Unordered List

26 ஆகஸ்ட் 2013

செத்தவன் சொன்னது


அவனை எனக்கு முன்பே தெரியாதென்பதில்லை, அவன் செத்துவிட்டான் என்பதில் யாருக்கும் சந்தேகமேதுமில்லை, ஆனால் அவன் மரணத்தில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே அவனே பேச ஆரம்பித்ததும் ஒரு வகையில் நல்லதே.

எல்லோரையும் போலவே சிறுவயதில் அவனுக்கும் அந்த பயம் இருந்திருக்கிறது, சிறுவயதில் தான் பயம் என்று சொன்னதும், விவரம் தெரிந்தபின் அந்த பயத்தைக்கடந்துவிட்டான் என்று பொருளல்ல. விவரம் தெரிவதென்பது பயங்களை சிறப்பாக ஒளித்துவைப்பது என்பது தானே. பயத்தை ஒழிப்பது கடினமே தவிர ஒளிப்பது இல்லையே.

ஆனால் எலோருக்கும் இருக்கும் அந்த மரண பயத்தை அவன் எப்படிக்கடந்தான் எனக்கேட்டேன். மரண பயத்தை வெல்ல ஒரே வழி மரணம்தான் என்றான். நல்ல பதிலாகத்தான் தோன்றியது. அதை எப்படி நிகழ்த்திக்கொண்டான் எனக்கேட்டேன்.

சில திருமணங்கள் தானாக நடப்பது போலத் தோற்றமளித்தாலும், எல்லாமே நடத்தி வைக்கப்படுபடுபவைதான். சில வெளிப்படையாகத்தெரியும் சில தெரியாது, மற்றபடி வித்தியாசமேதுமில்லை. அதுபோலத்தான் மரணங்களும். மற்ற மரணங்களைப்பற்றி அவன் பேச அவனது தார்மீகம் இடம்கொடுக்கவில்லையென்றாலும், அவனது சொந்த மரணத்தைப் பற்றி பேச அவனை யார் தடுப்பது. தற்கொலைதான் இங்கே குற்றம், மரணமல்ல.

அவனது மரணத்துகாக தங்கள் உயிர், பொருள் ஆவியனைத்தும் கொண்டு உழைத்தவர்கள் பலர். அதனால் யாரால் வந்தது வந்தது அந்த மரணம் என்று யாருக்கும் தெளிவாகத்தெரியவில்லை. அதுவே அவனது மரணத்தின் மர்மம். மரணத்தை அவன் மிக விரும்பியேற்றுக்கொண்டான் என்றாலும், மரணத்தைவிட அந்த மர்மம் அவனுக்கு மிக விருப்பமாக ஆனதாகத்தெரிவித்தான். இதில் என்ன வேடிக்கையென்றால், இன்னும் பலர் அவனது மரணத்துக்காக முயற்ச்சிசெய்து கொண்டிருப்பதுதான். ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டவனை இன்னும் பலர் கொல்ல முயற்சிப்பதைப்பார்பதே அவனது வேடிக்கை. இதுவே அவன் பேச ஆரம்பித்ததின் நிமித்தமுமாகக்கூட இருக்கலாம்.

(இன்னும் சொல்வான்)

16 ஆகஸ்ட் 2013

அதிகாலை வெளிச்சம்

அறையில் இருள் பரவியிருந்தது, போர்வையினுளிருந்து அனிச்சையாக கையை நீட்டி இருளுக்குள் துழாவி, எனது செல்பேசியை எடுத்தேன். அறையில் பரவியிருந்த இருளின் ஒரு துளியே அதிலும் இருந்தது. சரிதான் அதில் சார்ஜ் இல்லை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அதை இருளுக்குள் புதைத்துவிட்டு, நான் போர்வைக்குள் புதைந்தேன். அது நள்ளிரவாகயிருந்திருக்கவேண்டும்.

எனக்கு எப்போதுமே கடிகாரம் பயன்படுத்தும் பழக்கமில்லை. கைக்கடிகாரம் தான் மனித நாகரிகத்தின் கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய அபத்தம் என்பது எனது கருத்து. பள்ளி, அலுவலகம் செல்வதற்கு மணி பார்த்தால் கூட பரவாயில்லை. ஆனால் மனிதர்கள் சாப்பிடுவதையும் தூங்குவதையும் கூட அது தான் தீர்மானிக்கிறது எனபதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. மனிதர்கள் இயற்கையின் கடிகாரத்தை புறக்கணிப்பதே பல பிரச்சனைகளுக்குக் காரணம் எனபதும் எனது துணிபு. இதற்கான தார்மீக எதிர்ப்பாகவே நான் கைக்கடிகாரத்தை துறந்தது. இப்போதெல்லாம் செல்பேசி உடலின் பகுதியாகவே ஆகிவிட்டிருக்கிறபடியால் உண்மையில் தனியாக கைகடிகாரம் இல்லாதது ஒரு பிரச்சனையாகவும் இருப்பதில்லை.

முழு விழிப்படைந்து எழுந்தபோது காலைப்புத்துணர்ச்சியை உணர்ந்தேன். அந்த ஐந்துமணி வெளிச்சம் கண்களுக்கு இதமாக இருந்தது. ஒன்பது மணிக்குத்தான் அலுவலகத்துக்குச் செல்ல புறப்பட வேண்டுமென்றாலும், காலையில் ஓட்டப்பயிற்சிக்காக வழக்கப்படுத்திக்கொண்டது இந்த ஐந்து மணி பழக்கம். தாமதமாகத் தூங்கினால் காலையில் இருக்கும் கண்ணெரிச்சல் அறவே இல்லாதது கொஞ்சம் ஆச்சர்யமளித்தது. அந்த ஆச்சர்யத்துக்கு ஜன்னல் வழியாக வந்த மழைச் சத்தமும் மெல்லிய குளிரும் பதில்களாக அமைந்தன. குளிர்நேரங்களில் மக்கள் அதிக புத்துணர்ச்சியோடு இருப்பது இயல்பு தானே. இயற்கை எப்போதுமே சரியான பதில்களைத் தந்துகொண்டு தான் இருக்கிறது. நாம்தான் சரியாகக் கேட்பதில்லை என நினைத்துக்கொண்டேன்.

அணைந்திருந்த செல்பேசியை மின்னிணைத்துவிட்டு பல்துலக்க ஆரம்பித்தேன். காலைகடன்களை முடித்து குளியலறையிலிருந்து வந்து செல்பேசியை எடுத்து உயிர்ப்பிக்க உடனே அது கதறியது.

என் நண்பனின் அழைப்பு அது.

"ஏண்டா உனக்கு எவ்ளோ நேரம் ட்ரை பண்ணுறது. உன் வீட்டுக்கு வெளியேதான் நிக்கிறேன். சீக்கிரம் வா" என்றான்.

சில சமயங்களில் இவனது கடமை உணர்ச்சிக்கு இப்படிதான் வெளிப்படும். இந்த மழையிலும் வழக்கமாகச் செல்லும் ஜாக்கிங் செய்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் அவனது கடமை உணர்வு கண்டு நெஞ்குருக்கொண்டே காலை ஓட்டப்பயிற்சிக்குத் தயாரானேன். அவன் ஆர்வத்துக்கும் காரணம் இல்லாமலில்லை. மழையை எதிர்பார்த்து மழைக்கான ஜெர்க்கின்களை நேற்றுதான் நானும் அவனும் வாங்கியிருந்தோம், அது உடனே பயன்பாட்டுக்குவருவதில் ஒரு மகிழ்ச்சி. மழை நேரத்திலும் அதிகாலை ஓட்டப்பயிற்சிக்கு சென்றே ஆகவேண்டும் என்கிற அவனது ஆர்வத்துக்கும் இதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

நல்ல வேலையாக அப்போது  அதைச்  செய்தேன். வெளியே செல்ல கதவைத் திறக்கும் முன்பாக ஜன்னல் வழியாக அவனைப்பார்த்தேன், மழைக்கு அவன் எப்படி தயாரகியிருக்கிறான் என்று பார்க்க.

அவன் தயாராகத்தான் இருந்தான். குடையைப்பிடித்தபடி, என் வீட்டுக்கதவை பார்த்துக்கொண்டு.  அலுவலகம் செல்லும் உடைகளுடன். 

29 ஜூலை 2013

மனிதகுல மானமும் சில குருவிகளும்

அந்தக் குருவியை அதற்குமுன் அங்கே நான் கவனித்து இல்லை, அதுவும் என்னை அந்த அதிகாலை நேரத்தில் கவனித்திருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் அன்று காலை அந்த சந்திப்பு நடந்தது.

அந்தக் குருவி துயிலெழுந்த நேரமோ அல்லது அதன் நிமித்தமோ நானறியேன். ஆனால் நான் எழுந்தது காலை சுமார் நாலறை மணி. அதற்கான காரணம் சமீபத்தில் வெளிவந்துள்ள சிங்கம் 2 திரைப்படம், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் அந்தத்திரைப்படத்தின் விளம்பரங்கள்.

தற்போதைய நிலைமையில் நகரில் பயணம் செய்யும் எவரும் கடுமையாக முறைக்கும் சூர்யாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது, எந்தப் பக்கம் திரும்பினாலும் சூர்யா நம்மைப் பார்த்து முறைத்தபடியிருக்கிறார், அவருக்குப் பின் அனுஷ்கா பட்டாசாக சிரித்தபடி இருப்பது கொஞ்சம் ஆறுதல்.

உண்மையில் அந்த விளம்பரம் என்னைக் கவர்ந்ததுக்குக் காரணம் சூர்யாவின் முறுக்கேறிய தோற்றமா அல்லது, அனுஷ்கா பற்றிய எண்ணமா என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் நாட்களாகவே உடற்பயிற்சியைத் தொடர்வதைப் பற்றி யோசித்துகொண்டிருந்த எனக்கு உடனடி காரணமாக இருந்தது அந்த விளம்பரம் தான் என்று  உறுதியாகவே சொல்ல முடியும்.

பக்கத்திலிருக்கும் பூங்காவில் அதிகாலையில் ஓட்டம், பின்னர் கொஞ்சம் உடற்பயிற்சிகள் என திட்டம் உருவானது.

அதிகாலையில் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தவனை வரவேற்றது ஒரு குருவியின் குரல். நான் வருவேன் என்று எதிர்பார்த்து அது அங்கே இருக்கவில்லை என்பதும் என்னை வரவேற்பது அதன் உத்தேசமில்லை என்பதும் தெளிவு. இருந்தாலும், அதன் இனிமையான குரல் அந்த அதிகாலைவேளையில் எனக்கு மிகச் சிறப்பான வரவேற்பாக அமைந்தது என்பது உண்மை.


இது வேற குருவி


அந்த வரவேற்பை மனதுள் ரசித்துக்கொண்டே பூங்கா செல்ல எனது பைக்கை உயிர்ப்பிக்க முயற்சிசெய்தேன். பலநாட்கள் எடுக்கப்படாததாலும் கடந்த இரு நாட்களாக பெய்த மழையாலும் பைக்கின் ஸெல்ப் ஸ்டார்ட் வேலை செய்ய மறுத்தது. பிறகென்ன உதைத்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். மூன்றாவது உதையில் பைக் உயிர்பெற்று அந்த அதிகாலை அமைதியை கிழித்து உறுமியது. சொல்லிவிட்டுப்போகலாம் என குருவியைப் பார்க்க அங்கே அது இல்லை. இந்த பைக் களேபரத்தில் பயந்து பறந்துவிட்டது போல.

அட என்ன  செய்துவிட்டேன். அதிகாலை காலை வேளையில் ஒரு குருவியை மிரளச் செய்துவிட்டேனே, அதுவும் எனக்கு வரவேற்பாக அமைந்த குரலுக்கு சொந்தமான குருவியை. குருவியின் சத்தம் எனக்கு வரவேற்பாக அமைய, நான் உருவாக்கிய சத்தம் அதற்கு மிரட்டலாக அமைந்துவிட்டதே என்ற குற்ற உணர்வுடன் வண்டியைக் கிளப்பினேன்.

இதே நினைப்புடன் பூங்காவை அடைந்து ஓட்டத்தை தொடங்கினேன். காலையின் மெல்லிய வெளிச்சமும், லேசானக் குளிரும், நேற்றைய மழையின் ஈரமும் அந்த இடத்தை ரம்யமாக ஆக்கிகொண்டிருந்தன. அதிகாலையில் எந்த ஒரு இடமும் நாம் பார்க்காத  இன்னொரு பரிணாமத்தில் இருக்கிறது. 

லேசான ஈரம் கொண்ட பாதையில் இருந்த சரளைக்கற்களில் ஷூ அணிந்து ஓடும்போது ஒரு சீரான ஓசையை உருவாக்கிக்கொண்டிருந்தது. தூரத்தில் தவளைகளின் ஒலிகளும் பின்னணி போல வந்து கொண்டிருந்தன.  ஆனால் இந்த எல்லா ஓசைகளுக்கும் சிகரம்போல இருந்தது அங்கிருந்த குருவிகளின் ஒலிகள்.

குருவிகளை கவனித்த தருணத்தில் மீண்டும் அந்தக் குருவியின் நினைவு. என்ன இருந்தாலும் காலையில் என்னை வரவேற்ற குருவியை மிரளச்செய்தவன் தானே நான். இன்னா செய்தவனுக்கும் இனிமையை அள்ளி வளங்கிகொண்டிருந்த  குருவியினத்தைப்பார்கையில் உண்மையில் சந்தோஷத்தை விட ஒரு மனிதனாக ஒரு குற்ற உணர்ச்சியே தோன்றியது.

பலவிதமான குருவிகளின் சப்தங்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு அற்புத இசைவெளி அங்கே உருவாகிக்கொண்டிருந்தது. அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில் மழையில் புத்துணர்ச்சியடைந்த பசேலென்ற மரங்கள் பார்க்கும்  கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. அந்த மரங்களுக்கு உயிர்கொடுப்பது போலிருந்ததும் அவற்றின் மீது பறந்து விளையாடிய குருவிகளின் நடனங்கள்தான். சப்தம் கேட்டு அருகே இருந்த நீர்த்தேக்கதைக் கவனித்தேன், கரையோர மரத்திலிருந்து  நீரை உரசியபடி சென்ற அந்தக் குருவி  அப்படியே  நீரில் மிதக்க அதைச் சுற்றி வட்ட வட்டமாக அலைகள் உருவானது,  அமைதியாக இருந்த தண்ணீரும் துயிலெலுந்ததுபோல சிலிர்த்துக்கொண்டது.

காலைவேளை குருவிகளின் வேளைபோலும், அனைத்தையும் உயர்ப்பிப்பது குருவிகளின் கடமை,  இவ்வேளையில் குருவிகளைத் தவிர்த்து ஒரு அனுபவம் இல்லை,  நாளின் எல்லா விஷங்களையும் குருவிகள் தான் ஆரம்பித்து வைக்கின்றன என்று தோன்றியது.   இந்தக் குருவியினத்துக்கு நான் மட்டுமல்ல மனிதர்கள் உட்பட ஒட்டுமொத்த சூழலும் கடன்பட்டிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.

அப்போதுதான் அவர்களைக் கவனித்தேன், மூன்று இளைஞர்கள். ஜிம்மில் இருக்கும் திரட்மில்லில் ஓடும் பாவத்துடன் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தனர்.  மூவரின் காதுகளிலிருந்தும் வயர்கள் புறப்பட்டு அவர்களின் சட்டைகளுக்குள் மறைந்தன. இன்னும் கவனித்ததில்  பெண்கள் நடைப்பயிற்சிக்கு வந்தால் ஐபாட் உடன் தான் வரேவேண்டும் என்று தீர்மானம் இருப்பது தெரியவந்தது.

இசையைப் பற்றி அப்போது ஒரு ஆச்சரியம் தோன்றியது.  ஒரு மழைக்கால அதிகாலையில் உருவாகும் குருவிகளின் ஒலிகளைகூட துச்சமென மதித்து புறக்கணிக்கும் அவர்களிடம் அதைவிட அரிதான எதோ இசை இருக்கிறது என்பதே மிகவும் ஆச்சர்யமூட்டும் சிந்தனையாக இருந்தது. அந்த இசை என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் எழாமல் இல்லை.

வேறு சிலர், அவர்களுக்கு ரகசியத்தில் நம்பிக்கை இல்லை. தங்களிடம் இருந்த மொபைல் போன் மூலம், தங்களுக்கான இசையைத் தங்களைச் சுற்றி வளையம் போல அமைந்து நடந்து சென்றனர்.  ஐபாடு, மொபைல் போன் அல்லது ஒரு சைனா செட்டாவது இல்லாமல் இவர்கள் வெளியே வருவது இல்லை, பிறகெப்படி குருவி அவர்களிடம் நெருங்குவது.

இன்னொருவர், இவரிடம் ஹெட்போன் இல்லை. பொதுவாக நாம் அரசு அலுவலகங்களில் காணக் கிடைக்கும் இறுகிய  அதிகார முகத்துடன் நடந்துகொண்டிருந்தார், அங்கே அவர் எழுந்தளியிருப்பதே அவ்விடத்துக்குப் பெருமை என்ற தோரணையுடன். இவருடன் அவர் நடக்கும் வேகத்துக்கு ஈடுகொடுத்தபடி இருவர் கூடவே ந்டந்துகொண்டிருந்தனர். அந்த இருவரின் ”ஆமாம்” சத்தங்களைத்தாண்டி குருவியின் சத்தம் அவரை அடைவது சந்தேகம் தான்.

தனது இனிமையால் எல்லோரையும் வென்றுவிடலாம் என நினைக்கும் குருவியினத்தை, தங்கள் புறக்கணிப்பாலேயே  மனிதர்கள் வென்றுவிடுகிறார்கள் என்றறிந்த திகைப்புடன் திரும்பிய நான், என் பைக்கின் கண்ணாடியில் தன்முகம் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குருவியை பார்த்துக்கொண்டு நின்றேன்.

"அப்பா...இங்க சூப்பரா எவ்வளவு குருவி இருக்கு!!.."  எனக்குப் பின்னால் குருவியைக் கவனிக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன். அந்தச் சிறுவன் தன் அப்பாவிடம் கேட்டான்.

 "இதை நம்ம வீட்டுக்குப் பிடிச்சுக்கிட்டுப் போகலாமா?"

02 ஜூலை 2013

இலக்கிய தீபாவளி 2013

"நீங்க சொல்லுங்க” என்று ஜெயமோகன் என்னைப் பார்த்தார். அதை எதிர்பார்த்துதான் கையுயர்த்தியிருந்தேன் என்றாலும், வாய்ப்பு வந்தவுடன் சட்டென கொஞ்சம் பதட்டமும் தோன்றியது. அப்போது விவாதத்திலிருந்த கதையைப் பற்றி எனது கருத்தை ஒரு கேள்வியாக முன் வைத்தேன்.

விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் படைப்புகள் பங்கேற்பாளர்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்டிருந்ததால், தகுந்த தயாரிப்புகளுடனேதான் நான் சென்றிருந்தேன். அப்போது விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது பாரதியின் துள்ளல் நடையில் மொழிபெயர்க்கப்பட்ட தாகூரின் ஆசாபங்கம். படித்தவுடனே பிடித்த மிகவும் பிடித்த படைப்பு. சமீபத்தில் வாசித்த சுஜாதாவின் ’ரத்தம் ஒரே நிறம்’ கொடுத்த ஆர்வத்தில் சிப்பாய்க் கலகம் பற்றி மேலதிகமாகப் படித்த தரவுகளையும் சேர்த்து எனக்கு இந்தக்கதையைப் பற்றிய ஒரு கருத்து உருவாகியிருந்தது.

பொறுமையாகக் கேட்ட ஜெயமோகன், “இது இக்கதையின் மிக குறுக்கப்பட்ட வாசிப்பு. இதில் இந்தச் சம்பவங்கள் இருக்கலாம் ஆனால் கதையின் மையம் வேறு” என்றபடி விவாதத்தை வேறுதிசை நகர்த்தினார். எனது அம்பு சுட்டு வீழ்த்தப்பட்டது என்றுண்ர்ந்தேன். விவாதம் செல்லும் திசையை இன்னும் கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தேன். விவாதத்தின் போக்கில் இன்னும் பலரின் கருத்துக்களும் சில கட்டுரைகளும் கூட சுட்டு வீழ்த்தப்படுவதைப் பார்க்க கொஞ்சம் மகிழ்ச்சியடைந்தேன்.

வருடாந்திர விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வு மிகவும் எதிர்பார்க்கப்படும் இலக்கிய தீபாவளி போலாகிவிட்டிருக்கிறது. இருந்தாலும் இந்த வருடம் fireworks கொஞ்சம் அதிகம் தான்.



சென்ற வருடம் சில மூத்த படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய வாசிப்பு மற்றும் விவாதம் என்று அதிகரித்த வாசகர் பங்களிப்பு இந்த வருடம் இன்னும் வளர்ந்து கால வரிசையில் வகைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில படைப்புகளைப் பற்றிய விவாதம் என்று வளர்ந்துள்ளது. கொடுக்கப் பட்ட காலத்தின் முக்கிய படைப்பு என்று தாங்கள்  கருதுவதை ஒரு காலகட்டத்துக்கு ஒருவர் என்ற முறையில் பங்கேற்பாளார்களே தேர்ந்தெடுத்து, அதன் நியாயங்களை விளக்கி திறனாய்வை வழங்கினர். அதன் பின் அப்படைப்புகளைப் பற்றிய விவாதம் தொடர்ந்தது.

சில கட்டுரைகள் வரவேற்கப்பட்டன, சில அவதானிப்புகள் பாராட்டப்பட்டன. கட்டுரைகளோ அல்லது கருத்துக்களோ, கொஞ்சம் வலுவில்லாமல் இருந்தாலும் சந்தேகமின்றி நிராகரிக்கப்பட்டன. இருப்பினும் எப்போதும் நகைச்சுவைக்கும் வெடிச்சிரிப்புகளுக்கும் இடம் இருந்துகொண்டேயிருந்தது. எல்லோருமே படைப்புகளைப் படித்திருந்தாதால் அனைவருக்குமே சொல்ல ஏதாவது இருந்தது, எல்லாக் கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டன. படைப்புகள் அதிகம் இருந்ததினால் நேரம் மிகக் கச்சிதமாக கையாளப்பட்டது.

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வாசகர்களின் தரம் பற்றி நம்பிக்கை அதிகரித்து வருவதின் அறிகுறியாகவே இந்தக் கறாரான அணுகுமுறையைப் பார்க்கிறேன். அடுத்தமுறை பங்கேற்பாளர்கள் இன்னும் அதிக தாயாரிப்புகளுடனும் தரவுகளுடனும் வரவேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது, கூடவே உண்மையை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பும்.

இந்தக் கூடலின் முக்கிய அடையாளமாகிவிட்ட கம்பராமாயண வாசிப்போடு துவங்கியது கூடல். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் ஜடாயு இருவரும் கம்பராமாயணத்தின் மிக சுவையான மற்றும் ஆழமான வாசிப்பை வழங்கினர். ஜெயமோகன் அவ்வபோது தொட்டுக்காட்டும் உச்சங்கள் செரிவைக் கூட்டின. பிறகு நடந்தது தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைப் பற்றிய விவாதம்.

கடைசிநாள் பேராசிரியர் ஞானசம்பந்தன், வில்லிபாரதம் பற்றி ஒரு சொற்பொழிவை வழங்கினார். ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதை திறனாய்வு செய்யும் இந்தக் கூட்டத்தின் முறைக்கு நேரெதிராக பல கருத்துக்களை ஒன்றுடோன்று இணைத்து நகைச்சுவை கலந்து சரவெடி போல் பேசும் முறை அவருடையது. இருப்பினும் இதுவும் மிகவும் ரசிக்கும்படிதான் இருந்தது.

முதல்நாள் கூட்டத்தின் ஆரம்பத்தில் மைக் வேலை செய்ய மறுத்தது. அதை சரிசெய்ய முயற்சியும் நடந்தது. ஆனால் அது சரியாகிவிடக்கூடாதே என்று நினைத்தபடி இருந்தேன். அதன் படியே கடைசிவரை அது ஒத்துழைத்தது. விவாதங்களையும் வாசிப்புகளையும் நேரடிக்குரலில் கேட்பது ஒரு privileged experience. உரையாடல்களுக்கு இன்னும் ஒரு நெருக்கமான உணர்வை அது தந்தது. மாலையில் நடந்த இசை நிகழ்ச்சிகளும் அப்படியே. நேரடியாக பாடும் குரலை மைக் இல்லாமல் நேரடியாகப் கேட்பது ஒரு வரம். இளையராஜாவே பாடினாலும், நமது அனுபவம் நமது ஸ்பீக்கரின் தரத்தை பொருத்ததுதான் இல்லையா, மனித குரலை விட சிறப்பான ஸ்பீக்கர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் நான் நம்புகிறேன். அந்தக் குளிர் இரவில் நெருப்பு வெளிச்சத்தில் சில உன்னத குரல்கள் தரும் உணர்வில் இருந்த நேரத்துக்கு நன்றி சொல்லி முடியாது.


இந்த முறை சென்ற கூட்டங்களைவிட அதிகமான வாசகர்கள் பங்கேற்றனர். கூட்டம் மிக நேர்த்தியாக நடந்தது. அருமையான சூழல், உணவு மற்றும் மிக நட்புணர்வோடு நண்பர்கள் என மூன்று நாட்களும் மிக அருமையாக நடந்தன. ஈரோட்டில் நடந்த அறம் வெளியீட்டு விழாவில் விஜயராகவன் சாரை முதலில் சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு வெற்றிகரமான நிகழ்ச்சிகளுக்குப் பின்னாலும் அவரது நல்லெண்ணம் கொண்ட உழைப்பு இருக்கிறது. ஆரம்பம் முதல் நிறைவுவரை அவரே தொகுத்து வழங்கினார், கூடவே ஒரு சிறப்பான திறனாய்வையும். இம்முறை நண்பர்  சேலம் பிரசாத் எடுத்துக்கொண்ட பொறுப்புகளும் குறிப்பிடத்தக்கது.

விஷ்ணுபுரம் குழுவின் ஒரு முக்கிய அம்சம் அதன்  diversity. புதிய நட்புகளும் உருவாகவும், வெவேறு துறைகளிலிருந்து வந்திருந்த பலரின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும் இடைவெளிகளும் நடைகளும் மிக உதவியாக இருந்தன.

வாழ்க்கையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும், இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என கலந்துகொண்டேன். இது நல்ல முடிவாக அமைந்துவிட்டது.  எல்லா முறையிலும் புத்துணர்ச்சியளித்த நாட்கள் இவை.

சில படைப்புகளைப் பற்றி நான் எடுத்த குறிப்புகளையும், விவாத்தில் நான் எடுத்துக்கொண்ட அவதானிப்புகளையும் சேர்த்து குறிப்புகளாக எழுதவேண்டும் என்ற திட்டம், படிக்கவேண்டிய சில புத்தகங்கள், தொடரவேண்டிய சில விவாதங்கள் என இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக செய்ய வேண்டியவை உற்சாகமாக உருவாகிவந்தவண்ணம் இருக்கின்றன.

14 ஜூன் 2013

குப்பைவண்டி காக்கை

ஒரு  நெரிசலான சாலையில் வாகனங்கள் பிதுங்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தன, கடுமையான போக்குவரத்து நெரிசல். அதில் நிரம்பிவழியும் குப்பைகளோடு ஊர்ந்துகொண்டிருந்தது ஒரு குப்பைலாரி. அந்த லாரியின் மீதுதான் அந்த காக்கை அமர்ந்திருந்தது.
தாளமுடியாத  சோகத்தில் இருந்தது  காக்கை. பக்கத்திலிருக்கும் காக்கை தனது சோகம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கிறதே என்ற கோபம் வேறு.
யாரும் கண்டுகொள்ளாததால், தனது சோகங்களைப் பற்றி தானே பேச ஆரம்பித்தது.
"இவ்ளோ பெரிய ஊருக்கு இந்த ரோடு எப்படி தாங்கும். இதைக்கூட ப்ளான் பண்ணாம இருக்காங்களே, சரி அப்படியே  ரோடு இருந்தாலும் எல்லோரும் இந்த நேரம் தான் வரணுமா.. சரி அப்படியே வந்தாலும் இப்படித் தான் ட்ராபிக் சென்ஸ் இல்லாம ஓட்றதா.. இதையெல்லாம் மாத்துறது இருக்கட்டும், கேக்கக் கூட யாருமே இல்லையே.. இந்த வேகத்துல இந்த வண்டி போனா இன்னும் எவ்ளோ நேரம் போகும்..."
பொறுமையாகக் கேட்டது பக்கத்திலிருந்த காக்கை. லாரியின் ஓட்டுனர் இருக்கையில் வியர்வை வெள்ளத்தில் அமர்ந்திருந்த மனிதனையும் பார்த்தது அது. பிறகு புலம்பிய காக்கையைப் பார்த்து,
"நீ சொல்லுறதெல்லாம் சரியான பிரச்சனையா இருக்கலாம், ஆனா இதுல உன்னோட பிரச்னை என்ன?" என்று சொல்லியபடி பறந்து சென்றது.
கதையின் நீதி:
சரியான பிரச்சனையெல்லாம் நம்முடைய பிரச்சனையாக இருக்கவேண்டியது இல்லை.