Unordered List

09 ஜனவரி 2015

அஞ்சலக அட்வென்சர்

எதிர்பார்த்ததை விட பரபரப்பாகவே இருந்தது தபால் அலுவலகம். அத்தனைக் கவுண்ட்டர்களிலும் வாடிக்கையாளர்கள். ஒரு அரசுத்துறை அலுவலகத்தில் பரபரப்பாக வேலை நடப்பதை பார்பதும் ஒரு மகிழ்ச்சி தான். ஆனால் அது மட்டும் போதாதே, நான் வந்த வேலையும் நடக்க வேண்டும் அல்லவா.

நான் ஒவ்வொரு கவுண்டராக பார்த்துக்கொண்டே சென்றேன், எங்கு நான் கேட்கவேண்டுமென பார்த்துக்கொண்டே. எதிலுமே நான் வந்த வேலை முடியாது என்று தெரிந்தது. சரி நான் எதற்கு அந்த தபால் அலுவகத்துக்கு வந்தேன். ஒரு அஞ்சல் உறை வாங்கத்தான். 

ஆனால் அந்த அலுவலகத்தில் அஞ்சல் சம்பத்தமான பணிகளைத்தவிர மற்றவற்றில் அனைவரும் மூழ்கியிருந்தனர். சற்று நேரத்துக்குப்பிறகு ஒரு ஊழியரிம் கேட்டு அஞ்சல் சம்பந்தமான விஷயங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன். அவர் கூண்டு மாதிரி இருக்கும் ஒதுக்குப்புறமான ஒரு அறையக்காட்டினார். 

என்னடா இது அஞ்சல் அலுவலத்தில், அஞ்சல் துறைக்கு வந்த சோதனை என்று நினைத்துக்கொண்டு அந்தக் கூண்டுக்குள் எட்டிப்பார்த்தால் யாரும் இல்லை. 

என்ன செய்வதனத் தெரியாமல் சற்று நேரம் சுற்றியபிறகு ஒருவரைக் கண்டுபிடித்தேன். ஒரு உயரதிகாரி தோற்றத்தைக்கொண்டிருந்தார். நான் அஞ்சல் உறையக்கேட்டதும் சற்று யோசித்துவிட்டு அதே கூண்டைக்காட்டி அதில் யாரும் இல்லையென்றும் தெரிந்துகொண்டார். 

இங்கு வந்து ஏன் இவன் இதைக்கேட்கிறான் என அவரது முக பாவனை சொன்னலும் அவரே வந்து எடுத்துக்கொடுக்க தவறவில்லை. உயரதிகாரிக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு கிளம்பினேன். வேலை இனிதே நிறைவடைந்தது.

நான் போனது மதிய உணவு நேரமாக இருந்ததால் அங்கிருந்தவர் சாப்பிடப்போயிருக்கலாம், சென்னை அண்ணா சாலையில், அவ்வளவு முக்கியமாக இடத்தில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்திலியே, சேமிப்புத் துறைக்கு இடையே  இருக்கும் அஞ்சல் துறையக் கண்டு பிடித்தது ஒரு நிஜமான சாகசம் தான்.