Unordered List

27 ஜூன் 2012

ஒவ்வொரு நொடியும் ஹீரோ..

எல்லா கண்களும் அவனைப் பார்க்கின்றன. அவனை விரும்புபவர் பலர், அவன் பலரால் விரும்பப்படுவதாலேயே அவனை வெறுப்பவர்கள் சிலர். அவன் செய்யும் சாதனைகள் வரலாகின்றன. செய்யத்தவறிய செயல்கள் வசையாகின்றன. சிறு தவறும் கடுமையான விளைவுகளை உருவாக்குகின்றன  எப்படியோ எல்லாருக்கும் அவனைப் பற்றி சொல்ல ஏதாவது இருக்கிறது. அவனே ஒரு ஹீரோ.
 
போர்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அப்படியான ஒரு ஹீரோ.
 
அரங்கில் விளையாடும் அத்தனை பேரில், தன்மீதுதான் அதிகமான கவனம் உள்ளது என்பது அவருக்கு எப்போதுமே தெரிந்திருக்கிறது. அந்தக் கவனத்தை எந்தவித போலி அடக்கமும் இன்றி  அவர் மிக விரும்பி ஏற்றுக்கொள்கிறார் என்று எனக்குத் தெரிகிறது, அதுவே அவர் மீது அதிகமான மரியாதையைத் தருகிறது.
 
டிவியில் அவரைப் பார்ப்பது நல்ல பொழுதுபோக்கு.தலையலங்காரம் உட்பட தன் தோற்றத்துக்குத் தரும் கவனம், தான் சம்பத்தப் பட்ட முக்கிய தருணங்களில் அவர் முகத்தில் வரும் அபாரமான உணர்சிகளும் அதை அதிகப் படுத்தும்.  கோல் வாய்ப்பை தவறவிடும் சமயங்களில் ரொனால்டோவின் முகபாவம் ஒரு மூன்று மணிநேர சோக சினிமா கொடுக்கும் சோகத்தை நமக்குக் கொடுத்துவிடும்.
 
டிவி கேமராக்கள் எப்போதும் அவரை விட்டு விலகுவதில்லை. அவரும் தான் கோல் போட்டபின் கேமரா எங்கிருந்தாலும் தேடி அதன் முன் ஏதாவது சொல்லத் தவறுவதில்லை.
 
வெற்றியோ தோல்வியோ, ஒவ்வொரு நொடியும் கவனத்தைத் தன்னிடம் வைத்திருக்கும் ஹீரோ நம்ம ரொனால்டோ.
 
இன்று மிக நேர்த்தியான அணியான ஸ்பெயின் அணியை எதிர்த்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றிபெற எனது வாழ்த்துக்களும், எதிர்பார்ப்பும்.
 
Euro Cup 2012: Portugal vs Spain- Semi-final
27-Jul-2012