Unordered List

19 ஆகஸ்ட் 2011

கேணி சந்திப்பு - வண்ணநிலவன்

"நீங்களெல்லாம் என கதைகளைப் பற்றி பேசுகிறீர்கள், புகழ்கிறீர்கள். ஆனால் அதில் அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அந்தப் பாராட்டுகளை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கூச்சமாகவே இருக்கிறது.." என்ற ரீதியில் சகஜமாகப் பேசிக்கொண்டுபோனார் வண்ண நிலவன். தன் படைப்புகளை பற்றி இப்படி சொல்லும் ஒரு படைப்பாளியைப் பார்ப்பது ஒரு ஆச்சர்யம் தான்.


வண்ணநிலவன் என்ற பெயரைத் தெரிந்திருந்தாலும் நான் அவரது படைப்புகள் எதையும் படித்ததில்லை. ஞாநியின் இந்த கேணி இலக்கியக் கூட்டம் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. ஞாநி ஒரு தைரியமான பத்திரிக்கையாளர் என்ற மரியாதை இருந்தாலும், அவரது கருத்துக்களை எப்போதுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு ஆர்வம் இருந்தது. நேரமும் இருந்தது. எதிர்பார்த்ததை விடவே மிகவும் சுவையான ஒரு கூட்டமாக அமைத்தது.
தனக்கு அவ்வளவு சுவையாகப் பேசத் தெரியாது என்று ஆரம்பித்தார் வண்ணநிலவன். ஆனால் அவரது எளிமையும் நேர்மையும் அவரது பேச்சை இயல்பாகவே சுவையாக்கின.
பல ஏற்ற இறக்கங்களை, பல பொருளாதார நெருக்கடிகளைக் கண்ட தன் வாழ்கையை, சற்றும் கசப்பிலாமல், தான் கண்ட ஒரு நாடகத்தின் கதையைச் சொல்வதுபோல அவரால் சொல்ல முடிகிறது.
வண்ணதாசன், விக்ரமாதியன், பாலகுமாரன்,சோ,வல்லிக்கண்ணன் என தனது வாழ்கையில் வந்த பல ஆளுமைகளைப் பற்றியும் பேசினார்.
இவ்வளவு மென்மையாக இருக்கும் உங்களால் எப்படி துர்வாகர் என்ற பெயரில் துக்ளக்கில் அதிரடி விமர்சனம் செய்யமுடிகிறது பலர் ஆச்சர்யப் பட்டனர்.
ஆனால், அவரின் அதிரடி அவரது சுயவிமர்சனமும் எளிமையும் தான்.
தன் படைப்புகளைப் பற்றி பெருமையாக பேசுவதை அவர் தவிர்த்தாலும், அவரின் படைப்புகளை படித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நன்றாகவே பதிலளித்தார்.
தான் கிறித்துவனாக "கொஞ்ச காலம்" மாறிய கதை, எஸ்தர், கடல்புரத்தில் போன்ற படைப்புகள் உருவாக சூழல் என்று அவரது வாசகர்களுக்கும் பல வித்தியாசமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இப்போதைய இலக்கியத்திலும் தனக்குப் பிடித்த, மற்றும் பிடிக்காத சில போக்குகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
பொதுவாக அவரது பேச்சு கூட்டத்தில் புன்முறுவலையும் கரவொலியையும் எழுப்பியபடியிருந்தாலும்
சமீபத்தில் வந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்கு கூட்டத்தினர் எழுப்பிய பலத்த கரவொலி பார்த்து எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது.
சினிமாவைப் பற்றி எதுசொன்னாலும் மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அது.

எழுத்தாளர் எஸ்ரா, இயக்குனர் பாலுமகேந்திரா ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஞானியும் எஸ்ராவும் பல கேள்விகளைக் கேட்டு தங்களை வாசகர்களாகவே காட்டிக்கொண்டது இன்னும் சிறப்பு.
வண்ணநிலவனை கலந்துரையாடலுக்கு அளித்த ஞாநி பாராட்டுக்குரியவர்.
கூட்டத்தை சிறப்பாக நடத்தியது மட்டுமலாமல், இனிப்பு,காரம், சுண்டல், தேநீர் என விருந்தோம்பலிலும் அக்கறை காட்டினார் ஞானி. அவருக்கு நன்றிகள்.
சில துர்வாசகர் கட்டுரைகளை துக்ளக்கில் படித்ததைத் தவிர இவரது படைப்புகளை நான் படித்ததில்லை என்றாலும், தனது இயல்பான கலந்துரையாடல் மூலம் ஒரு சிறப்பான மலைப் பொழுதை அளித்தார் வண்ணநிலவன்.
வண்ணநிலவனின் இலக்கியத்தை வாழ்கையை நாடகம் போல் எளிதாகப் பார்க்கும் அவரது இயல்பே தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.
சில காலமாக ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு, தான் எழுதுவதற்கு சில விஷயங்களை யோசித்து வைத்திருப்பதாகச் சொன்னார் வண்ணநிலவன். எழுதினால் சிறப்பாக எழுதவேண்டும் என்பதற்காகவே இன்னும் தொடங்காமலிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இருந்த உற்சாகம், அவரது புதிய படைப்புகள் வர வழிசெய்யட்டும்.

22 ஜூன் 2011

ரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்!

ஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை காப்பியடித்த ஒரு ஆங்கிலப் படம் நமது கவனத்திற்கு வந்துள்ளது.
தமிழ் படத்தை காப்பியடித்த அந்த ஆங்கிலப் படம் இதுதான். A History of Voilence (https://en.wikipedia.org/wiki/A_History_of_Violence).
இது நமது பாட்சா படத்தின் அப்பட்டமான காப்பி. உலகப் புகழ் பெற்ற "உள்ளே போ" காட்சிகூட அப்படியே உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். :)
இந்தக் கதையைக் கேளுங்கள்..
ஒருஊரில் ஒருவன் அமைதியாக ஒரு ஹோட்டல் நடத்திவருகிறான். பாட்சவில் ஆட்டோ..
அப்போது சில ரௌடிகள் வம்பிழுக்க அமைதியாக இருக்கிறான். பின் வேறு வழியின்றி அவர்களை அடிக்கிறான். முதல் பிரச்சனை..
பின்னே என்ன? ரௌடிகள் அவன் வீட்டின்முன்னே வருகிறார்கள். அவர்கள் கடத்தி வருவது அவனது மகனை. (பாட்சாவில் தங்கச்சியை) அவனை வைத்து மிரட்டுகிறார்கள். ஹீரோ அங்கு வருகிறார். ஹீரோவின் மனைவியும் பையனும் வில்லன்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். அப்போது ஹீரோவின் பார்வையில் ஒரு மாற்றம்..
பிறகு என்ன? அதே தான்.. "உள்ளே போ!!".
நம்பமுடியாமல் அவர்கள் வீட்டின் மாடியில் நின்று பார்க்க ஹீரோ வில்லன்களை பந்தாடுகிறார்..
இப்படிப் போகிறது இந்தப் படம்.
பாட்சா வந்தது 1995 -இல், இந்தப் படம் வந்தது 2005 இல்.
தலைவர் படத்தை இப்படி காப்பியடித்து வைத்திருக்கிறார்களே இதையெல்லாம் யாரும் கேட்பதில்லையா?
யாராவது இந்தப் படம் பார்த்திருக்கிறீர்களா?
--------
இது இப்படி இருக்க இப்போது வந்துள்ள "KUNG FU PANDA 2" கூட ரஜினி படத்தின் காப்பி என்பதுதான் இப்போதுள்ள பரபரப்பான பேச்சு.
இது எந்த ரஜினி படம் என்று நான் சொல்லப்போவதில்லை. நீங்களே தான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்
இந்தக் கதை என்னவென்றால்..
ஊரில் பன்ச் டைலாக் பேசிக்கொண்டு ஜாலியாக திரியும் ஹீரோவுக்கு திடீரென தன்னை வளர்த்தது தன் உண்மையான அப்பா இல்லை என்று தெரிகிறது. எனவே அவனது உண்மையான பெற்றோர் யாருன்று தேட ஆரம்பிக்கிறார்.
அப்போது பக்கத்து ஊரில் பிரச்சனை செய்யும் வில்லனைப் பார்க்கிறார். அந்த வில்லன்தான் ஹீரோ அவரது பெற்றோரைப் பிரிய காரணமானவர். சட்டென பிளாஷ்பாக் அவருக்கு ஞாபகம் வருகிறது..
பிறகென்ன.. பழிக்குப் பழி..
இடையிடையில் ஆன்மீக தத்துவ வசனங்கள், வில்லன் எரியும் வெடிகுண்டை கையில் பிடித்து மறுபடி வில்லன் மீதே எறியும் காட்சிகள் என ஒரே பரபரப்புதான்
இது என்னபடம் என்று யோசித்தால் பல ரஜினி படங்கள் ஞாபகம் வருகிறதல்லவா? படம் பார்க்கையில் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படத்தை நினைவூட்டுகிறது.
எனக்குத் தெரிந்து ரஜினி இதுபோன்ற கதையில் ஒரு பத்து படத்திலாவது நடித்திருப்பார் என நினைக்கிறேன்.
உங்களுக்கு எந்தனை படங்கள் ஞாபகம் வருகிறது?
-- இதன் மூலம் நாம் சொல்லவருவது என்னவென்றால்,எத்தனை பேர் காப்பியடித்தாலும் ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை ஹாலிவூட்-க்கும் சொல்லிக்கொள்கிறோம். :)

20 ஜூன் 2011

பயணம் - ஏலகிரி

திடீரென முடிவெடுத்து செய்த பயணம் அது. சென்னையிலிருந்து ஏலகிரிமலைக்கு, ஒரு வாரயிறுதி நாளில்.

சென்னை வெயில், வழக்கமான இடங்கள் இவற்றிலிருந்து ஒருநாளாவதுதப்பிக்கலாமே என்ற திட்டம்.


சென்னையிலிருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், வேலூர் ஒரு இருநூற்றைம்பதுகிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தமலை. சாலைகள் மிகவும் நன்றாகவேஉள்ளன. சாலையில் தெளிவான வழிகாட்டி பலககைகள் உள்ளதால் வழிகண்டுபிடிப்பது மிக எளிது. அதிகாலையில் கிளம்பினால் பகல் உணவுக்குசென்றுவிடலாம்.

வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால்சற்றுநேரத்தில் இடதுபுறத்தில் ஏலகிரி பலகையைக் காணலாம். முதல்முறையாக மலைச் சாலையில் ஒட்டுவதால் எனக்கு சின்ன பதட்டம்இருந்தது . ஆனால் ஏற ஆரம்பித்ததுமே அது எளிதாகவே தோன்ற ஆரம்பித்தது. மலைச் சாலை மிகவும் நன்றாகவே பராமரிக்கப்படுகின்றன. நல்ல அகலமானசாலைகள் மற்றும் தேவையான அறிவுப்புப் பலகைகள். கொண்டைஊசிவளைவுகள் கார் ஓட்டுவதில் ஒரு நல்ல அனுபவம் தான்.


நல்ல இயற்கைக் காட்சிகள், தமிழ் புலவர்கள் பெயர்களில் இருக்கும் வளைவுகள்மற்றும் காட்சி முனைகள் அப்புறம் முக்கியமாக ஏராளமான குரங்குகள்வழியெங்கும் உள்ளன.

எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கங்கு நின்று ரசித்து படம் எடுத்துக்கொண்டே சென்றேன். இரண்டு இடங்கள் கடந்து, தொலைநோக்கு மையம்வந்தது. சரி..போகும்போதே நேரம் செலவழிக்க வேண்டாம், அதை திரும்பவரும்வழியில் பார்த்துக்கொள்ளலாம் என மேலே சென்றேன். அது ஒரு நல்ல முடிவுதான் அது.

உண்மையில் ஏலகிரி பயணத்தில் மலைப்பாதையில் போதுமான நேரம்செலவிடவேண்டும் என்று ஏலகிரியை அடைந்ததுமே நினைத்தேன். இல்லையெனில் நாம் அங்கு சட்டென வந்துவிடுகிறோம்.

ஏலகிரியை அடைந்ததுமே ஒரு ஏமாற்றம். அவ்வளவுதானா என்று. ஊர்வந்ததுமே, இருமருங்கிலும் நாம் பார்ப்பது தங்குமிடங்கள் மற்றும்தங்குமிடங்கள் மட்டுமே. இது பெங்களூரிலிருந்து பக்கம் என்பதால் இந்ததங்குமிடங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்குகின்றன.

நல்ல வெயில் காலத்திலும் இங்கு ஒரு நல்ல வானிலை உள்ளது. மற்றபடி படகுசவாரியைத் தவிர சுற்றிப் பார்ப்பதற்கு என்று இடங்கள் எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. நிறைய பலாப் பழங்கள் கிடைக்கின்றன.

உண்மையில் இதை ஒரு சுற்றுலாத் தளமாக நினைக்க முடியவில்லை. ஒருநல்ல தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற இடம். ஆனால் இங்குநல்ல விடுதிகளில் கட்டணம் கொஞ்சம் அதிகம் தான்.

திரும்பிவரும்போது மறக்காமல் தொலைநோக்கியைப் பார்க்க காரைநிறுத்தினேன். அடுத்த ஆச்சர்யம்.

அங்கு தொலைநோக்கிஎல்லாம் ஒன்றும் இல்லை. உண்மையில் அங்கு இருப்பதுதொலைநோக்கிக்கான இடம். நாம் நாமே தொலைநோக்கி கொண்டு சென்றால்அங்கு நின்று பார்த்துக் கொள்ளலாம் போல. ஆனால் இந்த காலி கட்டிடத்திற்குவேலை நேரம் எல்லாம் போட்டு ஒரு அறிவுப்பு வைத்திருப்பது கொஞ்சம் ஓவர்தான்.

மலை என்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமல் ஒரு பயணம் சென்று வர, ஓய்வெடுக்க அல்லது முதன்முதலில் பிரச்சனை இல்லாத ஒரு மலைப்பாதையில் கார் ஓட்டிப் பார்க்க ஒரு நல்ல இடம்தான் ஏலகிரி.

ஏலகிரி.. "சும்மா" ஒரு பயணத்திற்கு ஏற்ற இடம்.

25 மே 2011

யாரோட காசு, இது நம்ம காசு!!

சட்டசபை பழைய கட்டடத்திலேயே நடப்பதினால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று பல குரல்கள்.

அரசு செலவழிப்பது மக்களின் வரிப்பணம் தான் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வந்துகொண்டிருப்பது பற்றி மகிழ்ச்சி.

மக்களின் வரிப்பணம் வேறு எப்படியெல்லாம் வீணாகிறது..


தமிழில் பெயர் இருந்தால் சினிமாவுக்கு கேளிக்கை வரிவிலக்கு. இப்போதெல்லாம் எல்லா படங்களுமே தமிழ் பெயரில் தான் வருகின்றன. அப்படிஎன்றால் தமிழ் நாட்டில் சினிமாவுக்கு வரி இல்லை.


இந்தியாவில் நடத்திமுடிக்கப் பட்ட உலகக் கோப்பைக்கு வரி எதுவும் இல்லை. நமது அரசு அதை அத்தியாவசியமாக நினைத்து வரி விலக்கு அளித்துள்ளது. இதனால் அரசுக்கு எத்ததனை கோடி வருமான இழப்போ?


அப்படியென்றால் அரசு சலுகைகளே காட்டக் கூடாதா என்று கேட்டால், கண்டிப்பாகச் செய்யலாம். பொது நன்மை உள்ள விஷயங்களில் சலுகைகள் காட்டட்டும். விவசாயம், அடிப்படைத் தொழில்கள் போன்றவற்றில் சலுகைகள் அவசியம் தான்.

வருமானம் குறைவானவர்களுக்கு அரசு தரும் இலவச அரிசி போன்றவை இப்படிப் பட்டவை. உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லா மக்களுக்கும் கிடக்கச் செய்யவது எந்த ஒரு அரசின் கடமை.

ஆனால் சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் எதற்கு இந்தச் சலுகைகள்?

நானும் எனக்குப் பிடித்த படங்களை முதல் நாளே சென்று ரசிக்கும் சினிமா ரசிகன் தான், மணிக்கணக்காக கிரிக்கெட் பார்ப்பவன் தான். ஆனால் இவை கண்டிப்பாக விவசாயம் போல அத்தியாவசிய பொருள் அல்ல. இவற்றுக்குக் கண்டிப்பாக எந்தச் சலுகையும் தேவை இல்லை.

இவையிரண்டும் கண்டிப்பாக இந்தியாவில் வெற்றிகரமான தொழில்கள் தான். இந்தச் சலுகைகள் மூலம் பலன் பெறுவது வரிகட்டும் நம்மைவிட பெரிய புள்ளிகள் தான்.


இந்த சட்டசபை கட்டிடம் மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பாகப் பேசப்படுகிறது? உண்மையில் இன்னொரு கட்டிடம் கட்டினால் தானே உண்மையில் வரிப்பணம் வீணாகிறது எனச் சொல்லமுடியும்? இருப்பதே பயன்படுத்திக் கொள்கிறோம் எனச்சொல்வது எப்படி வீண் என்று சொல்லமுடியும் என்று தெரியவில்லை.


இது போன்ற கட்டமைப்பு துறைகளில் வீணாவதை விட, இது போன்ற சலுகைகளால் தான் அதிகம் நமது வரிப்பணம் தொடர்ச்சியாக வீணாகிறது என்ற எண்ணம் மக்களிடமும், அரசின் செலவவுகளுக்கு மக்களிடம் கணக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடமும் வரும் என எதிர்பார்க்கலாம்.

20 மே 2011

சொன்னபடி வந்த தேர்தல் முடிவுகள்..

தேர்தல்நாளைவிட முடிவுகள் வந்த நாளில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். வேலை பார்ப்பதைவிட வேடிக்கை பார்ப்பது சுவையானது.

முடிவுகள் இப்படி வந்ததற்குக் காரணம் என்னவென்று கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளும், எல்லாப் பதிவர்களும் சொல்லிவிட்டார்கள். நமக்குப் புரியாதது என்னவென்றால் இவர்கள் எல்லோருக்கும் முன்னரே தெரிந்திருந்தும் ஏன் இந்த தீர்க்கதரிசிகள் அப்போதே சொல்லவில்லை என்பது தான்.

போராட்டங்கள் மறியல்கள் என பல கலவரங்களை உருவாக்கி மம்தா பானர்ஜி வங்காளத்தில் வென்றிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிதாக எந்த பிரச்சனையும் அல்லது போராட்டமும் செய்யாத ஜெயலலிதாவும் வென்றிருக்கிறார். யோசிக்க வேண்டிய விஷயம்..

பிரசாரத்தின் பொது அப்போதைய ஆளும் கட்சியால் அதிகம் முன்னிறுத்தப்பட்டவர் வடிவேலு தான். அவர் அதிகம் முன்னிறுத்தியது விஜயகாந்தை தான். அதே போல் தேர்தல் முடிவுக்குப் பின் மக்கள் அதிகம் பேசியது வடிவேலு பற்றி தான். எப்படியோ விஜயகாந்த் முன்னுக்கு வந்துவிட்டார்.

வடிவேலு தி.மு.க வின் பிரசார பலத்தை விஜயகாந்த் மீது திருப்பிவிட்டார் என்று தோன்றுகிறது. சன் டிவி உள்ளிட்ட அதன் பலம் வாய்ந்த ஊடகங்கள் விஜயகாந்தை மீது தான் அதிகம் நேரம் செலவழித்தன.

திருநீறு, குங்குமம் வைத்த அமைச்சர்களும், அவர்கள் ஆண்டவன் மீது ஆணையாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும் பார்பதற்கு கொஞ்சம் இயற்கையாக இருந்தது. (முந்தைய அரசு இயற்கை மீது ஆணையாக பிரமாணம் எடுத்துக் கொண்டது அவ்வளவு இயற்கையாக தோன்றவில்லை)

பழைய சட்டமன்றமே போதும் என ஜெயலலிதா தனது பாணி அதிரடியை ஆரம்பித்துள்ளார். அப்படியே தமிழ் புத்தாண்டையும் பழையபடியே சித்திரைக்கு மாற்றுவார் என எதிர்பார்க்கலாம். (விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி அறிவை பயன்படுத்தி பண்டிகை தினங்களை மாற்றுவது பற்றி சிந்திப்பதற்கும் தடை வரும் என எதிர்பார்க்கலாம். )

வாக்குப் பதிவு எந்திரத்தில் செயற்கை இதயம் உள்ளது என நம்பவேண்டியிருக்கிறது. தலைவர்களுக்கு பிரச்சனை என்றால் (தோற்கும் நிலையில்) இருந்தால் மட்டும் அவை வேலை நிறுத்தம் செய்கின்றன. (பத்திரிக்கைக்காரர்களுக்கு இல்லாத இதயம் எந்திரத்துக்கு இருக்கிறதே !!)

கருணாநிதியின் படைப்புகளுக்காக இனிமேல் பாராட்டு விழாக்கள் நடந்தால் அது சரியானதாக இருக்கும். அவரது தமிழால் கவரப்பட்டவர்கள் இனிமேல் அதைச் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.