Unordered List

10 மார்ச் 2012

தகுதியானவர் தானா இந்த டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சாப்பெல் சமீபத்தில் ஒரு தத்துவ முத்தை உதிர்த்தார். அதாவது "இந்தியர்களுக்கு தலைமைப் பண்பு என்பதே இல்லை. யார் என்ன சொன்னாலும் தலையாட்டும்படி அவர்களை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதுவே அவர்களின் தோல்விகளுக்குக் காரணம்." என்பதே அது.

அவருக்கு எப்படி இந்த மனப்பதிவு உருவானது என்று யோசித்தபொழுது, தான் பார்த்த டிராவிட் ஒருவரை வைத்து மொத்த இந்தியாவையும் மதிப்பிட்டு விட்டாரோ என்று நினைக்கத் தான் தோன்றுகிறது.


டிராவிட்டின் திறமை பற்றியோ, பல முக்கிய விளையாட்டுகளில் அவரது பங்களிப்பு பற்றியோ நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாகப் பெருமைப்படக்கூடிய ஒரு பங்களிப்புதான் அது. ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரது இடம் என்ன?

கிரிக்கெட் விளையாட்டில் அவரது முழுப் பங்களிப்பை ஆராயும்பொழுது, அவரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தபொழுது என்ன செய்தார் என்பதையும், அது இந்திய அணிக்கு நன்மை பயத்ததா எனபதையும் ஆராயாமல் இருக்க முடியாது.

பிக் த்ரீ சொல்லப்படும் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் மூவருமே இந்திய அணி வரலாற்றில் முக்கியமானவர்கள். இம்மூவரிடமுமே அணித் தலைமை மாறி மாறி வந்ததுண்டு. அணித் தலைவராக இல்லாத காலத்தில் கூட சச்சினின் கருத்து முக்கிய முடிவுகளில் கேட்கப்படுவதுண்டு என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

சச்சின் தலைவராக இருந்தபொழுது கங்குலி மற்றும் டிராவிட்டின் வளர்ச்சிக்கு அவரது ஆதரவு இருந்தது. உண்மையில் டோனி அணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்டக் கூட சச்சினின் பங்களிப்பு இருந்தது.

கங்குலி தலைவராக இருந்தபொழுதும் அவர் அணிக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தார். சின்னச் சின்ன சச்சரவவுகள் இருந்தபோதிலும். இந்திய அணியின் நலன்களுக்காக பல சர்ச்சைகளில் கங்குலி சிக்கினாலும், அவையெல்லாம் இந்திய அணிக்ககாகத் தான் என்பதால் ரசிகர்களுக்கு அவரது அந்தச் செயல்பாடுகள் மகிழ்ச்சியே அளித்தன.

ஆனால் டிராவிட் வசம் அதிகாரம் வந்துடனேயே, சச்சின் மற்றும் கங்குலிக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாக்கப் பட்டது. சச்சின் இருநூறு அடிக்கக் கூடாது என்பதற்காகவே டிக்ளேர் செய்த காமெடி எல்லாம் நடந்தது.

இவர்கள் ஒருவர் மட்டுமேல்லாமல் மொத்தமாக இந்திய அணியே மிக நம்பிக்கையற்ற நிலையை அடைந்தது. இந்திய அணியை ஒழிக்கும் நோக்கத்துடன் வந்தோரோ என நாம் நினைக்கும் சாப்பெல் செய்த அனைத்து செயல்களுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியவர் டிராவிட். சச்சின் மற்றும் கங்குலியை ஓரம்கட்டும் தன் தனிப்பட்ட நோக்க்கதுக்காக அணியின் நலன்களைக் கூட பலியிட்டவர் என்ற குற்றச்சாட்டும் அவர்மீது உண்டு.


திறமை மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமே அளவுகோல்கள் என்றால் டிராவிட் ஒரு திறமையாக வீரர் தான். ஆனால் ஒரு மூத்த வீரர் என்றமுறையில் தன் தனிப்பட்ட விளையாட்டு மட்டுமல்லாமல் அணியின் வளர்ச்சிக்கும் உதவவேண்டும் என்பது எதிர்பார்ப்பு என்றால், டிராவிட்டின் பங்கு நிச்சயம் கேள்விக்குரியதே.



08 மார்ச் 2012

தடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி

மெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்.

மெட்ரோ ரயில் திட்டத்தால் என்னென்ன பலன்கள் வரப்போகிறதோ அது வந்தபின்தான் தெரியும். ஆனால் இந்தத் திட்டம் இதுவரை பல முக்கிய சாலைகளில் வெற்றிகரமாக கடும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கியுள்ளது. இந்தநிலையில் அண்ணாசாலை ஒருவழிச் சாலையாக மாறப்போகிறது என்ற அறிவிப்பு வந்தது. இதுவும் இன்னொரு கடுமையான நெரிசலை உருவாக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வமும் நமக்கு இருந்தது.






மாற்றத்துக்கு முன் GB Road சந்திப்பு

ஆனால் உண்மையில் இந்த மாற்றத்தால் இந்தப்பகுதிகளில் வாகன நெருக்கடி பெருமளவு குறைந்துள்ளது என்பதே மக்கள் கருத்து . புதிய முறைப்படி பல சிக்னல்கள் எடுக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட சிக்னல் நிறுத்தங்களே இல்லாமல் பயணம் செய்வது உணர்வே கிடைக்கிறது. ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சிறப்பாக செய்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிறிய தூரத்தைக் கடப்பதற்குக்கூட பெரிய சாலைகளைச் சுற்றிவரவேண்டிய கட்டாயத்துக்கு பலர் ஆளாயிருக்கக் கூடும். ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக நாம் நினைப்பது சில கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தான்.





மாற்றத்துக்குப் பின் GB Road சந்திப்பு

பல கடைகள் தங்கள் வியாபாரத்தை இழந்துள்ளன. பல கடைகள் மொத்தமாகவே மூடப்பட்டும் உள்ளன. உதாரணமாக ஜி.பி ரோடு. வாகன அலங்காரப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் நிரம்பியுள்ள இந்தத் தெரு எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும், ஆனால் இந்த போக்குவரத்து மாற்றங்களால் கார்களை கடைமுன் நிறுத்தி வேலைசெய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வியாபரத் தளமான இந்தத் தெரு களையிழந்து தான் இருக்கிறது.

சென்னையில் சமகாலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய பணி இந்த மெட்ரோ ரயில். சென்னைவாசிகளான நமக்கு இது தற்காலிகமாக பல வசதிக்குறைவுகளைத் தந்தாலும் ஒரு மிகப்பெரிய பணி நம் கண்முன்னால் நடப்பது நிறைவளிப்பதாகவே இருக்கிறது.

24 பிப்ரவரி 2012

கொலைக் குற்றமும், குற்றமும் கொலையும்

சென்னையில் ஒரு பெண் ஒரு டீன் ஏஜ் பையனால் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால் இது ஒரு கொலையாகக் கருதப்படப் போவதில்லை என்பது செய்திகளையும், அறிவுஜீவிகளின் கருத்துக்களையும் படிக்கும்போது உணரமுடிகிறது. காரணம், அந்தக் கொலையாளி பள்ளியில் மாணவனாகவும் இருந்தது தான்.
ஒரு மாணவன் செய்த கொலையை, வழக்கமான கொலையாகப் பார்க்கக்கூடாது. (கொலையில் என்ன வழக்கமான?) அதை காரண காரியங்களையும், கல்விமுறையின் எல்லா பிரச்சனைகளையும் பேசி முடித்தபின்னே தான் இதை கொலையா அல்லது தேச சேவையா என்று முடிவுசெய்யவேண்டும் என அறிவிஜீவிகள் எண்ணுவதாகத் தெரிகிறது.
மாணவர்களாக இருக்கும் சிலர் பேருந்துகளில் தினமும் செய்யும் தொந்தரவுகளையும், பொது இடங்களில் செய்யும் பிரச்சனைகளையும் காவல்துறை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, இப்போது கொலையைக்கூட அப்படி பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும்போல இருக்கிறது. அறிவுஜீவிகள் இப்போதே அந்த மனநிலைக்கு நம்மை தயார்ப்படுத்தி வருகிறார்கள் எனத் தெரிகிறது.
மாணவர்கள்  மீதுமட்டும் ஏன் அந்த ஒளிவட்டம், அவர்கள் மட்டும் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாமா எனக் கேட்டீர்களென்றால் அப்படியல்ல,   ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கூட்டத்துக்கும் இந்த சலுகை உண்டு. ஒரு தனிமனிதன் தவறு செய்யதால் மாபெரும் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால் அவனே ஏதாவது ஒரு கூட்டத்தோடு அவனை சம்பந்தப் படுத்திக் கொண்டால் போதும். கொலையே செய்தாலும் அதற்கு விளக்கம் கூற, நியாயப்படுத்த ஒரு கூட்டமே வந்துவிடும். அப்புறம் எது தண்டனை. சிறிதுநாள் கழித்து பாராட்டுவிழா வேண்டுமானால் நடக்கலாம். 
---
இதை எழுதினாலும் பதிவேற்றாமல் இருந்தேன். ஆனால் இப்போது நடந்துள்ள என்கவுன்ட்டர் கொலைகளையும் அதற்கான அதிரடியாய எதிர்ப்புகளையும் பார்க்கும்பொழுது இதை சொல்லவேண்டும் எனத்தோன்றியது.
சட்டத்தை மீறி நடக்கும் எந்தக் கொலைகளுமே நமக்கு உடன்பாடு இல்லை.
இருந்தாலும் ஒரு ஆசிரியை கொல்லப்பட்ட செய்தியை சாதாரணமாக எடுத்துக்கொண்டு மாணவர் தரப்பு  நியாயம் பேசிய நமது அறிவுஜீவிகள்  இந்த என்கவுன்ட்டர் விஷயத்தில் காட்டும் எதிர்ப்பு நமக்கு வியப்பாக இருக்கிறது.
ஆசிரியர் கொல்லப்பட்டதை விட கொள்ளைக்காரர்கள் என சந்தேகிகப் படுபவர்கள் கொல்லப்படுவது நமது சமுதாயத்தில் அதிக அதிர்ச்சியை விளைவிக்கிறது என்பதே ஒரு அதிர்ச்சிதான்.

09 பிப்ரவரி 2012

நண்பன் -போலிகளின் பாசாங்கு

அவன் எழுதியதைத் தான் நானும் எழுதினேன். ஆனால் அவன் சூப்பர் மார்க், எல்லோரும் பாராட்டுறாங்க. ஆனால்  நான் பெயில், எல்லோரும் சிரிக்கிறாங்க,  என்ன உலகமடா இது என்று வருத்தப்பட்டான் 'நண்பன்' ஒருவன். அவனுக்கு தெரியாதது என்னவென்றால் இரண்டு பேரும் எழுதியது வேறு தேர்வுகள். வெவ்வேறு கேள்வித்தாள்கள்.
பிரதியெடுங்க, ஆனால் கொஞ்சம் புரிந்துகொண்டு பிரதியெடுங்க மக்களே..

 .......

கொஞ்சம் நாள் முன்பு த்ரீ இடியட்ஸ் என்று ஒரு அருமையான படம் வந்தது. அது நமது கல்வித்துறையில் இருக்கும் பல அபத்தங்களை கேள்விக்குள்ளாக்கியது. முக்கியமாக புத்தகதிலிருப்பதை அப்படியே வாந்திஎடுப்பதை சாதனையாகக் கருதும் கல்விமுறையையும் அப்படி வாந்திஎடுப்பவர்களை சாதனையாளர்கள் என கொண்டாடும் அபத்தத்தையும்.

இப்போது நடப்பது என்ன? அதை அப்படியே வாந்தியெடுத்து(உரிமம் வாங்கித்தான்) இங்கே ஒரு படம். இவர்களை சாதனையாளர்கள் என பாராட்ட ஒரு பாமரக் கூட்டம். அட ஆண்டவா..

....

த்ரீ இடியட்ஸ் என்ற படமே "Five Point Someone" என்ற நாவலின் தாக்கத்தில் உருவானது தான். ஆனால் அதில் திரைக்கதைக்குத் தேவையான  பல புதுமைகளை இயக்குனர் புகுத்தி ஒரு அருமையான வெற்றிப் படத்தைத் தந்தார்.

ஆனால் நமது 'பிரமாண்ட இயக்குனர்" தந்துள்ளது ஒரு காப்பி. அதற்குமேல் எதுவும் இல்லை. அந்தப் படம் சொல்லும் கருத்துக்கு நேர்மாறான ஒரு செயல்பாடு. இந்தப் படத்தில் இலியானாவைத் தவிர வேறேதும் புதுமையைக் காணமுடியவில்லை.

எல்லாப் படத்தையும் பிரதி எடுத்தீங்க சரி.. ஆனால் இப்படி பிரதிஎடுப்பதை விமர்சனம் செய்துவந்த படத்தையுமா பிரதிஎடுப்பீங்க?


சரி. விஜய் படத்துக்கெல்லாம் எதற்கு யோசனை. வழக்கம்போல கண்டும் காணாமல் விட்டு விடவேண்டியது தானே?  சொந்தமாக யோசிக்கமுடியாவிட்டாலும் நல்லவிஷயத்தை தானே இவர்கள் கொண்டு சேர்க்கிறார்கள் என கேள்வி எழலாம்.
இதுபோன்ற போலிகளைக்கொண்டாடுவதின்மூலம் நாம் சில உண்மையான திறமைகளுக்கு அநீதி செய்கிறோம்  என்பதை நினைவில் நிறுத்துவது நல்லது.

அறிவு குறைவானவர்கள் அப்படியே இருப்பதில் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர்களின் அறிவாளிபோன்ற  பாசாங்குகளும்,  அவர்களெல்லாம்  அறிவுரை சொல்ல  விழைவதும்தான் நமது பிரச்சனை.

08 பிப்ரவரி 2012

பச்சை

எவ்வளவுநேரம் காத்திருந்தாலும்
சிவப்பு, பச்சையாக மாறுவதில்லை.
 
சிவப்பு மறையும்நேரம், பச்சை ஒளிர்கிறது.