Unordered List

14 ஜனவரி 2013

புத்தகக் கண்காட்சி - ஓர் எச்சரிக்கை மற்றும் சில தகவல்கள்

புத்தகக்கண்காட்சிக்கு உடற்பயிற்சிக்கல்லூரி பொருத்தமான இடம்தான். புத்தகக் கண்காட்சிக்கு போவதற்க்கு முன்னால் கொஞ்சம் நாள் நடைப்பயிற்சி செய்துவிட்டு போவது உத்தமம். அவ்வளவு பெரிய அரங்கை சுற்றி வருவதற்கு உங்கள் கால்களில் கொஞ்சம் தெம்பு அவசியம். காலில் தெம்பு இல்லாமல் உட்கார இடம்தேடி பொறியில் சிக்கியவர்கள் பலர். அதில் ஒரு மிகப்பெரிய சதியும் இருக்கிறது. நான் சென்றது போன சனிக்கிழமை. இரண்டு மணிநேரம் சுற்றி, களைத்த கால்களுடனும், வாங்கிய புத்தக சுமையுடனும்(அப்படித்தான் சொல்லணும்) கொஞ்சம் இளைப்பார இடம் தேடினால் எங்கும் இடம் இல்லை. சில இடங்களில் ஸ்டாலில் உள்ளவர்களே இருக்கை இல்லாமல் நாள் முழுவதும் நிற்பதையும் கவனிக்க முடிந்தது.

இன்னிலையில் பாலைவனச் சோலை போல கிடைத்தன வசதியான இருக்கைகைகள். உட்கார்ந்த அப்புறம் தான் கவனித்தேன் அது ஒரு கவி அரங்கு என்று. பீதியுடன் கவனித்தால் அதில் நடுவர் ‘வாலிபக்கவிஞர்’ வாலி. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு எனது எச்சரிக்கை இதுதான். ஒன்று உட்காராமலே சுற்றும் அளவுக்கு காலில் தெம்புடன் செல்லுங்கள், அல்லது வாலிபக் கவிஞர் போன்றவர்களின் அரங்குகளை தாங்கும் அளவுக்கு மனத் தெம்புடன்.


  • புதிய இடம் வசதியாகத் தான் இருக்கிறது. வாகன நிறுத்ததிலிருந்து நடக்க வேண்டிய தூரம் தான் கொஞ்சம் அதிகம். இருந்தாலும் நடக்கும் தூரம் தெரியாமலிருக்க, போகும் வழிக்கு சுண்டல் வாங்கி சாப்பிட்டபடியே செல்லலாம். அப்படி ஒரு வசதி செய்யப்படிருக்கிறது. இந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.


  • ஜெயமோகன் வழிகாட்டுதலில், கடலூர் சீனுவை பதிப்பாளராகக் கொண்டு உதித்துள்ள சொல்புதிது பதிப்பகம் ஸ்டால் 504-இல் எழுத்துப் பதிப்பகத்தில் இயங்கி வருகிறது. தீவிர இலக்கிய வாசகரான சீனு, வாசகர்களுக்கு பொதுவாக புத்தகங்கள் பற்றி தகவல்கள் சொல்வதையும் கவனித்தேன். 


  • தமிழினி பதிப்பகத்தில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இருந்தார். புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு எழுத்தாளர்களின் வருகை இன்னும் மகிழ்சி தரும் விஷயம். இந்த வருகைகள்தான் இந்த கண்காட்சியை ஒரு கொண்டாட்டமாக மாற்றுகின்றன.

  • மதி நிலையத்தில் இருந்த ‘நாலாயிர திவ்யப்ப்ரபந்தம்’ இருநூறு ரூபாய்தான். பதம் பிரித்து கொடுக்கப்படுள்ள பாடல்கள், விளக்கம் இல்லாமலே புரியும்படி உள்ளன. அப்படியே புரியாத சில வார்த்தைகள் இருந்தாலும் இருக்கவே இருக்கிறது கூகிள்.

  • காலச்சுவடு பதிப்பகத்தில் புதுமைப்பித்தன் கதைகளை வாங்கச் சென்றேன். அது நானூற்று ஐம்பது ரூபாய். அவர்கள் அவரது முழுத்தொகுப்பே தொள்ளாயிரம் ரூபாய் தான் என்று ஒரு டீல் தந்தார்கள். சிறப்பு தான்.

  • புத்தகக் கண்காட்சியின் இன்னொரு அம்சம் அங்கே எதிர்பாரமல் சந்திக்கும் நண்பர்கள். அப்படி சிலரை சந்திக்க முடிந்த்தது.

  • அதெல்லாம் சரி, புத்தகக் கண்காட்சிக்கு உள்ளே எதற்கு அந்த அப்பளக் கடை என்று தெரியவில்லை. அப்பளமும், வத்தல்களும் பரபரப்பாக விற்பனை ஆகிறது. இது எதாவது இலக்கிய குறியீடொ என்னவோ தெரியவில்லை. 

இன்னொரு முறையாவது செல்லவேண்டும். இந்த இருநாட்களாக காலையில் ஜாக்கிங் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இன்னொரு கவியரங்கத்தை தாங்க முடியாது என்பதால். புத்தகங்களால் ‘உடனடி’ நல்ல பழக்கம் வாரது என்று யார் சொன்னது.

11 ஜனவரி 2013

சென்னையில் ஜெயமோகன் உரை - விழா படங்கள்


ஒரு ஞாயிறு மாலை. சென்னையில் ஜெயமோகன் உரை என்று அந்த விழாவுக்கு ஆஜரானேன். அது உயிர்மை பதிப்பகம் நடத்திய ஒன்பது புத்தகங்களுக்கான வெளியீட்டு விழா.

இலக்கியம் மற்றும் பதிப்பகத் துறைக்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையிலும் உயிர்மை தனது அக்கறையினால் புத்தக வெளியீடு மற்றும் விழாக்கள் என நடத்தி வருவதாக தனது வரவேற்பு உரையில் மனுஷ்யபுத்திரன் கூறினார்.  புத்தகத்தை வெளியிடுவதோடு மட்டும் நின்றுவிடாமல் அதை அறிமுகப்படுத்த விழா எடுத்து, வாசகர்கள் முக்கிய ஆளுமைகளின் பேச்சைக் கேட்க தளம் அமைத்து தரும் அவரின் சேவை பாராட்டத்தக்கது.

மூன்று அமர்வுகளாக நடந்தது அந்த விழா. ஒரு அமர்வுக்கு மூன்று புத்தகங்களாக ஒன்பது புத்தகங்கள் வெளியீடு. முதலில் நடந்த கவிதை புத்தகங்கள் வெளியீட்டுக்குப் பின்னர் நாவல்கள் வெளியீடு நடந்தது. சிவகாமி எழுதிய 'உண்மைக்கு முன்னும் பின்னும்" என்ற நாவல் பற்றி  ஜெயமோகன் அறிமுக உரை வழங்கினார்

புத்தகம் வெளியீடு

ஜெயமோகன் பேச எழுந்ததும் அரங்கில் கொஞ்சம் சலசலப்பு. சட்டென கூட்டம் அதிகரிப்பதை கவனிக்க முடிந்தது. பலர் வெளியே நின்றிருந்தனர் போல.  பலத்த எதிர்பார்ப்பு இடையில் அவரது பேச்சு ஆரம்பித்தது.

அரசு, அது செயல்படும் முறை, அந்த அரசை இயக்கும் உண்மையான விசை, அந்த விசையின் இயல்பு என்று அறிமுகப்படுத்தியவர், இதைப்பற்றி இதுவரை வந்துள்ள முக்கிய படைப்புகளையும் தொட்டுக்காட்டி பேசியபோது, இந்த நாவலின் தளம், இலக்கிய வரிசையில் இதன் இடம் எனத் தெளிவாகத் தெரிந்தது.

பின்னர் இந்த நாவல் எந்த வகையில் கவனிக்கத்தக்கது என்று சுட்டிக்காட்டிய அவர் நாவலின் சில உச்சங்களையும் தொட்டுக்காட்டினார்.  அது பார்வையாளர்களுக்கு நாவலைப்பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை அளித்ததுடன், இந்த துறையில் இருக்கும் பல படைப்புகளைப் பற்றிய ஒரு திறப்பாகவும் அமைந்தது.

முழு உரை இங்கே.. மாபெரும் இயந்திரம்

----

ஆறு மணிக்கு விழா என நினைத்து ஐந்தரை மணிக்கெல்லாம் நான் அரங்குக்கு சென்றுவிட்டேன், ஆனால் அங்கு இருந்தது ஓரிருவர் மட்டுமே. ஞாயிறு மாலை சென்னையில் இலக்கியத்துக்கு அவ்வளவுதான் கூட்டம் வரும் போல என எண்ணினேன். ஆனால்.  ஆனால் கூட்டம் தொடங்கியபோது நிறைந்த அரங்கு, ஜெயமோகன் பேச்சின்போது உச்சகட்ட எண்ணிகையை அடைந்தது. அவர் பேசிய அரைமணிநேரமும் அந்த அரங்கின் கவனம் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருந்தது.

பழ.நெடுமாறன், இயக்குனர்கள்   ஞானராஜசேகரன், லிங்குசாமி, தங்கர் பச்சான் என பல ஆளுமைகள் கலந்து கொண்டனர்.

இயக்குனர் லிங்குசாமி, இப்போதுள்ள வேளைகளின் நெருக்கடியினால் தான் படிக்கும் நேரம் குறைந்து வருவதாக வருத்தப்பட்டார், எனினும் சமீபத்தில் தான் படித்த ஜெயமோகனின் "அறம்"  சிறுகதைத் தொகுப்பின் சில கதைகளை சொல்லி அது தனக்குத் தந்த  அனுபவத்தை பரவசத்துடன் பகிந்துகொண்டார்.



இந்தக்கூட்டமும், கவனிப்பும் புத்தக கண்காட்சி தொடங்கும் நேரத்தில் ஒரு முக்கியமான தொடக்கமாக அமைந்தது, அரசு மற்றும் வேறு ஆதரவுகள் இல்லாவிட்டாலும், தரமான வாசகர்கள் ஆதரவு இருந்தால் இலக்கியம் தானாக வளரும் என்ற நம்பிக்கையுடன்.

சென்னை - 6-1-2013

03 ஜனவரி 2013

நடுவுல கொஞ்சம் நண்பர்களைக் காணோம்

ஒவ்வொரு வகையான நண்பர்களுக்கும் ஒவ்வொரு பாடி லாங்குவேஜ் உண்டு. தெரு நண்பர்கள், பள்ளி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், நண்பர்களில் அலுவலக நண்பர்கள் என. இவற்றை அப்படியே திரையில் பார்க்கும்போது பரவசமாகத் தான் இருக்கிறது.  இதில் எல்லா வகையிலுமே நெருக்கமான நெருக்கடியில் தோள்கொடுக்கும் நண்பர்கள் அமைவதுண்டு.

நண்பனின், அல்லது ஒரு நண்பனின் அலுவக நண்பனின் வீட்டில் படுத்துக்கொண்டு வெட்டிபேச்சு  பேசுவது, 2 வீலரில் சுற்றுவது, விளையாடுவது, சட்டென வரும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளவது என இந்தப் படத்தில் பார்த்தது என்னையும் எனது சில நண்பர்களையும். யப்பா.. பேய் மாதிரி எடுத்திருக்காங்க இந்தப்படம்

இன்று இரவு தூங்கமுடியாது என நினைக்கிறேன். வீட்டிலிருந்து படித்த காலத்தில் கிடைத்த  பள்ளிக்கூட நண்பர்கள் ஒருவகை என்றால், கல்லூரி காலத்தில் கூட தங்கிப்  படித்த நண்பர்கள் இன்னொருவகை. எனது வாழ்க்கையில் நடந்த எல்லா முக்கிய நல்ல விஷயங்களின் பின்னாலும் நல்ல நண்பர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு நினைவுகளையும் இனிமையாக கிளறுகிறது இந்தப்படம்.

நண்பர்களின் உண்மையான மதிப்பு, அவர்கள் செய்திருக்கக்கூடிய ஒரு செயலை மற்றவர்கள் செய்யும்போது தெரிந்துவிடுகிறது.

" நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். எனது முக்கியமான, இப்போது காணாமல் போந  பல நண்பர்களை மீண்டும் தொடர்புகொள்ள வைத்ததற்கு.

04 அக்டோபர் 2012

ஒரு தண்ணீர் உடன்பாடு


"மனிதன் என்பவன் தரையில் வாழவேண்டும், கிடைக்கும் நேரத்தில் சிந்திக்கவேண்டும். அது மனிதனின் வேலை. தவளை வேண்டுமானால் தரையில் இருக்கும் நேரம்போக மற்ற நேரத்தில் தண்ணீரில் குதித்து மிதக்கலாம், ஏனென்றால் அதற்கு வேறு வேலை இல்லை. ஆனால் மனிதனாகப் பிறந்தவர்கள்  முதலில் மனிதனுக்கு தேவையான வேலைகளையே செய்து முடிக்காமல், தவளைகளின் வேலைகளைச் செய்வது வீண் வேலை இல்லையா? முதலில் மனிதன் செய்யவேண்டிய  வேலைகளைச் செய்யனும் தம்பிகளா .. அப்புறம் தவளையின் வேலைகளைச் செய்யலாம்,"  ஒரு நண்பனின் தோட்டத்து கிணற்றில் நண்பர்கள்  எல்லோரும் மிதந்துகொண்டிருக்க, கிணற்றின் படிகளில் பத்திரமாக  உட்கார்ந்துகொண்டு நான் உதிர்த்த 'அறிவுரைகள்'  தான் அவை. ஆனாலும் நான் கொஞ்சம் தைரியசாலி, நான் உட்கார்ந்த்திருந்தது எனது கால் தண்ணீரில் படும்படி இருந்த, தண்ணீருக்குள் மேலிருந்த கடைசிப்  படிக்கட்டு. என்னைபோலவே நீச்சல் தெரியாத இன்னொரு நண்பன் இருந்தது இன்னும் உயரமான படிக்கட்டு. அவனுக்கு என் அளவுக்கு தைரியம் பத்தாது.

நீச்சல் தவளைகளின் வேலை என்று நான் ஐயம் திரிபர நிறுவிக்கொண்டிருந்தாலும், அருவிக்குளியல் மனிதர்களுக்கானது என்பதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை, அருவிக்குளியல் வாய்ப்பை எப்பொதும் தவறவிடுவதில்லை.


இப்படியாக இயற்கையுடனான ஒரு உடன்பாட்டை நான் கடைப்பிடித்து வந்தாலும், இயற்கை என் அளவுக்கு உடன்பாட்டை மதிப்பதில்லை என்று எனக்கு மெல்ல மெல்ல தெரியவந்தது. சில அருவிகளை, அதுவும் காட்டுக்குள் இருக்கும் அருவிகளை நீந்தித் தான் அடையவேண்டும் என்ற கட்டாயத்துடன் அமைத்திருந்தது இயற்கை. கொல்லி மலையில் பல கிலோமீட்டர்கள் கீழே இறங்கி அடைந்த ஆகாய கங்கையில் இந்த நிலை. பிறகு சென்ற பர்கூர் காட்டருவியிலும் அதே நிலை, இங்கே சென்னைக்கு அருகிலுல்ல தடாவிலும் கூட.இயற்கையின் சதியை மீண்டும் மீண்டும் சந்தித்தது எனக்கு எதையொ உணர்த்தியது. அந்தக் காலத்து படங்களில் மூன்றுமுறை அடிவாங்கி, வாயில் கசியும் ரத்தத்தை தொட்டுப் பார்த்தபின் வீரம் வரும் ஹீரோ போல உணர்ந்தேன். ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிலைமை. இயற்கையானது எப்போதும் இயங்கும் மகாதர்மத்துக்குக்  கட்டுப்பட்டது. என்னை நீச்சல் அடிக்கவைத்தே தீருவது என்று எங்கும் பரவியிருக்கும் அந்த மகாதர்மம் முடிவு செய்துவிட்டால் அதற்கு ஒரு நோக்கம் இருக்கத் தானே செய்யும். அந்த நோக்கத்தை யாரறிவார்? இயற்கையை அதன் வழியிலேயே எதிர்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

இயற்கையின் சதி


உடனடியாக செயலில் இறங்கினேன். நமக்கு எந்த விஷயம் தெரியவேண்டுமானாலும் முதலில் யாரைக் கேட்பது. ஆம் நான் முதல் செயல் நமது கூகிள் அண்ணாவிடம் கேட்டது தான். கூகிள் என்னை youtube-க்கு அனுப்பி வைத்தது. சிலமணிநேரங்கள் அதில் செலவழித்து கிட்டத்தட்ட ஒரே இரவில் நீச்சலைக் கற்றுக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். இவ்வளவு எளிதான ஒரு விஷயத்தை ஏன் இவ்வளவு நாட்களாக செய்யவில்லை என்ற வியப்பும் உருவாகியது. இதிலும் அந்த மகா தர்மத்தின் விளையாட்டு இருக்கக்கூடுமென உணர்ந்தேன்.

அடுத்த கட்டமாக youtube மூலம் ’கற்றுக்கொண்ட’ வித்தையை ஒரு நீச்சல் குளத்தில் காட்டுவது என்று முடிவு செய்தேன். ஒரு விஷயம் தெரிந்தபின் அதை சந்தேகப்படுவது தவறு என்று தெரிந்திருந்தாலும், காலத்தின் கட்டாயத்தால் நீச்சல் குளத்துக்கு செல்லவேண்டிய சூழல் உருவானது. காலாண்டு விடுமுறை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவனுடன் கூட்டணி அமைத்து நீச்சல்குளம் சென்றேன்.

பல வருடங்களாக நீச்சல் அடித்துவந்தாலும், நான் படித்தறிந்த பல நுணுக்கங்கள் அவனுக்குத் தெரியவில்லை எனபது மிக ஆச்சர்யம் தான். போகும் வழியில் அந்த நுணுக்கங்களை அவனுக்குக் சொல்லிக்கொடுத்தபடியே சென்றேன். அதில் அவ்வப்போது சில சந்தேகங்களையும் கேட்டு அவனது ஆர்வத்தைப் பறைசாற்றிக்கொண்டு வந்தான் அவன். அந்த ஆர்வத்துக்குக் காரணம் வீட்டில் என்ன செய்வதுஎன்று தெரியாமல் இருந்த அவனை நீச்சல் குளம்  கூட்டிச்சென்று வருகிறேன் என்று கொடுத்த வாக்குறுதியா அல்லது உண்மையான ஆர்வமா என்றறியேன். அனால் குளத்தில் இறங்கியவுடன் அவன் சொன்னது "அங்கிள், நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க ஆனால், ரெம்ப ஆழம் போயுடாம, இந்த சுவத்தைப் பிடித்தபடி பண்ணுங்க" என்றான். அவனும் கவனிக்கிறான் போல.

ஆனால் அந்தத் நீச்சல் குளம், youtube போல அந்த அளவுக்கு எளிதல்ல என்று தோன்றியது. நீச்சல் அவ்வளவு எளிதாக வரவில்லை அங்கு. காரில் வந்த  நேரம் முழுவதும் நான் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த அவன் இப்போது பேச ஆரம்பித்தான், நீச்சல் அடிப்பதைப் பற்றி. சிறிது நேரத்தில் அங்கு இருந்த பல சிறுவர்கள் மிக உற்சாகமாக எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர். நேரம் தான்.

அப்புறம் இரு நாட்கள் முயற்சிகளுக்குப் பின் நீச்சல் ஒருமாதிரியாக பிடிபட ஆரம்பித்தது வேறு கதை.ஆனால் நீச்சலை இதுமாதிரியாக ‘பார்த்துக்' கற்றுக்கொள்வதை பலரால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.தண்ணீரில் தள்ளிவிட்டால் தானாக வந்துவிடப்போகிறது என்பது தான் பலரது கருத்து. ஆனால் அது அப்படியில்லை.

நீச்சல் மனித உடலின் ஒரு இயற்கையான செயல்பாடுதான் என்றாலும், மனிதர்கள் எல்லோருமே ஒரே மாதிரி நீச்சல் அடிப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும். அதற்குக் காரணம், பெரும்பாலானவர்கள் தாங்கள் முதலில் குத்துமதிப்பாக கற்றுக்கொண்ட முறையையே மீண்டும் மீண்டும் செய்துவருவது தான். எல்லா கற்றலும் போல இதிலும், உள்நோக்கிய அல்லது வெளிநோக்கிய கற்றல் சாத்தியம். தங்கள் உடலைக் கவனித்து, அதன் இயல்பை உணர்ந்த்து அதைச் செய்வது உள்நோக்கிய கற்றல், அல்லது மற்றவர்களையும் youtube வீடியோ போன்றவற்றை கவனித்து அதை முறையாக பயிற்சி செய்து, அவற்றை நமது உடலின் தசை நினைவிலேற்றும் வெளிநோக்கிய கற்றல். இந்த இரண்டு முறைக்கும் வராமல் தனக்குத் தெரிந்த ஒரே முறையில் நீந்துவது கற்றலில் வராது.

தெரியாது என்று என்று தெரிந்துகொள்வதுதான் அறிதலின் இரண்டாம் நிலை என்று சொல்வார்கள் , அதுதான் முக்கியமான நிலையும் கூட. இந்த இரண்டாம்  நிலைக்கு வந்துவிட்டால் சிலபல முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் மூலம் அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்று விற்பன்னராகிவிடலாம். ஆனால் நீச்சல் கற்றுக்கொள்வதில் ஒரு ஆச்சர்யம் இருக்கிறது. கற்றுக்கொண்ட பிறகுதான் தெரிகிறது, இது நமக்கு முன்னரே தெரியுமென்று. தெரிந்ததை தெரியும் என்று தெரிந்துகொள்ளத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும்.

13 செப்டம்பர் 2012

ஒரு வீட்டுப் பிரச்சனை


கதவைத் திறந்ததும் காருக்குக் கீழிருந்து எட்டிப்பார்த்தது அந்த நாய்க்குட்டி, கண்களில் ஒரு கேள்விக்குறியுடன். புதிதாக ஒரு வீட்டுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் நாய் பார்க்கும் விரோதப் பார்வையோ, அல்லது தனது சொந்தக்காரனைப் பார்த்தவுடன் பார்க்கும் அன்புப் அல்லது அடிமைப் பார்வையோ அல்ல அது. அந்தப் பார்வையில் இருந்தது அப்பழுக்கற்ற கேள்வி மட்டுமே.

அந்த அதிகாலையில்  அந்த நாய்க்குட்டியின் அமைதியைக் குலைத்துவிட்ட குற்றவுணர்வு கொஞ்சமிருந்தாலும், எனக்கு வேறு வழியில்லை. அங்கே தான் நான் சென்றாக வேண்டும். அது எனது வீடு, அதாவது நான் வாடகை தந்து குடியிருக்கும் வீடு. முடிந்தவரை நாயை தொந்தரவு செய்யாமல் வீட்டைத் திறந்து உள்ளே சென்றேன். காருக்குக் கீழிருந்து எட்டிப்பார்த்த நாய் தலையை உள்ளிழுத்துக்கொண்டது.


நான் வீட்டைவிட்டுக் கிளம்பி நான்கு நாட்களாகிவிட்டிருந்தது, நான்கு நாட்களாக நண்பர்களுடன் கர்னாடக காட்டுப்பகுதிகளுக்கு ஒரு பயணம். நான்குநாட்கள் பயணம் முடிந்து அந்த அதிகாலையில் தான் ஊர்திரும்பினேன். இதற்குமுன்பு இந்த நாயைப் பார்த்தமாதிரி ஞாபகமில்லை. இந்த நான்கு நாட்களுக்குள் தான் இந்த நாய் இங்கு வந்திருக்கவேண்டும். எனது வீடும் காரும்தான் நான்கு நாட்களாக அதன் இருப்பிடமாக இருந்ததா, அல்லது இன்று தான் அது அந்த இடத்தைக் கண்டடைந்து இருக்குமா. அந்த போர்டிகொவும் எனது சிவப்பு ஸ்விஃப்ட் காரும் நாய் வசிக்க வசதியான இடம் தான், அதுவும் இந்த மழைக்காலத்தில் மிகவும் கதகதப்பாகவே இருக்கக்கூடும்.

எனது கார் என்று சொல்லிக்கொண்டாலும் அந்தக் கார் ஒரு வங்கியின் கடன் பணத்தில் வாங்கியது. இந்த வருடம் முடிவில்தான் கடன் தவணை முடிகிறது. அத்ன்பின் தான் அது எனக்கு முழு சொந்தம் என்று சொல்ல முடியும். இந்த வீடும் வீடு என எனது நண்பர்களால் அறியப்பட்டு இருக்கிறது. அனால் இதை எனது வீடு என்று சொல்வதில் வீட்டின் சொந்தக்காரருக்கு ஆட்சேபனை  இருக்கக்கூடும். எனினும்  இந்த வீட்டுக்கு நான் வாடகை கொடுப்பதால் எனது வீடு தான் இது. வீட்டுக்காரக்கு சரியென்றால் இந்த வீட்டை வாங்கிவிடலாம் என்ற ஒரு யோசனையும் இருக்கிறது. ஆனால் அதைக் கேட்கபோய் என்னை காலி செய்ய சொல்லிவிட்டால் இது போல ஒரு வீடு அலுவலகம் பக்கத்திலேயே கிடைக்காது என்ற பயம் அந்த யோசனையைத் தடுத்தபடியே உள்ளது. அலுவகம் மாறும்போது கேட்கலாம், காலிசெய்ய சொல்லிவிடுவாரே என்ற பயம் இருக்காது. ஆனால் வேறு ஊருக்கு மாறும்போது இந்த வீட்டைக் கேட்டு என்ன பயன். நானும் வேறு யாருக்காவது வாடகைக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்காரனாக இருப்பதற்கு அவரே வீட்டுக்காராக இருப்பது அந்த வீட்டுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

கார் வாங்கிவிட்டேனே தவிர அதை இந்த ஊரில் ஓட்டுவது அவ்வளவு மகிழ்ச்சியான செயலில்லை. பைக் போதும் இந்த ஊருக்கு. பைக் தான் எனது உற்ற தோழன். இருந்தாலும் கார் ஒரு அவசியத் தேவையாகிவிட்டது. ஏனென்றால் தோழியுடன் பயணிக்க கார் தான் ஒரே வழி. தோழியுடன் பைக்கில் செல்வது இந்த சமுதாயத்துக்கும் அல்லது தோழிக்கும் கூட உவப்பான செயலில்லை. இந்த சமுதாயக் கட்டாயங்கள்தான் கார் விற்பனைக்கு காரணம் என நினைக்கத் தோன்றுகிறது. ஆட்டோவே உரசாமல் செல்ல முடியாத குறுகிய மற்றும் நெரிசல்மிக்க சாலைகள் உள்ள சென்னையில் விலையுயர்ந்த கார்கள் இவ்வளவு விற்பனையாவதன் மூலம் இதை புரிந்துகொள்ளமுடிகிறது.

இவ்வளவு இருந்தாலும், இந்த வீடு அல்லது கார் உன்னுடையதா என்று யாரும்  கேட்டால், சற்றும் யோசிக்காமல் அல்லது சற்றே யோசித்து நான் சொல்லும்  பதில்,ஆம் என்பது  தான். இந்த பின்னணிக் கதைகள் கேட்க அவர்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியாது, கேட்டால் கண்டிப்பாக புரியும். அனால் இதை தெரிந்து அவர்களுக்கு ஆகப் போவது ஏதுமில்லை என்பதால் அவர்களுக்குச் சொல்வதுமில்லை. ஆனால் இந்த  நாய்குட்டிக்கு? அதற்கு இந்த விஷயம் தெரிந்தே ஆகவேண்டுமல்லவா? நான் தான் இந்த வீட்டுக்காரன் என்று அந்த நாய் தெரிந்துகொள்வது மிக்க அவசியம் அல்லவா? அந்த நாய் அங்கு தங்க எனது அனுமதிதான் தேவை என்று அதற்க்குத் தெரியவேண்டுமல்லவா? அந்த நாய்க்குட்டியின் கண்களிலிருந்த கேள்வி அது தானேஅதற்கு எப்படி இதைச் சொல்லி புரியவைக்கப்போகிறேன் என்று யோசித்தபடி அந்த அதிகாலை நேரத்தில் ஒரு குட்டித் தூக்கத்துக்கு இருந்த சாத்தியத்தை பயன்படுத்திக்கொண்டேன்.

பத்துமணிக்கு அலுவலகம் செல்லும்போது காருக்குக்கீழ் மறக்காமல் எட்டிப்பார்க்க அந்த நாய்க்குட்டியைக் காணோம். என்னைப் பார்த்ததும் ஓடியிருக்கலாம். ஆனால் அந்த விஷயத்தை என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, அந்த நாய் சென்றது கூட எனக்குப் பிரச்சனையில்லை. இந்த ஊரில் நம்மைவிட நாய்க்கு பல இடங்கள் எளிதாகக் கிடைக்கும். ஆனால் அந்த நாய் என்ன நினைத்துக்கொண்டு ஓடியிருக்கும் என்றகேள்விதான் என் மனத்தைக்குடைந்தபடியிருந்தது. அதை எப்போதும் அதற்கு புரியவைக்கமுடியாதபடியாகிவிட்டதே என்ற சோகமும்.

இரு நாட்கள் கழித்து ஒரு நடுஇரவில் மழை சத்தம் கேட்டு விழித்தேன். வெளியில் காயும் எனது ஜட்டிகள் ஞாபகம் வந்தது. என் வழக்கப்படி  எல்லா ஜட்டிகளயும் ஒரே நாளில் துவைத்து காயபோடிருந்தேன். நாளை கண்டிப்பாக தேவைப்படும். எனவே உடனடியாக  இறங்கி ஓடி அதை மழையில் நனையாமல் எடுத்தேன். எதேச்சையாக பார்வை கார் பக்கம் திரும்பியதில் நாய்க்குட்டி காருக்கு அடியிலிருந்து எட்டிப்பார்த்தது. அதே  நாய்க்குட்டி.

அந்த நாய்க்குட்டி உண்மையில் ஓடிப்போகவில்லை போல, நான் வழக்கமாக பார்க்கும் நேரத்தில் அது இல்லை என்பதால் அது அந்த வீட்டில் இல்லை என்று சொல்ல முடியாதில்லையா. நான் கூடத்தான் அது பார்க்கும் நேரத்தில் வழக்கமாக அந்த வீட்டில் இல்லை. எது எப்படியிருந்தாலும் ஜட்டியை மழையிலிருந்து பாதுகாத்துவிட்ட திருப்தியுடன் தூங்கச் சென்றேன்.

அப்படியானால் அந்த நாய் அதற்க்குத் தேவைப்படும் நேரத்தில் அங்கு வருகிறது, எனக்குத் தேவைப்படும் நேரத்தில் நான் வருவது போல, எனக்குத் தேவைப்படும் நேரத்தில் எனது காரை நான் எடுப்பது போல. எனவே அந்த வீடும் காரும் எனது என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அந்த நாயுடையதும் என்பது தானே?

இதில் எனக்குப் பிரச்சனை இல்லையென்றாலும் இருந்தாலும் ஒரு கேள்வி என் மனத்தை சுற்றியபடியேயிருந்தது. தனக்கு சொந்தமான வீட்டுக்கு வந்துசெல்லும், அந்தக் காரை அவ்வப்போது எடுக்கும் என்னைப்பற்றி அந்த நாய் என்ன நினைத்துக்கொண்டிருக்கும்?