Unordered List

19 நவம்பர் 2019

Ford vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை

நடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்குகிறார். ஊரே வேடிக்கைப் பார்க்க சாலையோரத்தில் நடக்கிறது இந்தச் சண்டை.

கோபக்கார கென் மைல்ஸ் அப்படி அடிப்பது எதிர்பார்க்கக் கூடியது தான். ஆனால் புகழ்பெற்ற ரேஸ் ஓட்டுனரும் கார் டிசைனருமான ஷெல்பி இப்படி கட்டி சண்டைபோடுவது ஆச்சர்யம்.
ஒரு சிறிய பிரிவுக்குப் பின் மீண்டும் சந்திக்க வரும்  ஷெல்பி மற்றும் திறமையான ரேஸ் ஓட்டுனரான கென் மைல்ஸ் சந்திப்பு இப்படி நடக்கிறது. அவர்களிருவரும் சேர்ந்து உருவாக்கும் ரேஸ் காரின் மேஜிக் இந்த நட்பினால் தான் சாத்தியமாகிறது.

இந்தச் சண்டையை வீட்டின் முன் சேர் போட்டு ரசிக்கும் கென் மைல்ஸ் மனைவி இந்த நட்பைப் புரிந்துகொள்கிறார். வெண்முரசு வாசகர்கள் துரியோதனனன் தன் வலிமையான நண்பர்களுடம் தோள் சேர்க்கும் ஒரு மல்யுத்த தருணத்தைக் கண்டுகொள்கின்றனர்.

கார் என்ற கான்செப்டையே மக்களுக்கு  பிரபலப்படுத்திய போர்ட் நிறுவனம், ரேஸ் உலகில் வெற்றியாளராக இருக்கும் பெராரியை வாங்க முயற்சிக்கும்போது அவமானத்தைச் சந்திக்கிறது. சரியாகச் சொன்னால் அதன் உரிமையாளரான ஹென்றி பொர்ட் 2, தனிப்பட்ட அவமானத்தை உணர்கிறார். அதன் விளைவாக உருவாகிறது பெராரியை வெல்லும் ஒரு ரேஸ் கார் தயாரிக்கும் ப்ராக்ஜெக்ட்.

புகழ்பெற்ற ரேஸ் ஓட்டுனராக இருந்த ஷெல்பியிடம் இந்த திட்டம் கொடுக்கப்படுகிறது. அவர் தனது கார் வடிமைப்பிற்கும் , அந்தக் காரை ரேஸில் ஓட்டுவதற்கும் நம்புவது கெல் மைல்ஸ். 

இந்த வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் போர்ட் நிறுவனம், அந்த நிறுவனத்தில் யாருக்குமே பிடிக்காத கோபக்கார கென் மைல்ஸ்,  அவரைப் புரிந்துகொண்டு சாதனைக்கு துணை நிற்கும் நண்பன் ஷெல்பி. தன் நண்பன் ஷெல்பிக்காக தன்னலம் துறக்கும் கென் மைல்ஸ், இவர்களை சுற்றி நடக்க்கின்றன படத்தின் உச்சகட்ட தருணங்கள். 

துரியோதனனையும் கர்ணனையும் நினைவுபடுத்தத் தக்க இந்தப் பாத்திரங்க்களில் நடித்திருக்கும் மாட் டெமான் மற்றும் க்ரிஸ்டியன் பேல். பல மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்படும் சூப்பர் ஹீரோ படங்களைத் தனியாகவே தாங்கும் மார்க்கெட்  இருக்கும் இவர்கள் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் தாங்கள் ஏன் உலகின் சிறந்த நடிகர்கள் என்பதை சற்றும் மிகையில்லாத நடிப்பால் நிறுபித்திருக்கிறார்கள்.உலகின் மிக பிரபல நிறுவங்கள் மற்றும் பிரபல மனிதர்களைச் சுற்றி நடக்கும் இந்தக் கதை ஒவ்வொருவரின் முக்கியத்துவதை குறைக்காமல் காட்டியியிருக்கிறது. ஒவ்வொருவரும் செய்யும் ஒவ்வொரு செயல்களும் உணர்ச்சிகளும் எப்படி இந்த சாதனை நோக்கி செல்வதில் பங்களிக்கிறது என்பது சுவாரஸ்யம். தமிழ் சினிமாக்களில் காட்டப்படுவது போல கார்பரேட் நிறுவங்கள் சதி செய்வதில்லை, ஆனால் அவற்றில் அரசியலும் சதிகளும் இல்லாமலும் இல்லை. அவை இல்லாமல் பெரிய கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் இல்லை என்று அந்த முரணியக்கத்தை சிறப்பாகக் காட்டுகிறது இந்தப் படம்.

கார் ரேஸ் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கதை தொழில்நுட்பத்திலும் நம்மை அசத்துகிறது. நாமே அந்தக் காரில் இருப்பதுபோல துல்லியமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு செலவு செய்து கட்டப்படும் தியேட்டர்களின் பயன்மதிப்பு இது போன்ற சில படங்க்ளைத் திரையிடுவதுதான். இவற்றை தவறாமல் மிக அருமையான தியேட்டரில் தான் பார்க்கவேண்டும்.

நட்பு,  நகைச்சுவை , தியாகம், கார்பரேட் உலகின் சாதனைகள் மற்றும் சதிகள் எல்லாம் நம்முன் நிகழ்த்தி ஒரு இலக்கியப் படைப்பை வாசித்த திருப்தியையும் அதே நேரத்தில் உச்சகட்ட துடிப்புடன் நடக்கும் கார் ரேஸின் பரபரப்பையும் ஒருங்கே நம்க்குக் கடத்துகிறது இந்த Ford vs Ferrari

2 comments:

in our films angry hero throwing punch dialogues in his boss's face which is not at all possible in real life. in this film irrespective of ones skill or power they maintain a dignity even in tough situations which is very much close to reality. after seeing the film one wonder what our peoples understanding on realism . i never seen such a movie in tamil.

Many of the events in the movie including the fist fight are fictional. Miles won the race for sure. That was a fact.

கருத்துரையிடுக