Unordered List

18 அக்டோபர் 2014

மழை கவனிக்க வேண்டிய விஷயங்கள் மூன்று

சென்ற வியாழக்கிழமை இரவு, துணிகளை துவைத்துக் காயப்போட்டிருந்தேன், இரவில் துவைத்ததால் கொஞ்சம் அவசரமாகத்தான். இந்த மழை என்ன செய்திருந்தது தெரியுமா, நான் சரியாகத்துவைத்திருக்க மாட்டேன் என நினைத்துக்கொண்டு மொட்டைமாடியில் காயப்போட்டிருந்த துணிகளை மீண்டும் துவைத்திருந்தது. நல்ல வேளையாக காலையில் அடித்த வெயிலில் ஒன்பது மணிக்கெல்லம் காய்ந்து விட்டது, எனவே எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லாமல் போனது. இருந்தாலும் மழைக்கு ஏனிந்த தேவையில்லாத வேலை.

அப்படிதான் ஒருநாள், முடிவெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். முடிவெட்டிக்கொண்டு வீட்டுக்குப் போனால் குளிக்க வேண்டும் என எனக்குத்தெரியாதா என்ன? அதற்குள் அவசரப்பட்டு தலையை நனைத்து பைக்கில் வரும்போதே குளிக்க வைத்து விட்டது. மழைக்கு ஏன் இந்த அவசர வேலை.

இதுவாவது பரவாயில்லை, இன்று காலை மீன் வாங்கி வரலாம் என்று கிளம்பினேன். எங்கோ சென்று ஒளிந்து கொண்டிருந்தது இந்த மழை. கையில் மீன்களுடன் திரும்பும்போது சொல்லிவைதது போல வந்து விட்டது, அவ்வளவு தண்ணீருடன். அட ஆர்வக்கோளாரே என்று நினைத்துக்கொண்டேன். நான் கையில் வைத்திருந்தது கடல் மீன், அது இந்த மழைத்தண்ணீரில் நீந்த முடியுமா என்ன? அதுவும் வெட்டப்பட்ட மீன் எந்த ஊரிலாவது நீந்துமா. எனக்கு உதவி செய்ய நினைப்பது சரிதான், ஆனால் நான் மீனை நீந்தவைக்க வாங்கிச்செல்கிறேனா அல்லது சாப்பிடவா எனறு என்னைக்கேட்டால் சொல்ல மாட்டேனா என்ன? இதைக்கூட கவனிக்க முடியாமல் அப்படி என்ன ஆர்வக்கோளாரு என்று தான் கேட்கிறேன்.