Unordered List

09 டிசம்பர் 2013

திருடுபோய்க் கொண்டிருப்பது

"டேய்ய்ய்....."

சென்னை சாந்தி தியேட்டர் வளாகத்தில் இருக்கும் சரவணபவனில் சாவகாசமாக ஒரு  மதிய உணவை முடித்துவிட்டு, நானுண்டு எனது செல்போனுண்டு என  நடந்து  வந்துகொண்டிருந்த நான் அந்தக் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

அவருக்கு ஒரு நாற்பத்தைந்து வயது இருக்கலாம். கையிலிருந்த கருப்புப்பை அவர் ஒரு விற்பனைப்  பிரதிநிதியாக இருக்கலாமென  சொல்லியது, அவரது முகத்தில் கோபம் பரவியிருந்தது.

அவர் பார்த்த திசையில் நானும் பார்த்தேன். ஒரு பத்து பையன்கள் ஓடிக்கொண்டிருந்தனர். எதோ பள்ளி சீருடையில் இருந்தனர்.  அவர் மறுபடியும் கோபமாக குரல்கொடுக்க ஓடிக்கொண்டிருந்த இரு பையன்கள் நின்று நிதானமாகத் திரும்பினர், "என்ன" என்பது போல் தெனாவெட்டாக  அவரைப் பார்த்தனர்.

அதுவரை கோபமாக இருந்த அவர் முகம் கொஞ்சம் மாற்றமடைந்தது, அதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. ஒரு அடி பின்னல் வைத்தார். அருகிலிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து
"பட்டப்பகல்ல இப்படி எடுத்துட்டு ஓடுறாங்க.. எலோரும் பார்த்துகிட்டு இருக்கீங்களே.." என்று குமுறினார். இப்பொது குரல் மிகவும் மட்டுப்பட்டே இருந்தது, இருந்தாலும் இழப்பின் வலி அந்தக் குரலில் இருந்தது. எனக்கு நிலைமை கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.



இப்படி ஒரு அனுபவத்தைப் பற்றி எனது நண்பன் ஒருமுறை சொல்லியிருந்தான்.

பஸ்ஸில் சென்ற அவனது செல்போன் திருடப்பட்டு விட்டதை கவனித்து இருக்கிறான். உடனடியாக ஒரு கும்பல் இறங்குவதையும் கவனித்துவிட்டு, உடனடியாக அவனும் இறங்கியிருக்கிறான்.பேருந்து புறப்பட்டுவிட, ஐந்தாறுபேர் இருந்த அந்த கும்பலும் அவனும் மட்டும் அந்த பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார்கள்.

இவன்  கவனித்ததைக் கவனித்த அவர்களில் வாட்டசாட்டமான   ஒருவன் "என்ன" என்று கேட்க. இவன் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு திரும்பியிருக்கிறான். வேறென்ன செய்ய?

அவர் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். இழப்பும் கையறு நிலையும் அவரது முகத்தில் தெரிந்தது.  இங்கே திருடு போயிருக்கிறது என்றும் அதற்குக் காரணம் யாரென்றும் தெரிந்தாலும் திருடுபோனது என்ன என்று எனக்கு தெரியவில்லை.



ஓடிக்கொண்டிருந்த அந்த பையன்கள் இப்போது மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். எங்களைப் திரும்பி பார்த்த அவர்களின் கண்களிலும் ஏளனம் கைகளில் கரும்பு.

ஆம், அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் கரும்பு இருந்தது. அப்போது தான் கவனித்தேன். அருகிலிருந்த அந்த கரும்பு ஜூஸ் எந்திரத்தின் அருகே சாக்கில் கட்டப்பட்ட ஓரிரு கரும்புகள் மட்டும் இவர்கள் எடுத்தது போக எஞ்சியிருந்தன. ஆளில்லாத கரும்பு ஜூஸ் வண்டியிலிருந்து எடுத்துகொண்டு அதாவது திருடிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். 
அந்த கரும்பு ஜூஸ் கடைக்காரர் அங்கே இல்லாததால், அங்கு நடந்தது யாருக்கும் ஒரு இழப்பாகத் தெரியவில்லை.

அவரை மீண்டும் கவனித்தேன். கண்டிப்பாக அவருக்கும் அந்த கரும்புகளுக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை, பிறகு ஏன் இவர் இவ்வளவு கோபமடைகிறார், இதனால் அவருக்கு என்ன இழப்பு  என்று யோசித்தேன்.

“விடுங்க சார்..கவனிக்காம அப்படியே விட்டுட்டு அப்புறம் போன பின்னாடி ஆத்திரப்பட்டு என்ன சார் பண்ண முடியும். கவனிச்சு வச்சிருந்துக்கணும்” என்று யாரொ அந்தக் கரும்புச்சாக்கை பார்த்தபடிகூற

"படிக்கிற பசங்க சார்"  என்று முனுமுனுத்தபடி அவர் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.