Unordered List

13 ஜூன் 2020

இரு 'முதல்வன்'கள்

முதல்வன் படத்தின் தெலைக்காட்சி பேட்டி காட்சி இன்றும் மறக்க முடியாதது. அதே போன்ற ஒரு காட்சி சமீபத்தில் வந்த ஒரு விஜய் சேதுபதி படத்தில் கூட முயற்சி செய்திருப்பார்கள். சினிமாவை மீறி பல டிவி பேட்டியாளர்களுக்கு அப்படி ஒரு பேட்டி எடுப்பது இன்னும் கனவாக இருக்கிறது, இன்றைய யுடியூப் காலத்தில் கூட பேட்டி எடுப்பவர்களின் உடல்மொழியில் அந்தக் காட்சியின் சாயலைக் காண முடியும். ஆனால் அந்தக் காட்சியில் அர்ஜூனின் உடல்மொழி ரபி பெர்னாடின் உடல்மொழியின் சாயலில் இருந்தது. 

தமிழ்நாட்டில் தனியார் டிவிக்கள் வந்த புதிதில் உருவான ஆளுமையான ரபி பெர்னாட், நிதானமான குரலில் அறிவார்ந்த முறையில் பரபரப்பான பேட்டி எடுப்பவராக இருந்து, தனியாக ஒரு டிவி சேனல் ஆரம்பிக்கும் அளவுக்கு பிரபலமானவராக இருந்தார். அதன் பின் அவரது பயணம் ஜெயா டிவி, அதிமுக எம்பி என மாறி பரபரப்பில் இருந்து விலகிவிட்டார்.




சேட்டலைட் என்று தொடங்கிய தனியார் ஊடகங்கள் இன்று யுடியூப் வழியாக இன்னும் விரிவடைந்திருக்கிறது. இன்று வருபவர்கள் பின் தொடர இன்று இரண்டு ஆளுமைகள் அதாவது இரண்டு முதல்வன்கள் நம்முன் இருக்கின்றார்கள், ஒன்று உண்மையான ரபி பெர்னாட், இன்னொன்று அவர் சாயலில் வந்த முதல்வன் புகழேந்தி.

ஆனால் இன்று பொது மக்களும், ஊடகத்தில் இருப்பவர்களும் தான் பின் தொடரா யாரும் இல்லாத நிலையில் ஒரு உச்சம் தொட்ட ரபி பெர்னாட்டை மறந்துவிட்டனர், ஆனால் அவரது சாயலைக் கொண்ட முதல்வன் பேட்டி இன்றும் நினைவில் இருப்பதோடு அவர்களின் உடல்மொழியிலும் வாழ்கிறது.  ஒரு காலகட்டத்து ஆளுமையை காட்டும் புனைவு நிஜ வாழ்க்கையை வெல்லும் இடம் இது. ஏன்னெறால் அது ஒரு காலகட்டத்தின் ஸ்னாப்ஸாட். ஆனால் நிஜ வாழ்க்கை ஒரு உச்சத்துடன் நிறைவடைவதில்லை, அது தொடர்ந்துவரும் வரும் நிதர்சனங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

இப்போதைய ரபிபெர்னார்ட், தனது உச்சத்தை காட்சிப்படுத்தியிருக்கும் முதல்வன் காட்சியை இப்போது பார்த்தால் என்ன நினைப்பார் என்று யோசிப்பது ஒரு புனைவுக்கான களம்.

அந்தப் பேட்டியின் சாயல் ரபி பெர்னார்ட் என்றாலும் முதல்வன் புகழேந்தி  என்பவர் அன்றைய பேட்டியில் ரபி பெர்னார்ட், அரசியல் எதிர்பார்ப்பில் ரஜினி , அதன்பின் தங்களது அரசியல் பார்வை என அப்போது இருந்த சூழ்நிலையில் சுஜாதா மற்றும் ஷங்கர் உருவாக்கிய புனைவு. 

இது இப்படி இருக்க, புகழேந்திக்கு கச்சாப்பொருள் தந்த இன்னொருவரான ரஜினி,  அதன்பின் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதே துறையில் இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதும் , இன்றும் அவர் வருவாரா என்ன கொள்கை சொல்வார் என மக்களை யோசிக்க வைப்பதும், எதிரிகளை எரிச்சலடையச் செய்வதும், கட்சிகளை பதட்டத்தில் வைத்திருப்பதும் மெயின்டெயின் செய்துகொண்டிருப்பதும் இன்னொரு சுவாரஸ்யம்.