Unordered List

31 மே 2018

”நெக்ஸ்ட்... வேற கேள்வி இருக்கா?”. பத்திரிகையாளர் சந்திப்பின் பரபரப்பு

முட்டாள்த்தனமான கேள்வி இது.,என்றார் எலான் மஸ்க். அவர்  “நெக்ஸ்ட்... வேற கேள்வி இருக்கா””  என்றதும் அந்த மூத்த  நிருபர்கள் அதிர்ச்சயடைந்தனர். அதிஷ்டவசமாக வழக்கமான மீடியா கூட்டத்தைச் சேராத ஒரு யுடியூப் சானல் நடத்துபவர் ஒருவரும் அங்கிருந்தார், அவர் சுவாரஸ்யமான பல கேள்விகள் கேட்க பரபரப்பாக கூட்டம் நடந்தது.

ஆனால் அடுத்தநாள் முக்கிய ஊடகங்களில் அந்த சுவாரஸ்யமான கேள்விகள் பற்றி ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தால் அது தவறு.  எலான் மஸ்க் மீடியா மீது கோபப்பட்டார்  மீடியாவைத் திட்டிவிட்டார் என்பதே முக்கியச் செய்தி.

எலான் மஸ்க் என்பவர் உலகின் அதி வசதிகள் கொண்ட டெஸ்லா காரை தயாரிக்கும் நிறுவனம் மட்டுமல்லாது விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் நிறுவியவர். விண்வெளியில் மனிதர்கள் குடியேற்றம் அமைக்கும் கனவுகொண்டவர்.  அந்த சந்திப்பில் அவரது நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன, அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதை அறிய மக்கள் ஆர்வமான இருந்தனர். ஆனால் அவர்களுக்குக் பல ஊடகங்கள் மூலம் கிடைத்தது அவர் தங்களை மதிக்கவில்லை என்பதற்கான கோபம் மட்டுமே.

எலான் மஸ்க் அந்த நிருபரை மதிக்காமல் இருந்தது பற்றி ஊடகங்கள் வருத்தமடைய நியாயம் உண்டா என்றால் உண்டு. ஆனால் அது அவர்களுக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை. பொதுமக்களுக்கு அதை விட டெஸ்லா பற்றியே ஆர்வம் அதிகம். செய்திவாசிப்பவர் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்றால் அதுவும் பிர்ச்சனை தான், அதை அவர் சரி செய்துகொள்ளவேண்டும். ஆனால் அது மக்கள் பார்க்கும் செய்தியில் சொல்லிக்கொண்டிருப்பது நியாயம் இல்லை. பொதுமக்களின் பிரச்சனையைச் சொல்லவே செய்தி பார்க்கிறார்கள் மக்கள்.

ஒரு நாள் நடந்த ஒரு நிகழ்வில் ஒரு சின்ன விஷயத்தை மட்டும் எடுத்து மீண்டும் மீண்டும் பேசி எழுதி, அது மட்டுமே நடந்தது போல நிறுவ முயற்சிப்பது உண்மையற்றது எனத்தெரிந்தாலும் அது செய்யப்படுகிறது. இதற்க்குக் காரணம் துருவப்பட்டிருக்கும் (polarized) மனங்கள், எவ்வளவு வாசிப்பு இருந்தாலும் துருவப்பட்ட மனம் தன் நிலைக்கு மாறான ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள தயங்கும், நேரடியான தகவல்கள் இருந்தாலும் எப்படியாவது நியாயப்படுத்த முடியுமா என தவிப்பு இருக்கும்.  இன்றிருக்கும் நிலையில் இது ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது என்றாலும் மக்களுக்குச் செய்தியைக் கொண்டு செல்லக் கடமை இருக்கும் மீடியா நிருபர்கள் இந்த விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் இந்தத் துருவப்படுத்தல்களுக்கு ஆளாகாமல் இருப்பது முக்கியம்.

என்ன நடந்தது என்பதை செய்தியாகச் சொல்லுங்கள் அது முக்கியம். அது சரியா தவறா என மக்கள் முடிவு செய்ய ஒரு வாய்ப்பும் இருக்கவேண்டும் .என்ன நடந்திருக்கவேண்டும் என்பது பற்றிய உங்கள் ஆதங்கம், நடந்தது பற்றிய உங்கள் கருத்து இவையெல்லம் தனியாக கட்டுரையாகச் சொல்லுங்கள் ஆர்வமிருப்பவர்கள் அதையும் படிப்பார்கள்.

இந்தப் பிரச்சனை காரணமாக எலான் மஸ்க் நேரடியாக ட்விட்டரில் கடுமையான போரில் இறங்கியுள்ளது பரபரப்பாகியிருக்கிறது. இந்நிலையில் செய்திகளில் நிருபரின் கருத்தை திணிப்பதோ, அல்லது பேட்டியின்போது பேட்டி கொடுப்பவர் யார் தரப்பைப் பேசவேண்டும் என இவர்கள் எதிர்பார்ப்பதோ, உண்மையை அறிய ஆர்வம் உள்ள மக்களுக்குச் செய்யும் நியாயம் ஆகாது என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.

மக்கள் பிரச்சனையைப் பேசவே மீடியா... வேறுமாதிரி இல்லை. மீடியா பிர்ச்சனையை பேசுவதைத் தவிர மக்களுக்கு வேறு வேலைகளும் இருக்கின்றன.

02 பிப்ரவரி 2018

படைவீரன்



கிரிஸ்டோபர் நோலனின் மெமண்டோ படத்தில் ஒரு காட்சி. உடனடி மறதி கொண்ட ஹீரோ ஒரு பரபரப்பான சேஸிங்கில் இருக்கிறான். தான் துரத்திக்கொண்டிருப்பதாக நினைக்கிறான். வேகமாக ஓடி இன்னொருவனை நெருங்க, அவன் துப்பாக்கியால் சுடும்போது தான் அவனுக்கேத் தெரிகிறது, ஹீரோ அந்தச் சேஸிங்கில் துரத்தப்பட்டுக்கொண்டிருக்கிறான் என. ஒருவேளை அவனுக்கு அப்போதைய சூழல் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பான்?


சூழலின் பரபரப்பில் திக்குத்தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவனின் உலகத்தை அப்படியே ப்ரீஸ் செய்து மொத்த நிலைமையையும் ஒருவர் விளக்கினால் எப்படி இருக்கும், படைவீரனில் அப்படி ஒரு தருணம், ஆனால் மிலிட்டரி மாமாவான பாரதிராஜா ஹீரோவுக்கு சொல்வது அப்போது இருக்கும் சூழல் மட்டுமல்ல, மனிதத்தின் வரலாறு. அதன்பின் இந்த படைவீரன் அதை எதிர்கொள்ளும் முறை எதிர்பார்ப்பை மிஞ்சுவது.







பெரும்பாலும் நாம் சினிமாவில் பார்ப்பது சினிமாவைப் பார்த்து எடுக்கப்படும் சினிமாக் கிராமங்கள். ஆனால் உண்மையான கிராமத்தில் அதை விட கலகலப்பு அதிகம். படைவீரனில் உண்மையான கிராமத்து கலகலப்பு அப்படியே வந்துள்ளது.  போலீஸ் ஸ்டேஷனில் அட்டகாசம் செய்ய்யும் பாட்டி, கூடவே இருந்து பணத்தை ரெடி செய்ய உதவும் நண்பர்கள், ஊர்க்காரர்கள் மற்றும்  ஊர்த்திருவிழா என கிராமத்து கலகலப்பு அப்படியே வந்துள்ளது. படம் முடிந்தது யோசித்துப் பார்த்தால், நகைச்சுவை காட்சிகளில் இருந்து திருவிழா வரை ஒவ்வொன்றும் படத்தின் உச்சத்தை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக  இயல்பாக நகர்த்திச் செல்வதை உணர முடியுவது ஆச்சர்யம். அதுவும் தொடக்கப் பாடலில் வரும் ஊர்த்திருவிழா கடைசியில் இன்னொன்றாக உருவெடுப்பது  உச்சம்


முழுப்பாவாடை, ஆண் சட்டை போட்டுக்கொண்டு சைக்கிளில் ஊருக்குள் பறக்கும் மலர் மிக இயல்யான கிராமத்துப்பெண்ணாக இருக்கிறாள். அழுத்தமான பெண்ணான அவளது மாற்றங்கள் சில அதிர்ச்சியளித்தாலும் அதுவே அவளை நமக்கு மிகவும் பிடிக்கச்செய்கிறது.முனி மீண்டும் கிராமத்துக்கு போலீஸாக வந்த பின்னர், அவர்களுக்குள்  மாலையில், விளக்கொளியில் நடக்கும் அந்த சந்திப்பு நிஜமான காதல் தருணம்.

முனியின் அக்கா, கைகுழந்தையுடன் இருக்கும் அவள் நண்பனின் அக்கா என பெண் பாத்திரங்கள் மிக உறுதியாவனவர்களாக இருக்கிறார்கள். இவர்களே இந்த கிராமத்தில் நம்மை வாழச்செய்கிரார்கள். கதையும் அவர்கள் வழியாகவே நடக்கிறது,


தண்ணியப்போட்டு வந்து உங்களை கவனிச்சிக்கிறேன் என்று சைகையில் சொல்லும் மிலிட்டரி மாமா நம் மனத்தை ஆக்ரமிக்கிறார். பின்னர் கையறு நிலையில் போலிஸிடம் அழும்போதும், இறுதியில் முனியை உறுதிப்படுத்தும்போதும் அவரது இடத்துக்கு நியாயம் செய்கிறார், அதற்கானக் காரணங்களும் கதையில் உறுதியாக இருக்கின்றன. மிலிட்டரி பெருமை ஊர்ப்பெருமை என ஜாலியாக இருக்கும் மிலிட்டரி மாமா தான் தங்கள் மீதான ஒரு நிஜமான விமர்சனத்தை வைக்கிறார்.


கவலையில்லாத இளைஞனாக அறிமுகமாகும் நாயகன் போலீஸ் பயிற்சிக்கு பயந்து ஊருக்கு வந்து, அவனது உலகமான வீட்டார், நண்பர்கள், மிலிட்டரி மாமா அனைவராலும் பிடிக்கப்பட்டு போலீஸிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் அதே கலகலப்பில் இருக்கிறான். அவனை மாற்றும் அந்த முடிச்சு இடைவேளையை சுவாரஸ்யப்படுத்துகிறது.

அவன் கேட்காமலே வந்த காதல், அவன் விட்டு விட நினைத்த போலீஸ் வேலை, தன் ஊருக்கு நண்பனுடன் விடுமுறையில் போக நினைத்த நேரத்தில் அங்கே போலீஸாக போக வேண்டிய நிர்பந்தம். தனக்காக எதையும் செய்யும் ஊர் நண்பர்கள் ஒரு முக்கிய இழப்புக்கு காரணமாவது என சக்ரவியூகத்தில் இருக்கும் அபிமன்யுவாக முனி தவித்தாலும் ஒவ்வொரு சோதனையும் அவனை அடுத்த நிலைக்கு உயர்த்தவே செய்கிறது. அனைத்தையும் வென்ற அவனுக்கு கடைசியில் வரும் உச்சகட்ட சோதனையில் யாரும் எதிர்பார்க்காத முறையில் வென்று நிஜமான வீரனாக ஒளிர்கிறான்.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் சரியாகப் பொருந்தியுள்ளன. தனுஷ் பாடல் செம.

கிராமத்துக்களத்தில் கலகலப்பாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இந்தப்படம் கிராமத்துக்கானது மட்டுமல்ல. உண்மையான கிராமத்தில் முளைத்த இந்த நிஜ வீரன் உலக மனங்களை வெல்பவன்.

28 டிசம்பர் 2017

ரஜினியைக் கவனித்தல்

காலையில் இந்தச் செய்தித்தாள்களின் படங்களை  நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. நமக்குப்பிடித்த ஒருவரை உலகமே முக்கியமாகப் பார்ப்பதில் வரும் மகிழ்ச்சி அது. ஆனால் நேற்று ரஜினி பேசிய உரையின் பதினாலு நிமிடங்களில் வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே அரசியலைப் பற்றி பேசினார், அது  முக்கிய பத்திரிக்கைகளின் தலைப்புச்செய்தியாக இருக்கிறது. மக்கள் தங்கள் கேட்க விரும்புவதைக் கேட்கிறார்கள்



தற்போதைய அரசியல் சூழலில் தங்கள் குரலைப் பதிவு செய்ய பலரும் பொதுக்கூட்டம், ப்ரஸ் மீட், பத்திரிக்கைகள் பேட்டி மற்றும் சமூக வலைத்தள நடவடிக்கைகள் என கடும் முயற்சிகள் செய்துகொண்டிருக்கும் நிலையில் வேறொரு நிகழ்ச்சியில் வெறும் 4 நிமிடம் பேசியது இவ்வளவு பரபரப்பாகி இருப்பது ரஜினியின் செல்வாக்கை காட்டுகிறது.





"இந்த முறையும் ஏமாற்றி விடுவார், வெறுப்பாக இருக்கிறது" என்றும் சில குரல்கள். "அவர் வரவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் வந்தால் உடனடியாக ஆதரிப்பீர்களா" என்று கேட்டால் பதிலில்லை. ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு வெறுப்படைய காரணம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ரஜினி சொல்வதை சொல்லட்டும், அதை கவனிக்கலாம் எனவே பொதுவாக மக்கள் ஆர்வத்துடன் இருப்பதை கவனிக்க முடிகிறது. அவர் என்ன சொல்லவேண்டும் என முடிவு செய்து காத்திருப்பவர்கள் தான் என்ன நடந்தாலும் வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

ஒருமுறை பாகிஸ்தான் நமது இந்திய ராணுவ வீரர்கள் சிலரை முறை தவறிக்கொலை செய்தது; இந்தியாவைக் கடுமையாகச் சீண்டும் செயல் அது. உடனே பதிலடி கொடுக்கப்போகிறோமா, என்ன செய்யப்பபோகிறோம் என இந்திய ராணுவத் துணைத் தளபதியிடம் கேட்கப்பட்டது. அந்த சூழலில் அவர் சொன்ன பதில் மிக உறுதியானது.


"பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை நாம் நினைக்கும் இடத்தில், நாம் நினைக்கும் நேரத்தில் கொடுப்போம் என்றார். (will respond to Pakistan at time and place of our choosing). எதிரி எதிர்பார்க்கும் செயலைத் தவிர்த்து, நமது செயல்பாட்டை முடிவெடுப்பதை நாமாகவே செய்வதில் இருப்பதில் இருக்கும் உறுதி அது.

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றி எழுப்படும் எதிர்மறைக் கேள்விகள், கிண்டல்கள் அனைத்தும் அவரை சீண்டும் செயல்கள் தான். அவர்களுக்கு இன்று ரஜினியும் அப்படி ஒரு பதிலைச் சொல்லி இருக்கிறார்.

01 அக்டோபர் 2017

கிரிக்கெட்டை முன்னறிதல்

நான் TV பார்ப்பதில்லை. தேவையென்றால் இண்டெர்நெட்டில் அவ்வப்போது சினிமா பார்த்துக்கொள்வது வசதி; நேரமும் மிச்சம். இதில் இன்னொரு ஆச்சர்ய அட்வாண்டேஜ் இருப்பதை இப்போது அறிந்தேன்,

டிவியில் பார்க்காமல் hotstarல் கிரிக்கெட் பார்ப்பது ஒரு சயிண்ஸ் பிக்சன் உலகுக்குள்  வாழும் அனுபவத்தைத் தரவல்லது. பரபரப்பாக டோனி பந்தை எதிர்கொள்ளும் முன்னரே அவர் ஹெலிகாப்டர் சிக்ஸ் அடிக்கப்போகிறாரா அல்லது அவுட் ஆகப் போகிறாரா எனத் தெரிந்து விடுவது நமக்கு ஒரு சூப்பர் பவர் இருக்கும் உணர்வைத் தருகிறது.

ஆனால் அடுத்த 5 நிமிடத்துக்கு என்ன நடக்கும் என தெரிந்துகொண்டு பார்க்கும் வசதி Hotstarல் இலவசமாகப் பார்ப்பவர்களுக்கு மட்டும் தான். so called "Premium members"களுக்கு இந்த வசதி இல்லையாம். அடப் பாவமே..

முழு அனுபவம் பெற hotstar பார்க்கும்போது ப்ரொவுசரின் இன்னொரு tabல் cricinfo வைத்துக்கொள்ளவும்.


14 ஏப்ரல் 2017

சாகசம் என்றால்

சாகசம் என்றால்  துப்பறிதலும்,  கடுமையான ஆயுதமும் மற்றும் திட்டமிட்டு தாக்குதலும் இருந்தால் தான் சுவாரஸ்யம். இவை கொஞ்சமும் குறையாமல் இருந்த ஒரு சாகசத்தை நான் சிறுவயதில் செய்வதுண்டு. 

சணல் கயிற்றில் கட்டிய பேப்பரில் இருந்து அந்தப்பொடியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துக்கொள்வதில் துவங்குகிறது அந்த சாகசம். அதை மெல்லிதாக தூவ ஒரு கெட்டியான பேப்பர் அல்லது அட்டையை எடுத்துக்குக்கொள்ளலாம். ஆயுதம் தாயார். இப்போது எதிரியை தேடவேண்டும். 

இதுவரை செய்தது கூட வேறு யாரும் செய்துவிடக்கூடிய செயல் தான், ஆனால் இந்த எதிரி நுழையும் இடங்களைக் கண்டுகொள்ள ஒரு ஒரு சிறுவனால் மட்டும்தான் முடியும்,  எறும்பு நுழையும் வீட்டின் எல்லா மூளை முடுக்குகளும் அவனுக்கு மட்டுமே தெரியும்.

முதலில் எறும்புகளின் ஒரு வரிசையைக் கண்டுகொள்ள வேண்டும். 
கண்டுகொண்ட பின் , கொஞ்சம் கொஞ்சமாக பொடியைத் தூவிக்கொண்டே செல்லவேண்டும். அந்த விஷப்போடி பட்டதும் சிறிது குழம்பி எறும்புகள் வரிசைவிட்டு விலகி சுற்றும். நாம் வரிசையைத் தொடர வேண்டும். தரை, சுவர், ஜன்னல் என பல வழிகளைத் தாண்டி அது அனேகமாக வீட்டுக்கு வெளியே மண்ணில் இருக்கும் ஒரு புற்றை சென்றடையும். 

எறும்புகள் வரிசையாகச் செல்வதை அதன் நல்லியல்பாகச சொல்வதுண்டு. ஆனால் அந்த நல்லியல்பு தான் அதன் புற்றை நமக்கு காட்டிக் கொடுக்கிறது. 

புற்றின் மீது கொஞ்சம் பொடியைக் கொட்டி, ஒரு சிறிய குச்சியை வைத்து கொஞ்சம் உள்ளேயும் இறக்கிவிட்டால் அந்த பணி இனிதே நிறைவடையும். 

சிவப்பாக இருக்கும் எறும்புகள் போடிதூவப்பட்டதால் சம்பல் நிறத்தில் இருக்கும். மரணத்துகமுன் அவற்றின் இன்னொரு நல்லியல்பான சுறுசுறுப்பைக் கைவிட்டு தூக்க கலக்கத்துடன் நடந்து கொண்டிருக்கும். சத்தமில்லாமல் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து முடியும் அழித்தல் பணி அது.

அன்றும் அப்படித்தான் சாகசத்தை ஆரம்பித்திருந்தேன். வீட்டுக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக வரிசை வெளியே சென்றது. நானும் வீட்டைச் சுற்றி வெளியே வந்து  தொடர்ந்தேன். இம்முறை வரிசை மாடிப்படியை ஒட்டியிருந்த ஒரு பயன்பாட்டில் இல்லாத அறையை அடைந்தது. 

எறும்புகளின் வரிசை ஒரு பழைய பலகையின் அடியில் சென்றது. பல சுவர்கள், ஜன்னல்கள் தாண்டி வந்த நமக்கு அந்தப் பலகை ஒரு தடையா என பலகையை நீக்கிய எனக்கு ஒரு அதிச்சி காத்திருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான எறும்புகள். 

அந்த பழைய பலகை வெகு நாட்களாக அங்கு இருந்திருக்கவேண்டும். பலகையின் கீழே குருனையான மண் கொண்டு கட்டப்பட்ட பாளம் பாளமான எறும்பு கோட்டைகள் அங்கே ஏராளமான எறும்புகள். வெள்ளை நிறமான குட்டி எறும்புகள். 

வழக்கமாக அமைதியாக முடியும் பணி அன்று அதிரடியாக ஆனது. எதிர்பாராமல் கிடைத்த அவ்வளவு பெரிய வேட்டையால் பரபரப்பு அடைந்தேன்.

எறும்புகளை கொல்வது வாடிக்கை தான் என்றாலும் அவை வெளியே வந்து நமது வீட்டுக்குள் வருபவை, வெளியே வரும்போது அவை ஆபத்தை எதிர்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் இவை ஆபத்தை எதிர்பார்காதவை.  ஆனால் வீட்டின் கதகதப்பிலும் வசதியிலும் இருந்த அந்த எறும்புகள் என்னை அந்த பலகை நீக்கப்பட்டதை எதிர்பார்க்கவில்லை. 

ஒரு புற்றை எதிர்பார்த்த நானும் அவ்வளவு பெரிய எறும்பு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவ்வளவு எறும்புகளையும் கொல்லத் தேவையான அளவு எறும்பு பொடியும் என கைவசம் இருந்தது. அந்த எதிரிகலைக்  கொல்லத்  தேவையான நியாயமும் என்னிடம் இருந்தது. 

அந்தக் பரபரப்பு  கணம் வெகு நாட்களாக என் நினைவில் இருந்தது. அவ்வளவு பெரிய இரும்புக் கூட்டத்தை பார்த்ததும் உண்மையில் நான் அடைந்தது மகிழ்சியா? எனது நோக்கம் எறும்புகளின் தொல்லையிலிருந்து தப்பிப்பது என்றால் அந்த மகிழ்ச்சியின் பொருள் என்ன.


சமீபத்தில் கவிஞர் இசையின் இந்தக் கவிதையைப் படித்தேன்.


புதிதாக ஒரு கொசுமட்டை வாங்கியதிலிருந்து

நிம்மதியாக இருக்கிறேன்.

கொசு விரட்டிகள்

கொசுக்களை விரட்டி விடுகின்றன.

ஆனால் மட்டை அவைகளை கொன்றுதீர்க்கிறது.

ஒரு கொசு பறந்து போக

நானும் பறந்து போய்

சரியான வாகில் வைத்து ஒரே சாத்து…

இன்பம் என் உள்ளத்தில் "பட்" என்றுதெறிக்கிறது.

" பட்…  பட்…  பட்பட்பட்…."

  இந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு கோடாரி

  ஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து

  "தயை"…  "தயை".. என்று கதறும்.

  கதறலின் மண்டையில் ஓங்கி ஒருபோடு

 " பட்..பட்..பட்பட்…. "  " பட்பட்..பட்"

 பிஸ்டலுக்கு எண்ணெய் போடுவதுபோலே

மட்டையில் மின்சாரம் ஏற்றுகிறேன்.

என் வீட்டின் முன்னே

குளம் போல தண்ணீரைத் தேக்கிவைத்திருக்கிறேன்.

கொசுவீர் !

பிறந்து எழுந்து திரண்டு வருக !


கவிதையின் தலைப்பு "எனது களம்.. எனது ஆட்டம்.. நானே நாயகன்".



கவிதையின் கடைசியில் "தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறேன், கொசுவீர், பிறந்து எக்ஷுது திரண்டு வருக" என்ற வரி

என்னால் தண்டனைப் பெறக்கூடிய ஒரு உலகம். என்னிடம் மன்றாடும் ஒரு உலகம், இரக்கமில்லாத ஒரு தண்டனைக் கடவுளாக இருக்கமுடியும் ஒரு உலகத்தை இந்த கொசு மட்டை உருவாக்கித் தருகிறது