்ப வார்த்தைப் போர்கள் மிகக் கூர்மையானவை. மிகத் திறமையான அவர் ஒரே  சறுக்கலினால்  புகழிலிருந்து வீழும் ஒரு Fallen Angel.  ஒரு முறை தோற்கும் பெர்க்மான்ஸ், அதன்பின் ஒரு முழு வில்லனாக மாறுவது அதிரடி.

அர்ஜுனைப் (பெர்க்மான்ஸ்) பற்றி தெரிந்திருந்தாலும், தனது நல்லியல்பால் மீண்டும் மீண்டும் ஏமாறும் ஃபாதர் அரவிந்த்சாமியும் சரியான எதிர் பாத்திரம்.

ஃபாதர் வளர்க்கும் கைவிடப்பட்ட பையனாக ஹீரோ தாமஸ், கெளதம்

ஃபாதரால் பெர்க்மான்ஸ் திருந்த ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால் அது நடக்கவில்லை. ஃபாதர் ஜெயிலுக்குப்போனபின், அதற்குக்காரணமான அனைவரையும் அடித்து நொறுக்கும் தாமசால் பெர்க்மான்ஸ்க்கு ஒரு பிரச்சனை வர வாய்ப்பு வருகிறது, ஆனால் அதுவும் நடக்கவில்லை.  ஹீரோ வில்லனை பழிவாங்குவான் என்ற எதிர்பார்ப்பைத் தகர்த்து, அவனும் விரும்பி பெர்க்மான்ஸ் உடன் சேரும்போது, சாத்தானின் முழு வெற்றி. அடுத்தது என்ன என்ற ஒரு திகைப்பு உருவாகிறது.

ஃபாதரின் திறமையாலும் வெல்ல முடியாத, தாமசின் சக்தியாலும் வெல்ல முடியாத பெர்க்மான்ஸ் யாரால் தான் வெல்லப் பட முடியும் என்ற கேள்விதான் இந்தப் படத்தின் முடிச்சு.


அறிவு வளர்ச்சி சிறு வயதிலேயே நிற்க, அந்தக் குறையை, தனது அன்பாலும், மருத்துவ சேவையாலும் இட்டு நிரப்பும் பெண்ணாக பியா என்ற பீட்ரைஸ்(துளசி).

நான் ஒரு பாவி என்று கதறும் தாமசிடம், பியா கொஞ்சமும் புன்னகை குறையாமல், “நான் யார்கிட்டையும் சொல்ல மாட்டேன், நீ இனிமே அப்படி பண்ணாத சரியா” என்று கூறுவதும், அந்த பரிபூரண மன்னிப்பை தாங்க முடியாமல் தாமஸ் கதறுவதும் கவிதை.

பயத்தைக் காட்டியும், அதிகாரத்தின் மீது ஆசையைக் காட்டியும், தனது அப்பாவைக் கொல்லும்போது கூட தாமசை எதிர்த்துப்பேச முடியாமல் தாமசைக் கட்டிப்போட்டிருக்கும் பெர்க்மான்ஸ், பியாவின் எளிய அன்புக்கு முன்னால் பதறுவது, அவள் தாமசை மீட்டுச் செல்வதைப் பார்த்து கையறு நிலையடைவது பின்னர் படு தோல்வியடைவது படத்தின் உச்சம்.

---

கடலோர மக்களின் மொழியை மிக இயல்பாக கேட்க முடிகிறது. சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், அந்த சூழ்நிலை மூலம் அர்த்தம் புரிந்துகொள்ள முடிகிறது. இது படத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

துணை நடிகர்களின் பங்களிப்பு அபாரம். ஃபாதருக்கு உதவியாக வருபவர்(யேசுவையே நேருல பார்த்தவரு), மீன் விற்கும் பெண் என பலர்.

பல பாத்திரங்கள் சில நிமிடங்களே வந்தாலும், அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும் சாத்தியங்களை தொட்டுக் காட்டிச் செல்கின்றன.  அர்ஜுனின் காதலியாக வருபவர் போல. பார்வையாளர்கள் தங்கள் கற்பனையால் இட்டு நிரப்பிக்கொள்ள.

முக்கிய நடிகர்களின் தேர்வு இந்தப்படத்தின் மிகப்பெரிய ஏமாற்றம். துளசி, கெளதம் இருவருமே இந்தப் படத்தின் பிரச்சனைகள். இவர்களிருவரும் வரும் காட்சிகள் பல ஸ்கூல் டிராமா மாதிரி இருக்கிறது. அதனாலேயெ பல முக்கிய காட்சிகள்  போதுமான இம்பாக்ட் கொடுக்க முடியவில்லை. அரவிந்த் சாமியும் பரவாயில்லை ரகம் தான். மணிரத்னத்துக்கா நடிகர்கள் பஞ்சம். அந்தக்கால ரஜினி-கமல் நடிக்க வேண்டிய கதை இது.

எப்படியும் இன்னும் ஒரு அரைமணிநேர கதை கத்தரிக்கு பலியாகிவிட்டது என எண்ணத் தொன்றுகிறது. பின்பாதி, தவ்வி தவ்விச் செல்கிறது. பல இடங்களில் தொடர்ச்சி இல்லை. இந்தக் கத்திரிரிக்குக் காரணம், நாயகியின் ‘திறமையான’ நடிப்பாகத் தான் இருக்கும் என்பது எனது எண்ணம்.

---

சில குறைகளை மீறியும் படத்தின் பேசுதளத்தாலும், ஆழமான கதையாலும் இது ஒரு முக்கியமான படம்.

அலைகளைக்கடந்து ஆழம் அறிபவர்களுக்கானது இந்தக் கடல்.