Unordered List

03 நவம்பர் 2011

கடாபி மரணம் - பகீர் உண்மைகள்

லிபியாவில் நடந்துவரும் பரபரப்பான நிகழ்வுகள் உலகத்தின் அதாவது உலக ஊடகங்களின் பார்வையை அதன் பக்கம் திருப்பியுள்ளன. லிபியாவில் மனித உரிமைகளை மீட்கும்பொருட்டு உலகின் ஜனநாயக நாடுகளால் ஆதரிக்கப் படும் போராட்டம் வெற்றியடைந்து வருவதை உலகமக்கள் யாவரும் கவனித்து வருகின்றனர். சமகாலத்தில் இப்படியொரு ஜனநாயகப் புரட்சியை மேற்கு நாடுகள் நடாத்திக்காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து நடுநிலையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துப்பாக்கி சண்டை, கட்டடிட்டங்கள் தகர்ப்பு மற்றும் குண்டு வெடிப்பு போன்ற லிபிய ஜனநாயக ஆதரவுப் படையின் ஜனநாயக செயல்பாடுகளைக் காட்டிவந்த ஊடகங்களுக்கு சென்ற வாரம் முத்தாய்ப்பு வைத்ததுபோல் ஒரு படக்காட்சி கிடைத்தது.



கடாபியை தெருவில் பலர் தாக்கி அடித்துக் கொல்லுவதுபோன்ற காட்சி உலகமெங்கும் உள்ள எல்லாத்தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து வெளியானது. பிறகு அவர் இறந்துவிட்டதாக செய்தியும் வந்தது. இணையம் மூலமும் அக்காட்சி தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தது.

இந்தக் காட்சி சர்வாதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என ஒபாமா அறிவித்தார். இதன் மூலம் ஜனநாயகத்தை எப்படி நிலைநாட்டுவது என உலகெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அறிந்துகொண்டனர்.

இது இப்படி இருக்க, கடாபியின் மனதில் உள்ள மர்மங்கள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. அவரின் கார் மீது பிரான்ஸ் விமானம் குண்டு வீசியிருந்தாலும் பலர் அவரை தாக்கியிருந்தாலும், அவரது மரணத்துக்கு காரணம் என்னவென்பது புதிராகவே இருந்துவந்தது.

கடாபி மரணத்துக்குக் காரணம் என்ன அல்லது யார் எனபதே உலகின்முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி. போர்க்குற்றங்கள் செய்தார் என அமெரிக்கா முதலான மேற்கு நாடுகளால் எதிர்க்கப்பட்ட கடாபி இதுபோல் நிராயுதபாணியாக இருக்கும்போது மேற்குநாடுகள் ஆதரவுபெற்ற புரட்சிப்படையால் கொல்லப்பட்டது சரியா என்ற கேள்வியும் எழுந்தது. இது ஒரு போர்க் குற்றம் இல்லையா என சிலர் கேள்விஎழுப்பினர்.




இதற்குப் பதிலளித்த ஒரு முக்கிய 'நடுநிலை' ஊடக ஆய்வாளர் சில உண்மைகளை விளக்கியுள்ளார்.

அந்தப் படத்தை உற்றுநோக்கினால் ஆரம்பத்திலிருந்தே அவர் முகத்திலிருந்து ரத்தம் வருவதைப் பார்க்கமுடியும். எனவே ரத்தம் புரட்சிப் படையினர் அடித்ததினால் வந்தது என சொல்ல முடியாது.

ஆனால் புரட்சி படையினர் அவரை அடிப்பது அந்த படக்காட்சியில் தெரிகிறதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் அடி கூட ரத்தம் வருவதற்கு உண்மைக் காரணம் இல்லை. உடம்பில் ரத்தம் இருப்பதே அது வருவதற்குக்காரணம் என்று விளக்கியுள்ளார்.

ரத்தம் இல்லாத ஒரு உடம்பிலிருந்து யாராலும் ரத்தம் வரவைக்க முடியாது என்று தன்னால் நிருபிக்க முடியும் என்றும் அந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதன் மூலம் பல இதுவரை வெளிவராத பல உண்மைகள் தெளிவடைகின்றன.

கடாபி உயிரிழந்ததுக்குக் காரணம் கூட அவரிடம் உயிர் இருந்தது தான் என இதன் மூலம் தெரிந்துள்ளது. புரட்சிப் படையினர்வசம் சிக்குவதற்கு முன்னரே அவர் இறந்திருந்தால் அவர் புரட்சிப் படையினரிடம் மாட்டிக்கொண்டபின் இறந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அதே ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதன் மூலம் கடாபியின் மரணத்துக்குக்காரணம் அவரிடம் உயிர் இருந்ததே, அதாவது அவரது மரணத்துக்கு பொறுப்பு அவரே என்று ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது.

29 செப்டம்பர் 2011

சமவாய்ப்பெல்லாம் சமமா?

சச்சின் ஒரு புயலைக் கிளப்பியுள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் அணிக்கு இரண்டு இன்னிங்க்ஸ் மூலம் மொத்தம் நான்கு இன்னிங்க்ஸ் வைத்துக் கொள்ளும்படி மாற்றம் தேவையென்று. காரணம்? விளையாடும் இரு அணிகளுக்கும் சமவாய்ப்பு போல தெரிந்தாலும் உண்மையில் சமவாய்ப்பு இருப்பதில்லை. டாஸ் தான் பல போட்டிகளின் முடிவை தீர்மானிக்கிறது.

சரி. இதன் மூலம் சமவாய்ப்பு கிடைத்துவிடுமா? அதெப்படி அதிலும் கண்டிப்பாக டாஸ் மூலம் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கத் தான் செய்யும். என்ன இப்போது 50 ஓவர் வித்தியாசம் 25 ஓவர் வித்தியாசமாகக் குறையும்.

இதைகேட்ட நமக்கு தோன்றுவது என்ன? ஏன் 25 ஓவர்? பத்து பத்து ஓவராக 10 இன்னிங்க்ஸ் விளையாடினால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? அதிக நேரம்.. அதிக விளம்பரம்.. அதிக பணம். :)



இன்னும் கூட இன்னும் யோசிக்கலாம் ஐந்து ஐந்து ஓவராக 20 இன்னிங்க்ஸ் கூட விளையாடலாம். ஒவ்வொரு ஓவராக? அல்லது ஒவ்வொரு பந்தாக?

----


கிரிக்கெட்டில் அவர்களுக்கு சமவாய்ப்பு கிடைப்பது இருக்கட்டும். உண்மையில் நமக்கு எல்லா இடத்திலேயும் சமவாய்ப்பு கிடைகிறதா? இதைப் பற்றி யாரவது யோசித்ததுண்டா? இதற்கு என்ன செய்யலாம்?

  • ரயிலில் சொல்லும்போது எல்லோருமே விரும்புவது லோயர் பெர்த் தான். சைடு லோயர் அல்லது சைடு அப்பர் யாருக்குமே பிடிப்பதில்லை. அப்படியென்றால் சைடு பெர்த் எல்லாம் விலை குறைவா? கண்டிப்பாக இல்லை. எல்லோரும் செலுத்துவது ஒரே அளவு பணம். அனால் சிலருக்கு வசதி, சிலருக்கு அவதி. ஏன் சைடு பெர்த் பயணக் கட்டணத்தைக் குறைக்கக் கூடாது?
  • பேருந்துகளில் வசதியாக உட்கார்ந்து வருபவர்களுக்கும், கடைசி சீட்டில் வருபவர்களுக்கும் அல்லது நின்றுகொண்டு வருபவர்களுக்கும் ஒரே கட்டணம்.

  • திரையரங்குகளில் நல்ல இடத்திற்கும் ஒரே கட்டணம். ஓரமாக இருக்கைகளுக்கும் ஒரே கட்டணம்.

  • ஒரு மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போது சரியான நேரத்தில் பார்ப்பவருக்கும் அல்லது காத்திருந்து பார்ப்பவர்களுக்கும் ஒரே கட்டணம்.
இதற்கெல்லாம் ஏன் வசதியை வைத்து கட்டணம் நிர்ணயிக்கக் கூடாது?

அதிகம் படிக்கிற பசங்களுக்கு வாங்கும் அதே கட்டணத்தை கொஞ்சமாகப்படிக்கும் பசங்களிடமும் வாங்குவதும் ஒரு அநியாயம் தான் என்கிறார் எனக்குத் தெரிந்த ஒரு கலூரி மாணவர்.

எது மக்கள் கொஞ்சம் யோசித்தால் சரிதான்!

08 செப்டம்பர் 2011

பினாயக் சென் - ஒரு தண்டனை, பல கண்டனங்கள், சில கேள்விகள்


பினாயக் சென்!


ஒரு சிறந்த மருத்துவர். சட்டிஸ்கர் மக்களுக்காக பல சேவைகளைச் செய்தவர். சட்டிஸ்கர் அரசு தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்றவர். அவரது ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் மீண்டும் முக்கிய இடம் பெற்றுள்ளன.


தண்டனையும் பெரியது, தேசத் துரோகம். கண்டனமும் பெரியது, சர்வதேசக் கண்டனங்கள்.


ஏன் இந்த தண்டனை? எதற்கு இந்தக் கண்டனம்? கொஞ்சம் காலமாக இது தொடர்பான செய்திகளை தேடி வாசிக்கும்போது, பின்வரும் செய்திகள் கிடைக்கின்றன.


யார் இவர்? பினாயக் சென் ஒரு நல்ல மருத்துவராக பணியாற்றியுள்ளார். சட்டிஸ்கர் அரசை விமர்சனம் செய்துவந்துள்ளார்.


என்ன குற்றம்? அவருக்கு நக்சல் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட ஆராதங்களின் அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.


யாருடைய கண்டனம்? மனித உரிமை அமைப்புகள், பல சர்வேதேச அமைப்புகள் மற்றும் நமது ஊடகங்கள் எல்லாம் இந்தத் தீர்ப்பை கடுமையாக கண்டனம் செய்துள்ளன.


-----------


நான் சென்னையில் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் இந்தக் தண்டனையை கண்டிப்பதாகக் கூறினார். அரங்கு நிறைந்த கைதட்டலோடு அனைவரும் அதை ஆதரித்தனர். ஆனால் அதைப் பற்றி அங்கு தொடர்ந்து பேசாததால் அவர்கள் எந்த அடிப்படையில் கண்டனம் தெரிவித்தார்கள் எனத் தெரியவில்லை.


சட்டிஸ்கர் மாநில பிரச்சனைக்கு சென்னையில் இருக்கும் விழிப்புணர்வு மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. நானும் அங்கு கைதட்டிக் கொண்டிருந்தாலும் எந்த அடிப்படையில் இந்தக் கண்டனம் என்ற கேள்வி எழாமல் இல்லை.


பழங்குடியினர் பிரச்சனை, சுரண்டப் படும் வளங்கள், தீவிரவாதம் மற்றும் தேச பாதுகாப்பு என பலமுகங்கள் கொண்ட இந்தப் பிரச்சனை இந்தியர்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய பிரச்சனை தான்.


இந்தத் தீர்ப்புக்கு வரும் கண்டனங்களை, அவரின் விடுதலைக்கான கோரிக்கைகளை இந்த மூன்று விதமாக பிரிக்கலாம்.


1 . இது சட்டத்திற்கு புறம்பான கைது. அல்லது ஜோடிக்கப்பட்ட வழக்கு. பினாயக் சென் மாவோயிச தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லாதவர்.


2 . அவர் சில நக்சல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தது உண்மை தான். ஆனால் இந்தச் சட்டமே தவறானது. எனவே சட்டம் திருத்தப் பட வேண்டும் .


3 .மற்றதைப் பற்றி கவலை இல்லை. இவர் நல்லவர். மக்களுக்கு நன்மை செய்தவர். பிரபலமானவர். எனவே இவரை விடுதலை செய்யவேண்டும். (அவர் செய்ததது சட்டப் படி தவறாக இருந்தாலும்.)


முதல் காரணமாக இருந்தால் கண்டிப்பாக அவர் தகுந்த விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்படவேண்டும். நக்சல் அமைப்போடு தொடர்பு இல்லாதவரைக் கைது செய்வதால் அரசுக்கும் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை. தகுந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு நடத்தப் படவேண்டும். கண்டிப்பாக கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும்.


ஆனால் விடுதலைக் கோரிக்கையின் காரணம் இரண்டாவது அல்லது மூன்றாவது சொல்லப்பட்ட விஷயமாக இருந்தால், கண்டிப்பாக கண்டனங்கள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்தக் கண்டனத்தின் மூலம் சட்ட மீறலும் தீவிரவாதமும் ஆதரிக்கப் படுகின்றனவா என்பதை யோசிக்கவேண்டும்.



நாம் படிக்கும் பல செய்திகள் எந்த அடிப்படையில் வருகின்றன என்பதே குழப்பமாக இருக்கிறது.


பார்க்கலாம்.. தீர்ப்பு எந்த அடிப்படையில் வருகிறது என்று!!!


Related links:



20 ஆகஸ்ட் 2011

அண்ணா வழி


அண்ணா ஹசாரே ஆதரவு கட்சி, எதிர்ப்புக் கட்சி, அவரை சந்தேகப் படும் கட்சி என்று இந்த மூன்றில் ஒரு கட்சியில் இல்லாத யாருமே இப்போது இல்லை போலிருக்கிறது.

எங்கும் அவர் பற்றிய பேச்சுதான்

ரஜினி படம் வரும் பொது எல்லோரும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பிடித்தவர்கள் ஒரு மணிநேரம் பேசினால், பிடிக்காதவர்கள் பலமணிநேரம் பேசுவார்கள். அதுபோல ஒரு பரபரப்பு ஆகிவிட்டது நம்ம அண்ணா ஹசாரே கதை.



இவர் விஷயத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால். இவர் ஒரு மிகப்பெரிய விவாதத்தை நமக்கெல்லாம் மறு அறிமுகம் செய்து வைத்துவிட்டார் .அரசியல் கட்சி சார்பில்லாத ஒருவரால் மக்களை ஒரு விவாதம் நோக்கி திருப்பமுடியும் என்பதே ஒரு ஆச்சார்யமான நிகழ்வு தான்.

நாமெல்லாம் இவர் பெயரை கேள்விப்பட்டே கொஞ்சம் நாள் தான் ஆகிறது. அதற்குள் நமது தினசரி அரட்டையில் (அல்லது விவாதத்தில்) இவர் ஒரு முக்கிய இடம் பிடித்துவிட்டார் என்பதே அவரது வெற்றி தான்.

சரி.. அண்ணா ஹசாரே சொல்லும் லோக்பால் உனக்கு முழு சம்மதமா என்று யாராவது என்னைக் கேட்டால் அல்லது யாருமே கேட்காவிட்டாலும், உண்மையில் பிரதமரை இந்த வரம்புக்குள் கொண்டுவருவது சரியல்ல என்பதே எனது கருத்து. நாட்டின் தலைவருக்கு கண்டிப்பாக விதிவிலக்குகள் இருக்கவேண்டும். மற்றும் சில கருத்துக்களிலும் கொஞ்சம் கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

அப்படியென்றால் நானும் அவரை சந்தேகப் படும்கட்சியா? கண்டிப்பாக இல்லை.

ஊழலை நாமெல்லாம் நமது அன்றாட வாழ்கையில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு பலகாலமானநிலையில், ஊழல் ஒரு குற்றமே என இவர் புதிதாக சொல்வது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது, நாமும் பங்குகொள்ளக் கூடியது என்பது தான் எனது கருத்து.

அவரைப் பற்றி கேலி செய்து திட்டிக் கொண்டாவது அவரைப் பிடிக்காதவர்களும் ஊழலைப் பற்றி விவாதிக்கட்டும். வேறு வழியில்லை. உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணா உங்கள் சிந்தனையில் வந்துவிட்டார். அண்ணா ஹசாரே பற்றி பேசுபவர்கள் எல்லோரும் கண்டிப்பாக ஊழல் பற்றி யோசித்தே ஆக வேண்டும். இது தான் புதிய அண்ணா வழி.



---------------------------------------------



ஒரு பன்ச் உடன் முடிக்கலாம் என்று யோசித்ததில் பல பன்ச்கள் இலவசமாகவே கிடைத்தன.

அண்ணா ஹசாரே பற்றியும், காந்திய போராட்டங்கள் பற்றியும் இந்தப் பரபரப்புகெல்லாம் முன்பிருந்தே தொடர்ந்து எழுதிவருபவர் ஜெயமோகன். அவரது பஞ்ச் சில..


" அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்."

"காந்தியப்போராட்டம் என்பது எதிரிக்கு எதிரானது அல்ல. நம்முடைய உள்ளே உள்ள பலவீனத்துக்கு எதிரானது."

"போராட்டத்தின் வெற்றி என்பது உண்மையில் அதன் மூலம் மக்களிடம் உருவாகும் ஆழமான கருத்தியல் மாற்றமேயாகும்."

"சத்தியாக்கிரக போராட்டத்தின் படிமம் மலை ஏறுவதுதான். எவரெஸ்டில் ஏற வேண்டுமென்றால் முதலில் வீட்டுக்கு முன்னால் உள்ள முதல் மேட்டை ஏறியபடித்தான் ஆரம்பிக்க வேண்டும். ஏறும் ஒவ்வொரு மலையும் அதைவிட பெரிய மலையில் ஏறுவதற்கான படியாகவே இருக்கிறது."

கடைசியாக..

"காந்திய வழி வெற்றிகரமானதா என்பதை நாம் விவாதிக்கலாம். ஆனால் அதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதில் மட்டும் விவாதிப்பதற்கே ஏதுமில்லை"



சில இணைப்புகள்:

அண்ணா ஹசாரே-1
அண்ணா ஹசாரே-2

19 ஆகஸ்ட் 2011

கேணி சந்திப்பு - வண்ணநிலவன்

"நீங்களெல்லாம் என கதைகளைப் பற்றி பேசுகிறீர்கள், புகழ்கிறீர்கள். ஆனால் அதில் அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அந்தப் பாராட்டுகளை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கூச்சமாகவே இருக்கிறது.." என்ற ரீதியில் சகஜமாகப் பேசிக்கொண்டுபோனார் வண்ண நிலவன். தன் படைப்புகளை பற்றி இப்படி சொல்லும் ஒரு படைப்பாளியைப் பார்ப்பது ஒரு ஆச்சர்யம் தான்.


வண்ணநிலவன் என்ற பெயரைத் தெரிந்திருந்தாலும் நான் அவரது படைப்புகள் எதையும் படித்ததில்லை. ஞாநியின் இந்த கேணி இலக்கியக் கூட்டம் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. ஞாநி ஒரு தைரியமான பத்திரிக்கையாளர் என்ற மரியாதை இருந்தாலும், அவரது கருத்துக்களை எப்போதுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு ஆர்வம் இருந்தது. நேரமும் இருந்தது. எதிர்பார்த்ததை விடவே மிகவும் சுவையான ஒரு கூட்டமாக அமைத்தது.
தனக்கு அவ்வளவு சுவையாகப் பேசத் தெரியாது என்று ஆரம்பித்தார் வண்ணநிலவன். ஆனால் அவரது எளிமையும் நேர்மையும் அவரது பேச்சை இயல்பாகவே சுவையாக்கின.
பல ஏற்ற இறக்கங்களை, பல பொருளாதார நெருக்கடிகளைக் கண்ட தன் வாழ்கையை, சற்றும் கசப்பிலாமல், தான் கண்ட ஒரு நாடகத்தின் கதையைச் சொல்வதுபோல அவரால் சொல்ல முடிகிறது.
வண்ணதாசன், விக்ரமாதியன், பாலகுமாரன்,சோ,வல்லிக்கண்ணன் என தனது வாழ்கையில் வந்த பல ஆளுமைகளைப் பற்றியும் பேசினார்.
இவ்வளவு மென்மையாக இருக்கும் உங்களால் எப்படி துர்வாகர் என்ற பெயரில் துக்ளக்கில் அதிரடி விமர்சனம் செய்யமுடிகிறது பலர் ஆச்சர்யப் பட்டனர்.
ஆனால், அவரின் அதிரடி அவரது சுயவிமர்சனமும் எளிமையும் தான்.
தன் படைப்புகளைப் பற்றி பெருமையாக பேசுவதை அவர் தவிர்த்தாலும், அவரின் படைப்புகளை படித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நன்றாகவே பதிலளித்தார்.
தான் கிறித்துவனாக "கொஞ்ச காலம்" மாறிய கதை, எஸ்தர், கடல்புரத்தில் போன்ற படைப்புகள் உருவாக சூழல் என்று அவரது வாசகர்களுக்கும் பல வித்தியாசமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இப்போதைய இலக்கியத்திலும் தனக்குப் பிடித்த, மற்றும் பிடிக்காத சில போக்குகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
பொதுவாக அவரது பேச்சு கூட்டத்தில் புன்முறுவலையும் கரவொலியையும் எழுப்பியபடியிருந்தாலும்
சமீபத்தில் வந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்கு கூட்டத்தினர் எழுப்பிய பலத்த கரவொலி பார்த்து எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது.
சினிமாவைப் பற்றி எதுசொன்னாலும் மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அது.

எழுத்தாளர் எஸ்ரா, இயக்குனர் பாலுமகேந்திரா ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஞானியும் எஸ்ராவும் பல கேள்விகளைக் கேட்டு தங்களை வாசகர்களாகவே காட்டிக்கொண்டது இன்னும் சிறப்பு.
வண்ணநிலவனை கலந்துரையாடலுக்கு அளித்த ஞாநி பாராட்டுக்குரியவர்.
கூட்டத்தை சிறப்பாக நடத்தியது மட்டுமலாமல், இனிப்பு,காரம், சுண்டல், தேநீர் என விருந்தோம்பலிலும் அக்கறை காட்டினார் ஞானி. அவருக்கு நன்றிகள்.
சில துர்வாசகர் கட்டுரைகளை துக்ளக்கில் படித்ததைத் தவிர இவரது படைப்புகளை நான் படித்ததில்லை என்றாலும், தனது இயல்பான கலந்துரையாடல் மூலம் ஒரு சிறப்பான மலைப் பொழுதை அளித்தார் வண்ணநிலவன்.
வண்ணநிலவனின் இலக்கியத்தை வாழ்கையை நாடகம் போல் எளிதாகப் பார்க்கும் அவரது இயல்பே தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.
சில காலமாக ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு, தான் எழுதுவதற்கு சில விஷயங்களை யோசித்து வைத்திருப்பதாகச் சொன்னார் வண்ணநிலவன். எழுதினால் சிறப்பாக எழுதவேண்டும் என்பதற்காகவே இன்னும் தொடங்காமலிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இருந்த உற்சாகம், அவரது புதிய படைப்புகள் வர வழிசெய்யட்டும்.