Unordered List

14 ஏப்ரல் 2017

சாகசம் என்றால்

சாகசம் என்றால்  துப்பறிதலும்,  கடுமையான ஆயுதமும் மற்றும் திட்டமிட்டு தாக்குதலும் இருந்தால் தான் சுவாரஸ்யம். இவை கொஞ்சமும் குறையாமல் இருந்த ஒரு சாகசத்தை நான் சிறுவயதில் செய்வதுண்டு. 

சணல் கயிற்றில் கட்டிய பேப்பரில் இருந்து அந்தப்பொடியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துக்கொள்வதில் துவங்குகிறது அந்த சாகசம். அதை மெல்லிதாக தூவ ஒரு கெட்டியான பேப்பர் அல்லது அட்டையை எடுத்துக்குக்கொள்ளலாம். ஆயுதம் தாயார். இப்போது எதிரியை தேடவேண்டும். 

இதுவரை செய்தது கூட வேறு யாரும் செய்துவிடக்கூடிய செயல் தான், ஆனால் இந்த எதிரி நுழையும் இடங்களைக் கண்டுகொள்ள ஒரு ஒரு சிறுவனால் மட்டும்தான் முடியும்,  எறும்பு நுழையும் வீட்டின் எல்லா மூளை முடுக்குகளும் அவனுக்கு மட்டுமே தெரியும்.

முதலில் எறும்புகளின் ஒரு வரிசையைக் கண்டுகொள்ள வேண்டும். 
கண்டுகொண்ட பின் , கொஞ்சம் கொஞ்சமாக பொடியைத் தூவிக்கொண்டே செல்லவேண்டும். அந்த விஷப்போடி பட்டதும் சிறிது குழம்பி எறும்புகள் வரிசைவிட்டு விலகி சுற்றும். நாம் வரிசையைத் தொடர வேண்டும். தரை, சுவர், ஜன்னல் என பல வழிகளைத் தாண்டி அது அனேகமாக வீட்டுக்கு வெளியே மண்ணில் இருக்கும் ஒரு புற்றை சென்றடையும். 

எறும்புகள் வரிசையாகச் செல்வதை அதன் நல்லியல்பாகச சொல்வதுண்டு. ஆனால் அந்த நல்லியல்பு தான் அதன் புற்றை நமக்கு காட்டிக் கொடுக்கிறது. 

புற்றின் மீது கொஞ்சம் பொடியைக் கொட்டி, ஒரு சிறிய குச்சியை வைத்து கொஞ்சம் உள்ளேயும் இறக்கிவிட்டால் அந்த பணி இனிதே நிறைவடையும். 

சிவப்பாக இருக்கும் எறும்புகள் போடிதூவப்பட்டதால் சம்பல் நிறத்தில் இருக்கும். மரணத்துகமுன் அவற்றின் இன்னொரு நல்லியல்பான சுறுசுறுப்பைக் கைவிட்டு தூக்க கலக்கத்துடன் நடந்து கொண்டிருக்கும். சத்தமில்லாமல் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து முடியும் அழித்தல் பணி அது.

அன்றும் அப்படித்தான் சாகசத்தை ஆரம்பித்திருந்தேன். வீட்டுக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக வரிசை வெளியே சென்றது. நானும் வீட்டைச் சுற்றி வெளியே வந்து  தொடர்ந்தேன். இம்முறை வரிசை மாடிப்படியை ஒட்டியிருந்த ஒரு பயன்பாட்டில் இல்லாத அறையை அடைந்தது. 

எறும்புகளின் வரிசை ஒரு பழைய பலகையின் அடியில் சென்றது. பல சுவர்கள், ஜன்னல்கள் தாண்டி வந்த நமக்கு அந்தப் பலகை ஒரு தடையா என பலகையை நீக்கிய எனக்கு ஒரு அதிச்சி காத்திருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான எறும்புகள். 

அந்த பழைய பலகை வெகு நாட்களாக அங்கு இருந்திருக்கவேண்டும். பலகையின் கீழே குருனையான மண் கொண்டு கட்டப்பட்ட பாளம் பாளமான எறும்பு கோட்டைகள் அங்கே ஏராளமான எறும்புகள். வெள்ளை நிறமான குட்டி எறும்புகள். 

வழக்கமாக அமைதியாக முடியும் பணி அன்று அதிரடியாக ஆனது. எதிர்பாராமல் கிடைத்த அவ்வளவு பெரிய வேட்டையால் பரபரப்பு அடைந்தேன்.

எறும்புகளை கொல்வது வாடிக்கை தான் என்றாலும் அவை வெளியே வந்து நமது வீட்டுக்குள் வருபவை, வெளியே வரும்போது அவை ஆபத்தை எதிர்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் இவை ஆபத்தை எதிர்பார்காதவை.  ஆனால் வீட்டின் கதகதப்பிலும் வசதியிலும் இருந்த அந்த எறும்புகள் என்னை அந்த பலகை நீக்கப்பட்டதை எதிர்பார்க்கவில்லை. 

ஒரு புற்றை எதிர்பார்த்த நானும் அவ்வளவு பெரிய எறும்பு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவ்வளவு எறும்புகளையும் கொல்லத் தேவையான அளவு எறும்பு பொடியும் என கைவசம் இருந்தது. அந்த எதிரிகலைக்  கொல்லத்  தேவையான நியாயமும் என்னிடம் இருந்தது. 

அந்தக் பரபரப்பு  கணம் வெகு நாட்களாக என் நினைவில் இருந்தது. அவ்வளவு பெரிய இரும்புக் கூட்டத்தை பார்த்ததும் உண்மையில் நான் அடைந்தது மகிழ்சியா? எனது நோக்கம் எறும்புகளின் தொல்லையிலிருந்து தப்பிப்பது என்றால் அந்த மகிழ்ச்சியின் பொருள் என்ன.


சமீபத்தில் கவிஞர் இசையின் இந்தக் கவிதையைப் படித்தேன்.


புதிதாக ஒரு கொசுமட்டை வாங்கியதிலிருந்து

நிம்மதியாக இருக்கிறேன்.

கொசு விரட்டிகள்

கொசுக்களை விரட்டி விடுகின்றன.

ஆனால் மட்டை அவைகளை கொன்றுதீர்க்கிறது.

ஒரு கொசு பறந்து போக

நானும் பறந்து போய்

சரியான வாகில் வைத்து ஒரே சாத்து…

இன்பம் என் உள்ளத்தில் "பட்" என்றுதெறிக்கிறது.

" பட்…  பட்…  பட்பட்பட்…."

  இந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு கோடாரி

  ஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து

  "தயை"…  "தயை".. என்று கதறும்.

  கதறலின் மண்டையில் ஓங்கி ஒருபோடு

 " பட்..பட்..பட்பட்…. "  " பட்பட்..பட்"

 பிஸ்டலுக்கு எண்ணெய் போடுவதுபோலே

மட்டையில் மின்சாரம் ஏற்றுகிறேன்.

என் வீட்டின் முன்னே

குளம் போல தண்ணீரைத் தேக்கிவைத்திருக்கிறேன்.

கொசுவீர் !

பிறந்து எழுந்து திரண்டு வருக !


கவிதையின் தலைப்பு "எனது களம்.. எனது ஆட்டம்.. நானே நாயகன்".கவிதையின் கடைசியில் "தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறேன், கொசுவீர், பிறந்து எக்ஷுது திரண்டு வருக" என்ற வரி

என்னால் தண்டனைப் பெறக்கூடிய ஒரு உலகம். என்னிடம் மன்றாடும் ஒரு உலகம், இரக்கமில்லாத ஒரு தண்டனைக் கடவுளாக இருக்கமுடியும் ஒரு உலகத்தை இந்த கொசு மட்டை உருவாக்கித் தருகிறது

05 டிசம்பர் 2015

சென்னை - வரலாறு காணாத மழையில் நான் கண்டவை - 1

சென்னை, போரூர் சிக்னல். 3 டிசம்பர் 2015

"டேய் **.. என்னடா வண்டிய ஓட்டுற” என்று அவன் சொன்னதுதான் தாமதம்

“யேய்..” என்று ஒரு இருபது குரல்கள் அவனை அடக்கின. இதை எதிர்பார்க்காத அந்த குடிமகன் இடம் விட்டு அகன்றான். ஓட்டுனர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இதுபோன்ற அர்ச்சனைகளை ரோட்டோர குடிமகன்களிடமிருந்து அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பெறுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால்  ஓட்டுனருக்கு ஆதரவாக பொதுமக்கள் குரல்கொடுப்பது புதிது.

போரூருக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். எனது ஹன்க் பைக்கில் பயணத்தைத் தொடங்கினேன். எனக்குப் பிடிக்காத ஆற்காடு சாலை தவிர்த்து கிண்டி வழியாகச்செல்லலாம் என அசோக்நகர் நோக்கிச்சென்றேன்.  வடபழனியிலிருந்து அசோக்நகர் செல்லும் சாலை தடுக்கப்பட்டிருந்தது. லக்‌ஷ்மன்ஸ்ருதி சந்திப்பில் கே கே நகர் வழியாக  திரும்பினேன். அந்த சாலையிலும் முழுவதும் தண்ணீர். அங்கிருந்த ஒருவர் சொன்ன யோசனைப்படி வலதுபுறம் திரும்பி ஆற்காடு சாலையில் சேர்ந்தேன்.

ஆற்காடு சாலை முழுவதும் ஆறு போல தண்ணீர். இருந்தாலும் போக்குவரத்து இருந்தது. சில பெரிய கார்களும் பைக்குகளும் மற்றும் அரசுப்பேருந்துகளும் சென்றன.

சென்னைக்கு உயிர் பயத்தைக்காட்டிக்கொண்டிருக்கும் மழையில் பல சாலைகள் மூழ்கிவிட்டன. இங்கு மிகப் பிரபலமாக இருந்த ஓலா போன்ற டாக்சி நிறுவனங்கள் பதுங்கி விட்டன. ஆனால் எதிர்பாராத நாயகனாக அரசுப்பேருந்துகள் இயங்குகின்றன. இதில் ஓலா டாக்சி படகு விடுகிறேன் என்பது சரியான டகால்டி என நினைக்கிறேன். அவர்களின் வேலையான டாக்சியை சேவையை மிகவும் தேவையான நேரத்தில் செய்யாமல் தட்டிக்கழித்துவிட்டு படகு விடுகிறேன் என விளம்பரம் செய்வது என்ன லாஜிக் என்று தெரியவில்லை. ஆனால் அரசுப் பேருந்துகள் ஒரு நாளும் தவறவில்லை. எந்த நிலையிலும் தொடர்ந்து இயங்கிவரும் அரசுப்பேருந்துகள் மீது மக்களுக்கு பெரிய மரியாதை வந்துவிட்டது. அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான் இப்போது மக்கள் மத்தியில் ஹீரோக்கள்.

ஆற்காடு ரோடு பிடிக்காது என்று சொன்னேன் இல்லையா? வட பழனியிலிருந்து போரூர் வரை மிகக் குறுகலான சாலை இது. மிக மோசமாக பராமரிக்கக்படுவதும் இது தான். பல குழிகளையுடைய மோசமான சாலை, அதனால் உருவாகும் போக்குவரத்து நெரிசல், அதனால் உருவாகும் சச்சரவுகள் என எப்போதுமே அந்தச்சாலையில் பயணம் மிக எரிச்சலான பயணமாக இருக்கும். அதனால் சில கிலோமீட்டர்கள் சுற்றினாலும் பரவாயில்லை மாற்று வழிகளில் செல்வது வழக்கம். ஆனால் இன்று வேறு வழியே இல்லை.

சாதாரண நிலையிலேயே இந்தச் சாலையில் செல்ல முடியாது, இதில் தண்ணீர் வடியவேண்டி பல இடங்களில் சாலை வெட்டப்பட்டும் இருந்தது. கண்டிபாக ஆபத்தான பயணம்தான். ஆனால் முன்னால் செல்லும் ஏதாவது வாகனத்தைத் தொடருந்து சென்று விடலாம் என நினைத்து ஒரு காரைத் தொடர்த்தேன்.

நடுச்சலையில் தண்ணீருக்குள் ஒருவர் நின்றிருந்தார். எனக்கு முன்னால் சென்ற கார் டிரைவரிடம் சென்று,“ரெம்ப டீப்பா பள்ளம் இருக்கு சார். லெஃப்ட் ஓரமாப் போங்க” என்றார். அங்கே ஒருவர் நின்று இப்படி என்று காருக்குக் கையைக்காட்டினார். “டூ வீலர். நீங்க ரைட்ல ஏறி போங்க என்று என்னை அனுப்பினார். அங்கும் ஒருவர் எனக்கு வழிகாட்ட ஒருவர் நின்றிருந்தார்.

அப்போதுதான் கவனித்தேன் தண்ணீரில் மூழ்கிய சாலை முழுவதும் இவர்கள் நின்றிருந்தனர்; இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்; கிட்டத்தட்ட ஐந்தடிக்கு ஒருவர். பெரிய பள்ளங்கள், வெட்டப்பட்ட இடங்களில் முக்கியமாக நின்றனர்.மிக பொறுப்புடன் வழிகாட்டினர். பஸ், கார் மற்றும் பைக் எப்படி ஓட்ட முடியும் என்று தெரிந்து சரியாக வழிகாட்டினர். இடையில் நின்ற பைக்குகளைத் தள்ளிச்செல்ல கூட சிலர் உதவிக்கொண்டிருந்தனர்.

சில இடங்களில் லேசான தண்ணீர், பல இடங்களில் மிகச் சவாலான பள்ளங்கள். அப்போது இன்னொன்றையும் கவனித்தேன். அந்த சாலையில் செல்லும்போது வழக்கமாக இருக்கும் ஹார்ன் சத்தம் இல்லை. அந்த சவாலான சேரத்திலும் ஒவ்வொருவரும் மற்றவர் வண்டிகளும் சரியாக வருகிறதா என்று பார்த்தபடியே வந்தனர். முன்னால் செல்பவர், பின்னால் வருபவருக்குத்தேவையான தவவல்களைத்தந்தவிதம் சென்றனர்.

ரோட்டில் நின்றவர்கள் அனைவருமே தன்முனைப்பால் வந்து நின்றவர்கள். எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் மாதிரி தெரியவில்லை. அடிடாஸ் டீசர்ட் மற்றும் ஷார்ட்ஸ் உடன் நின்றவன் என்னப்போல ஒரு  கணிப்பொறிக்காரன் தான். கொட்டும் மழையில் நடுத்தெருவில் தண்ணீருக்குள் நிற்கிறான். உதவி என்பது எங்கோ யாருக்கோ செய்ய முடியவில்லை என்றாலும், பிரச்சனையான சமயத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து பக்கதில் உதவி செய்தாலே அது பெரிய உதவியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.  அந்தந்த பகுதி மக்கள் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு உதவுவதை வெளியே சென்ற அனைவருமே உணர்ந்திருக்கமுடியும்.

எங்கள் பகுதியில் மின்சாரம் வந்தே பல நாட்கள் ஆகிவிடிருந்தது. செல்போன் சிக்னல் இல்லை.  மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் எனப் பேசிப்பார்த்தேன்.

என்னைப்பார்த்ததும் பக்கத்து வீட்டு தாத்தா மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டார். குழந்தைகள் ரோட்டிலிருந்த தண்ணீரில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன. இன்னும் எவ்வளவு மழை வந்தால் நம் தெருவுக்கு போட் வரும் என்று  குழந்தை அவரைக் கேட்டுக்கொண்டிருந்தது. இது ஏரித்தண்ணீர் தானே, அப்படின்னா மீன் இருக்கனுமே அதெல்லாம் எங்க என்று பக்கத்து வீட்டு பெண் கேட்டுக்கொண்டிருந்தார். பிரச்சனையை புன்ன்கையால் எதிர்கொள்வது இதுதானா?

தினமும் தேவைப்படும் காய்கறி, பால் போன்ற பொருட்களை தெருவில் இருக்கும் ஒருவரே அனைவருக்கும் வாங்கி வந்து விடுகிறார். மின்சாரம் இல்லாததான் டேங்கில் யாருக்கும் தண்ணீர் இல்லை. பிரச்சனை இல்லை; எங்கள் வீட்டு கிணற்றில் இருந்து பக்கத்து வீட்டு மக்களும் எடுத்துக்கொள்கிறார்கள். தொடர் மழை என்பதால் தண்ணீர் பக்கத்திலேயே கிடைப்பது அதை எளிதாக்குகிறது. பள்ளி அலுவலகம் விடுமுறை என்பதால் பயணம் செய்யத்தேவையில்லை. எட்டு மணிக்கெல்லாம் மக்கள் தூங்கி சீக்கிரம் எழ பழகிவிட்டனர்.

பக்கத்திலிருக்கும் நண்பர்களையும் சந்தித்தேன். ஒரு நாள் முழுவதும் பேசியபின் ஆச்சர்யமாக இருந்தது. வழக்கமாக மக்கள் பேசும் திமுக/அதிமுக அரசியல், சினிமா அரசியல் ஏதுமில்லாமல் இவ்வளவு நேரம் மக்களிடம் பேசமுடியும் என்பதே ஆச்சரியமாக இருந்தது. மக்களிடம் இருந்த எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் எங்கே போனது என யோசித்தேன். பல வசதிகள் குறைந்தது போல டிவி மற்றும் செய்தித்தாளும் அங்கு கிடைக்கவில்லை, இது தான் காரணமா என முடிவாகத் தெரியவில்லை.

16 ஜூன் 2015

அவருக்கு என்ன பிரச்சனை?

"அவரா, நல்ல மனுஷன். பாவம். ச்சு" என்றார்.

எனக்கே ஏன் அவரைப்பற்றி கேட்டோம் என்று ஆகிவிட்டது. "அவருக்கு என்ன பிரச்சனை?" என்றேன்.

"பிரச்னையல்லாம் ஏதும் இல்லை. ரெம்ப நல்ல மனுஷன்" என்றார். இந்தமுறை அவர் முகபாவம் இன்னும் பரிவோடும் சோகமாகவும் இருந்தது.  

சரி பேச்சை மாற்றலாம் என்று நினைத்து

"அவர் தம்பியும் அந்த ஊர்ல தான் இருக்கார், அவர தெரியுமா " என்றேன்

"அட அவரா, நல்ல தெரியுமே. சின்னவரு தான், ஆனா ஆளு செம திருடன். ஹா ஹா " என்றார்.

31 மார்ச் 2015

நேர்மையின் விளக்கம் - உதவி கேப்டன் கோலி

[சும்மா காமெடிக்கு]

என்னடா திடீர்னு புது போன் என்று கேட்டேன். ஆறு மாதம் முன் தான் அவன் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியிருந்தான்.

"இது டிஸ்ப்ளே பார் அஞ்சு இஞ்ச்சு" என்றான்.

"அப்போ பழைய போன்?"

"அதுவும் 5 இன்ச் தான். ஆனா இது நெட் கனெக்ட் பண்ணலாம்"

"பழசுல?"

"அதுலையும் பண்ணலாம் டா.. ஆனா இது ஆண்ட்ராய்ட்" 

"அப்படியா.. அப்போ ஏற்கனவே இருக்கிற போன் ஆண்ட்ராய்ட் இல்லையா.." என்றேன்.

"அதுவும்  ஆண்ட்ராய்ட் " தான் என்றான்.

"டேய்.....!!!"

கோலியிடம் பேசிய டோனி மாதிரி ஆகிப்போச்சு என் நிலைமை.

ஆஸ்திரேலியவுக்கு எதிரான காலிறுதிக்கு முன் ஒரு அணி ஆலோசனை நடந்திருக்கிறது. ஒன் டவுன் முக்கியமான இடம். யாரவது நன்றாக விளையாடுபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சொல்லியிருகிறார் தோணி.

அதற்கு  நான் ஒன் டவுன் தான் இறங்குவேன். மற்ற இடங்களில் விளையாட மாட்டேன் என்று சொல்லிருக்கிறார் கோலி. அதை "நம்பி" தோணியும் அவரை ஒன் டவுன் அனுப்பியிருக்கிறார். ஆனால் உலகமே பார்த்தபடி அங்கும் சொதப்பி விட்டார்.

ஆனால் கோலியின் நேர்மையைப் பாராட்ட வேண்டும்.

"ஆனால் அங்கே விளையாட மாட்டேன் என்று தானே சொன்னார். அதனால் இங்கே விளையாவார்  நீங்கள் நினைத்துக்கொண்டால் அவரா பொறுப்பு"  :)


இதையும் படிங்க: