Unordered List

20 ஏப்ரல் 2024

ஆர்வக்கோளாறு வாக்காளர்களும் privacy இழப்பும்

சமீபத்தில் திருச்சியில் ஒரு கோவிலுக்கு சென்றிருந்தோம். சாமி தரிசனம் செய்யும்போது உள்ளே மொபைல் போன் கொண்டுபோகக்கூடாது என ஒரு அறிவிப்பு. செல்போன் அந்த 10 நிமிடம் வைத்திருக்க ஒரு போனுக்கு 30 ரூபாய், நாங்கள் கொடுத்த 4 போனையும் செங்கல் கட்டிபோல அடுக்கி ஒரு இரும்பு பொந்தில் வைத்தார்.

பார்த்துப் பார்த்து வாங்கிய, curved display இருக்கும் என்னுடைய புது விவோ போனை இப்படி செங்கல் போல இரும்பு பொந்தில் வைக்கிறாரே என சோகம் இருந்தாலும் கூட வந்த நண்பரின் ஐபோனுக்கே அதே ட்ரீட்மெண்ட் என்பது கொஞ்சம் ஆறுதல்.


என்ன கொடுமை இது பேசிக்கொண்டிருந்தோம், இந்த அளவு கூட மக்களின் sensibilityயை நம்ப முடியாதா என..
இது இப்போது ஏன் நினைவுக்கு வருது என்றால்



ஓட்டு போட போனவர்கள் ஓட்டு போடுவதை போட்டோ எடுப்பது, வீடியோ எடுப்பது facebook live போடுவது என செய்யும் விடலைத்தனங்களை பார்க்கும்போது அடுத்த தேர்தலில் இங்கும் ஒரு 30 ரூபாய் செலவு + இரும்பு பெட்டி உரசலுக்குத்தான் நம்ம மக்கள் தயார் செய்கிறார்கள் எனத் தெரிகிறது. ஒரு உரிமை கிடைக்கும்போது அதை முடிந்த அளவு கீழே கொட்டி வீணடிப்பது தான் இது.


ரகசிய ஓட்டுபோடும் முறையை போட்டொ எடுப்பது எந்த வகையிலும் பெருமைக்குறியது அல்ல. அது 100% முட்டாள்தனம்


ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், அல்லது மிரட்டுபவர்களுக்கு எதிராக எந்தக் குரலுமற்ற மக்களுக்கு இருந்த ஒரே பாதுகாப்பு இந்த ரகசிய வாக்கு முறை, இனிமே ஓட்டு போட்டு அதை வீடியோ எடுத்துக்காட்டு என அரசியல்வாதிகள் கேட்கவும் வழி உருவாகிறது. ஓட்டு போடும்போது செல்போன் தடுக்கப்பட்டே ஆகவேண்டும்.


முன்பெல்லாம் ஓட்டு ஸ்லிப் அதற்கு ஒரு க்யூ என்பதெல்லாம் இல்லாமல் செல்போனில் டீடெயில் காட்டி ஸ்டைலாக செல்லும் வசதி வழக்கம்போல நம் மக்களின் ஆர்வக்கோளாரால் பறிபோகிறது.


அரசியல் திருவிழாவில் வெற்றி, தோல்வி, மரியாதையான தோல்வி, வரலாறு எல்லாமே அரசியல் தரப்புக்குத்தான். மக்கள் தரப்புக்கு மிச்சம் இருப்பது இந்தச் சின்ன privacy இதை இழக்கக்கூடாது எந்த காரணத்துக்காகவும்.

19 ஏப்ரல் 2024

ஓட்டு சச்சரவு

ஏழேகால் மணிக்கு நான் சென்றபோது கிட்டத்தட்ட ஏழு பேர் ஓட்டளிக்க வரிசையில் நின்றார்கள், நானும் இணைந்துகொண்டேன், அங்கு ஒரு சின்ன சச்சரவு.

வரிசை நகரவே இல்லை, இன்னும் யாரும் ஓட்டுபோட்டு வெளியே வரவில்லை, என்னானு பாருங்க என முன்னால் நின்றவர் அங்கு நின்ற  போலீஸிடம் முறையிட்டுக்கொண்டிருந்தார். அதானே என்ன லேட்டு என நானும் உரையாடலில் கலந்துகொண்டேன். நாங்கள் நிற்கும்போதே கிட்டத்தட்ட இருபேர் அளவு பெரிதாகியது அந்தக் க்யூ. என்ன சார் இப்படி பண்றாங்களே என க்யூ போலவே கலந்துரையாடலும் பெரிதாகியது.

பின்னர் தான் தெரிந்தது முதலில் சென்ற ஒரு பாட்டியிடம் அடையாள அட்டை இல்லை என விவாதம் உள்ளே நடந்துகொண்டிருந்தது தான் அங்கு இன்னும் வாக்குப்பதிவு ஆரம்பிக்காததற்குக்காரணம் என. பாட்டிக்கும் சட்டத்துக்கும் நடந்த விவாதத்தில் சட்டம் வென்று அடையாள அட்டை வரும்வரை காத்திருக்க சொல்லிவிட்டார்கள்.

வெளியே வந்த பாட்டியைப் பார்த்தபோது சட்டம் இந்த வயதோரிடம் இவ்வளவு கடுமைகாட்டவேண்டியதில்லை எனத்தோன்றியது. வாக்களர் அட்டைக்கு போட்டோ எடுக்கும் அரசு, அதைவைத்தே வருபவர்களை அடையாளம் காணலாம். ஒட்டளிக்க வருபவர்களிடம் இவ்வளவு கடுமை தேவையில்லை.

நல்லவேளையாக அங்கு ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலி இருக்க அங்கு அந்த பாட்டி கம்பீரமாக அமர, அவரை அழைத்துவந்தவர் ஐடி கார்டு எடுக்க வீட்டுக்குச் செல்ல அங்கு ஒரு சமரச நிலை உருவானது.  வீட்டுக்கு சென்றவரிடம் மறுபடி போன் செய்து பீரோவில் இருக்கும் ப்ளூ கலர் பர்சில் இருக்கிறது என கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். உண்மையில் அந்த விவாதத்திலும் இந்த அட்வென்சரிலும் பாட்டிக்கு ஒரு பெருமிதம் இருப்பதாகவே தோன்றியது. சும்மா வந்து ஓட்டுப்போட்டு செல்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது, அதில் மற்றவர்களுக்கு சொல்ல என்ன கதை தான் இருக்கிறது.

நமக்கும் போனதற்கு கொஞ்சம் நேரம் க்யூ நகராதது பற்றி கொஞ்சம் உரையாடல், பாட்டியின் அட்வென்சர் வேடிக்கை பார்த்தது என சின்னச் சின்னச் சுவாரஸ்யங்கள்.

வேறன்ன வேண்டும், அரசியல்வாதிகளின் திருவிழாவான  தேர்தலில் குரலற்ற பொதுமக்களுக்கு கிடைப்பது இதுபோன்ற சின்னச் சின்னத் தருணங்கள் தானே

27 அக்டோபர் 2023

சினிமா என்ற அலையும் அதன் மையமும்

லியோ பற்றிய முந்தைய பதிவைப் பார்த்த ஒரு நண்பர் இது வெறும் சினிமா தானே இதில் எதற்கு அறம் எல்லாம் எதிர்பார்க்கிறீர்கள், அதோடு பழைய படங்களில் insensitive விஷயங்களே இருந்ததில்லையா என்று கேட்டார், நல்ல கேள்வி அது.

சமூகத்தின் அறம் என்பது உருவாகி வருவது. பத்து வருடங்களுக்கு முன் கமெர்ஷியல் படங்களில் மிக இயல்பாக நடந்த பல "insensitive" விஷயங்களை இப்போது அவர்களை வைக்கத் தயங்க வைப்பது மட்டுமல்ல, நம் வாழ்விலேயே நம் முன்னோர்கள் இயல்பென செய்த பல விஷயங்களை, நாமே முன்பு செய்த பல insensitive விஷயங்களை தவறென தெரிந்து அதிலிருந்து இருந்து மாறச் செய்வது தான் சமூகத்தின் முன்னகர்வு. இது ஒரு தொடர் செயல்பாடு.

தனது ஹீரோ செய்தால் எதுவும் தவறல்ல என என நடிகர்களைக்கொண்டாடும் ரசிகர்கள் சொல்வது பற்றி பிரச்சனையில்லை, அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் ஆனால் அவர்கள் எந்த friction இல்லாமல் காலமாற்றத்தோடு மாறியும் விடுவார்கள். ஆனால் இதெல்லாம் தவறல்ல என வெளியில் இருந்து சிந்திப்பவர்கள் நம்பினால் அது அபத்தமாகிவிடும்.

பல வருடங்களுக்கு முன் சிவகாசி படத்தில் பெண்களை உடையை வைத்து விஜய் கிண்டல் செய்யும்போது ரசித்த ரசிகர்களே, பின்னர் அவர் பெண்ணுரிமை பேசுவேன் என சிங்கப்பெண்ணே என்று பாடுவதையும் ஏற்றுக்கொண்டு எந்த பிரச்சனையுமின்ரி ஏற்றுக்கொண்டார்கள், "no means no" என அஜித் சினிமாவில் பேசியதையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அந்த ரசிகர்கள் கஞ்சா வியாபாரத்தை glorify செய்வதும், கடமையைச் செய்யும் போலீஸை கொன்று வீசுவது ஹீரோயிசம் என்று சொல்வதையும், பள்ளிச் சிறுவர்கள் அப்பாவிடம் சிகரெட் அடிக்கும் உரிமை பற்றி பேசுவதும் தவறு என்ற இடத்துக்கு விரைவாகவே வந்துவிடுவார்கள். குழப்பம் அவர்களுக்கு இல்லை.

பொதுதளத்தில் இந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது? உதாரணமாக சில வருடங்களுக்கு முன் வனவிலங்கைக்கொல்வது ஹீரோயுசம் என்ற நிலையில் இருந்து இப்போது அதைக் காப்பது ஹீரோயுசம் என்று சமூகம் மாறுவது எங்கே? இலக்கியம், பத்திரிகைகள், சிந்தனையாளர்கள் அனைவருக்கும் இதில் பங்குண்டு.

இதைப்பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதிய கடிதம் இப்படி முடிந்திருந்தது.

//சின்ன வட்டத்தில் பேசப்படுகிறது என்று சொல்லப்படும் இந்த இலக்கியம் தான் தான் பொதுவெளியில் இந்த விழுமியங்களை கொண்டு சேர்க்கிறது என்று நினைக்கிறேன். இலக்கியம் சின்ன குமிழி அல்ல அது சிறிய சுழல். இந்தச் சுழலே இருந்தாலும் அதுவே சமூக ஏற்பு என்ற பெரும் அலைகளை உருவாக்குகின்றது என்று தோன்றுகிறது.///

-----

2021 ல் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வந்த என் கடிதம் இது

அன்புள்ள ஜெ,

சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் ஒரு இலக்கிய உலக சர்ச்சையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் நினைத்தோம். இந்த இலக்கிய விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கும் இதே சமயத்தில் தான் சினிமாவும் அரசியல் சர்ச்சைகளும் மாபெரும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கின்றன.

இணையத்தில் ஒரு சின்ன குமிழியில் ‘சிலர்’ இந்த இலக்கியம் முக்கியமானதாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அதே இணையத்தில் மாபெரும் அலைகளாக சினிமாவும் அரசியலும் ட்ரென்ட் ஆகிக்கொண்டிருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.



இப்போது டி 23 ஆட்கொல்லி புலி பற்றிய செய்தி வந்திருக்கின்றது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த நீலகிரிப் பகுதியில் மட்டும் மூன்று புலிகள் இதே மனிதர்களைத் தாக்கிய காரணத்துக்குக்கான சட்டப்படி சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றன. அந்தப் புலி கொல்லப்படாமல் உயிரோடு பிடிக்கப்பட்டது பற்றி இன்று பொதுவெளியில் மகிழ்ச்சி தெரிகிறது.

அதே சமயம் புலி, சிங்கம் யானைகளை கொன்றால் வீரம் என்ற நிலையில் இருந்து சமூகம் இப்படி மாறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி. புலிகளைக் கொல்லும் புலிமுருகன் மாஸ் வெற்றிகரமான என்ற சினிமா கூட சமீபத்தில் தான் வந்திருந்தது. அந்த நிலையில் இருந்து பொதுச்சமூகம் மாறுவது ஆச்சர்யமளிப்பது.

சில வருடங்களுக்கு முன் நம் விஷ்ணுபுர விழாவில் வெளியிட்ட, ஜேனிஸ் பரியட் அவர்களிடன் சிறுகதைத் தொகுப்பான “நிலத்தில் படகுகள்” புத்தகத்தில் ஒரு கதை “ஆகாய சமாதிகள்”, இதைப் போன்ற ஆட்கொல்லி புலியைப் பற்றியது. அந்தக் கதையை நான் தமிழில் மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்திருந்தது. காட்டோடு இயைந்த வாழ்வில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு ஆட்கொல்லி புலி கொல்லப்படுவதின் துயரம் அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும்.

வெண்முரசில் கர்ணன் அறிமுகப்படுத்தப்படும்போது வரும் ஒரு காட்சியும் இன்றும் என் நினைவில் இருக்கின்றது. கர்ணன் பல சிங்களோடு சண்டையிட்டு அவரது வீரம் நிறுவப்படும் காட்சியில் ஒரு சிங்கம் கூட கொல்லப்படுவதில்லை. சிங்கத்தோடு சண்டையிடுகிறான், வெல்கிறான் ஆனால் அதை அவன் கொல்லமாட்டான் என்பதில் வீரமும் அதே சமயம் பொறுப்புணர்வும் தெரிகின்றது.

சின்ன வட்டத்தில் பேசப்படுகிறது என்று சொல்லப்படும் இந்த இலக்கியம் தான் தான் பொதுவெளியில் இந்த விழுமியங்களை கொண்டு சேர்க்கிறது என்று நினைக்கிறேன். இலக்கியம் சின்ன குமிழி அல்ல அது சிறிய சுழல். இந்தச் சுழலே இருந்தாலும் அதுவே சமூக ஏற்பு என்ற பெரும் அலைகளை உருவாக்குகின்றது என்று தோன்றுகிறது.


24 அக்டோபர் 2023

லியோ

லியோ படத்தின் கடைசி காட்சியில் சண்டை எல்லாம் முடிந்தபின், இங்கு நடந்தது வீட்டில் சொல்லிவிடவேண்டாம் என தனது மகனிடம் கேட்டுக்கொள்கிறார் பார்த்திபன், அப்படினா நான் சிகரெட் அடிப்பதை வீட்டில் சொல்லக்கூடாது என 18 வயது நிரம்பாத ஸ்கூல் படிக்கும் அவரது மகன் பார்த்திபனை நேராகப் பார்த்து தைரியமாகச் சொல்கிறான். மகன்கள் அப்பாவுக்கு பயப்படுவது அவரது செல்வத்தாலோ பலத்தாலோ அல்ல.


இது தகப்பனின் அவல நிலை, ஒரு கணத்த மவுனம் தியேட்டரில் இருந்திருக்கவேண்டும், ஆனால் தியேட்டரில் சிரிப்பலை, இங்கு இந்தப் படம் தோல்வியடைகிறது.

படத்தில் ஆரம்பக் காட்சியில் ஸ்கூலுக்கு மொபைல் கொண்டுபோவதையே கில்டி பீலிங்குடன் ப்ளீஸ் என கேட்கும் அந்த பள்ளி சிறுவன், கடைசியில் தான் சிகெரெட் குடிப்பேன் என அதே தகப்பனிடம் சொல்வதும், அதை கேட்கும் தகுதி உனக்கு இல்லை, அதோடு அம்மாவிடம் சொல்லாதே என சொல்வதும். அதை தட்டிக்கேட்கும் அற நிலையை ஹீரோ இழப்பதும் இந்த படத்தில் பயணத்தில் நிகழ்கிறது.


ஆனால் இந்த அவல நிலையை உணராமல் அப்பாவி ரசிகர்கள் கைதட்டுவது இந்தப் படம் சொல்லப்பட்டதில் இருக்கும் பிரச்சனையைக் காட்டுகிறது.

போதைமருந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவன் இப்போது அதை எந்த விலைகொடுத்தாலும் மறைத்து குடும்பத்துடன் வாழ நினைப்பது ஒரு நல்ல லைன் தான், ஆனால் இந்தப் படம் அந்த போதை உலகத்தைக்காட்டும்போது அதை ஹீரோயிசமாகக் காட்டியதில் லாஜிக் மற்றும் அறம் இரண்டிலுமே தவறிழைக்கிறது.



ஹீரோவுக்கு ஓபனிங் சாங் சண்டை இல்லாமல் தொடங்குவது நல்லது தான், ஆனால் அப்படி தொடங்கி, அவர் போதை வியாபாரத்தில் இருக்கும்போது "நான் ரெடி தான் வரவா" என பாடல் வைப்பது எவ்வளவு பெரிய அபத்தம். அங்கு அப்பாவிகளைக் கொல்வது போலீஸைக் கொல்வது எல்லாம் அநிருத்தின் பில்ட் அப் இசையோடு வருவது எல்லாம் லைன் மொத்தமான மிஸ் ஆகும் இடங்கள்.

இந்த பில்ட்-அப் பாட்டு பார்திபனுக்கு வைத்து, போதை கும்பல் வாழ்க்கையை ஒரு கில்டி பிண்ணனி போல வைத்திருந்தால் இந்தப் படம் இன்னுமே அறத்தை மீறாமலும் லாஜிக்லாகவும் இருந்திருக்கும்.

கதைப்படி லியோ என்பது ஹீரோ மறக்க நினைக்கும், அறுவருக்கும் கடந்தகாலம், அதுவும் இதே படத்தில் சொல்லபடுகிறது. எப்படி?

ட்ரெயிலரில் வந்த தே** வசனம் அதைத்தான் காட்டுகிறது, தனது கடந்தகால வெர்ஷனை உண்மைலேயே வெறுக்கிறான் பார்த்திபன். அது பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டிருந்தால் கடைசிக் காட்சியில் பள்ளிச்சிறுவன் சிகரெட் அடிப்பேன் என்றுசொல்லும்போது அதன் தீவிரம் கடத்தப்பட்டுருக்கும்.

குற்றவாழ்க்கையை தவறெனெத்தெரியாமல் உள்ளே இருபவர்கள், ஏதோ ஒரு கணத்தில் ஒரு நிகழ்வில் இதுவரை தான் காணத்தவறிய அதன் பாதிப்பைப் பற்றி, தெரிந்து அந்த குற்ரத்தில் இருந்து வெளியே வருவது என்பது ஒரு இயல்பான விஷயமாக இருந்திருக்கும். ஆனால் அதைச் செய்யாமல்,

குற்றப்பிண்னனியை, கஞ்சா வியாபாரத்தைக் கொண்டாடுவது அங்கு பில்டப் காட்சிகளிளும், இசையும் நரேஷனை நேரெதிராகக் கொண்டுசெல்கின்றன. கஞ்சா வியாபாரத்தைக் கொண்டாடிக் கொழுத்தும் லியோ அதன் கொடுமை பற்றி எந்த நிகழ்வும் இல்லாமல், தன் குடும்ப பூசல்களால் வெளிவருவதுபோல காட்டினால், நாளை அவர் காஷ்மீரில் கஞ்சா வியாபாரம் ஆரம்பிக்கமாட்டாரா என்ற மாதிரி இந்த நரேஷன் கொண்டு செல்வது தான் பிரச்சனை

செம ஸ்மார்ட்டான விஜய், டெக்னிகலான சண்டைகள் எல்லாம் இருந்தும் இது கனெக்ட் ஆகாதது இதனால் தான்.

தான் மறக்க நினைக்கும் போதைஉலக பிண்ணனிக்கு தன் பள்ளியில் படிக்கும் மகன் சிகரெட் மூலம் செல்வதை தடுக்க பார்க்கும் கையறு நிலையில் இருக்கும் பார்த்திபனின் கதை இது.

இந்தப் படத்தின் தலைப்பு லியோ என்று சொன்னபோதே. இது லியோ அல்ல பார்திபன் என திரும்ப எழுதப்பட்டிருக்க வேண்டும்.


17 அக்டோபர் 2023

TTF வாசனும் சட்டங்களும்

பொதுவாக தீவிரவாத தாக்குதல் நடக்கும்போது ஒரு வாதம் வைக்கப்படும், அமெரிக்காவில் தீவிரவாதிகளால் கொல்லப்படுபவர்ககளை விட ரோடு ஆக்ஸிடெண்டால் இறப்பவர்கள் அதிகம், ஆனால் தீவிரவாதத்துக்கு கொடுக்கப்படும் விளம்பரமே பரபரப்புக்க்குக் காரணம் அதை பெருசா எடுத்துக்கூடாது என, ஆனால் அது அப்படி பார்க்கப்படக்கூடாது


இங்கு எண்ணிக்கையை விட செயல் தான் பிரச்சனை.

இங்கு ஓட்டப்படும் பைக்களில் சில வளர்ந்தநாடுகளுக்கு சமமான எஞ்சின் இருக்கலாம், ஆனால் நமது சாலைகள் வேறுமாதிரியானவை. சமீபத்தில் ஏதாவது டூவீலர் ஷோரூம் போயிருந்தால் ஒன்று கவனிக்கலாம், இப்போது பைக் விட ஸ்கூட்டர்கள் அதிகம் விற்பனையாகின்றன.

நம் சாலைகளில் கவனித்தால் ஸ்கூட்டர்கள் தான் அதிகம். குடும்பப்பெண்கள் குழன்தைளை பள்ளியில் விடவும், சாப்பாட்டு பையுடன் ஆபீஸுக்கி செல்லும் ஆட்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில், பவுர்புல் பைக், அதிரடி வேகம் என்பது பெரும் ஆபத்து. சாலையில் பொருப்புடம் இருப்பதும், எளிவர்களுக்கு இடம் அளிப்பதுமே இங்கு இந்த மக்களை இயங்கச்செய்யும்.

ஒருமுறை பாண்டிச்சேரியில் யு டர்ன் எடுக்கமுயன்ற ஒரு ஸ்கூட்டியை அதிவேகமாக வந்த ஒரு 200cc பைக் நடுவில் மோதி இரண்டாக உடைந்ததை நேரடியாகப் பார்த்தேன். அந்தப் பெண் என்ன ஆகியிருப்பார் என யோசித்துக்கொள்ளுங்கள். அந்தப் பெண் மீதும் தவறிருக்கலாம், ஆனால் அது ஊருக்குள் இருக்கும் சின்ன சாலை, அதில் அந்த பெண்ணுக்கு அது நடந்திருக்கூடாது

இதில் என்ன சட்டம் சார் மீறப்படுது என கேட்பது ஒருவிதமான ignorant மனநிலை. இண்டெர் நெட் முதலில் வந்தபோது அதற்கான சட்டங்கள் உருவாக்கப்படும் முன்னர் குற்றஙகளே நடக்கவில்லை என்று சொல்வதுபோன்றது அது.

புதிய விஷயங்கள் இறக்குமதிசெய்யப்பட்ட பின்னர் மெதுவாகவே அதற்கான சட்டங்கள் உருவாகும். அதுவரை நம்மை காப்பது ஒரு பொது அறமும், common senseம்

மிக எளிதாக அன்லிமிடடட் பபேயில் ஒருவர் ஒரு கிலோ ஐஸ்கீரீம் சாப்பிடுவதைத் தடுக்க எந்த சட்டமும் இல்லை, ஆனால் அப்படி ஒருவர் செய்வது மொத்த ஸிஸ்டத்தையும் குலைக்கும்.

அரசு சாலைகளை சரியாக மெயிண்டெயின் செய்யவில்லை என்பது சரியான தனி குற்றச்சாட்டு. அதை தனியாக டீல் செய்யவேண்டும்.

சில நாட்கள் முன், பாலகுமாரனை முன்வைத்து எழுதியது இதற்கு இப்போது நினைவுக்கு வருகிறது

---

ஒரு நண்பர் கேட்டார் என வீட்டில் பாலகுமாரன் புத்தகங்கள் எங்கே என தேடினால் பந்தயப்புறா கிடைத்தது.

அதில் ஒரு சம்பவம்

இன்று ஆக்டிவா உருவாக்கிய புரட்சியால், ஸ்கூட்டர்கள் நிறைய வந்து பெண்கள் பெரும்பாலும் எளிதாக வேலைக்குப் போக, குழந்தைகளை பள்ளிகளுக்கு விட என இயல்பான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இருந்தாலும் இன்றும் பெண்கள் ஸ்கூட்டர், கார் ஓட்டுவதைப் பற்றி கிண்டகளும் ஜோக்களும் நிறையவே இருக்கின்றன.

அப்படியென்றால் முதன்முதலில் மெபெட் வந்தகாலத்தில் எப்படி இருந்திருக்கும், அந்தக் காலத்தில் அதை ஓட்டிய பெண்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். எவ்வளவு பயம் இருந்திருக்கும், அதை இந்தக் கதையில் பாலகுமாரன் அவருக்கே உரிய இயல்பான நடையில் இறன்கி அடிக்க சொல்லியிருக்கிறார். வழக்கம் போல ஒரு பாலகுமாரன் ஸ்டைல் பீல் குட் நாவல்



நான் கார் ஓட்டப்பழகும்போது ஒருமுறை கார் ஆப் ஆக, நான் லேசா டென்ஷாகியசமயம் என் ட்ரெயினர் சொன்னது, சார், எவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாலும் கார் என இருந்தால் ஆப் ஆகத்தான் செய்யும், சின்னத் சின்னத் தவறுகள் நடக்கத்தான் செய்யும் அதை காட்டிக்காம டென்ஷனாகாம சமாளிக்கிறதுல தான் எக்ஸ்பீயன்ஸ் இருக்கு என.

--

இந்த பக்கத்தை வாசிக்கும்போது அது நினைவுக்கு வந்தது

ரோட்டில் ஓட்ட தயங்கும்/பயப்படும் பெண்களுக்கான பாலகுமாரன் அட்வைஸ் - "சர்தான் போடா"