அன்று...
"நான் வெறும் நடிகன் மட்டுமல்ல. வேற ஏதாவது செய்வேன்.. அது என்னவா வேணும்னாலும் இருக்கலாம்" என்றார் ரஜினி. பல ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் நடந்த ஒரு கலைவிழாவில்.
"அது என்னவா வேணும்னாலும் இருக்கலாம். அரசியலை நினைக்காதீங்க... அரசியலை நினைக்காதீங்க..." என்று நிறுத்தியவர் "இருக்கலாம்!" என்று முடித்தபோது கரகோஷம் களைகட்டியது. (நினைவில் இருந்து எழுதுகிறேன். யாரிடமாவது லிங்க் இருந்தால் உதவவும்.)
இன்று..
கர்ணன் பரசுராமனிடம் பெற்ற சாபம் போல, தனக்கு முக்கியமான தருணங்களில் சரியாகப் பேசவருவதில்லை என்று தன்னைப் பற்றி தன்னடக்கமாகச் சொல்லிக்கொண்டு தனது பேச்சை அவர் ஆரம்பிதபொழுதே நமக்குத் தெரிந்துவிட்டது, இன்றும் ரஜினி ஒரு அட்டகாசமான உரையை நிகழ்த்தக் போகிறார் என்று.
ரஜினியை வெறும் மசாலாப் பட நாயகன் என நிறுவ பலர் எப்போதும் பதடத்துடன் முயற்சிசெய்து பார்த்தாலும் அவர் தனது ஆளுமையை தான் செய்யும் எதிலும் இயல்பாக வெளிப்படுத்தி வருபவர். அது மேடைப்பேச்சிலும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
ரஜினி இயல்பிலேயே மக்களைக் கவரக்கூடியவர். எனவே அவர் திட்டமிட்டு செய்யும் செயல்களைவிட இயல்பாக செய்யும் செயல்கள் மிகச் சிறப்பாக இருக்கும். (சச்சின் பற்றிகூட எனக்கு இப்படி ஒரு கருத்து உண்டு.)
எஸ்ராவைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் எனக்கு ஒரு கல்லூரிப் பேராசிரியர் பிம்பம் தான் மனதுக்குள் வரும். அவர் ஒரு தகவல் சுரங்கம் என்றே சொல்லலாம். திட்டமிட்டு, தகவல்களை அடுக்கித் தரும் படைப்புகள் அவருடையது. என்றாலும் விக்கிபீடியா எல்லாம் எளிதாக கிடைக்கும் இந்தக் காலத்தில் என்னை அவரின் எழுத்துக்கள் அதிகம் கவர்வதில்லை.
எஸ்ராவின் பேச்சுக்களும் எழுத்துகளும், சினிமா விமர்சனங்களும் தகவல்களை அள்ளித்தந்தாலும், அந்தப் படைப்புகளினுள் அவரின் குரலைக் கேட்கமுடிவதில்லை என்பதுதான் எஸ்ராவைப் பற்றிய எனது மனபிம்பம்.
இப்படிப்பட்ட நிலையில் எஸ்ராவைப் பற்றி ரஜினி பேசுகிறார் என்றதும் பலரைப்போல் என்னாலும் நம்பமுடியவில்லை. பாட்சா படத்தைப் பார்க்கும்பொழுது ரஜினி மற்றும் பாலகுமாரனின் இயல்பான கூட்டணியின் வெற்றி நமக்குத் தெரிந்தது. பாலகுமாரன் ரஜினியின் இயல்பறிந்து அந்த காலகட்டத்தின் சூழ்நிலையறிந்து எழுதியவசனங்கள் ரஜினியின் இயல்போடு அப்படி பொருந்தி போனது. படமும் சூப் ஹிட். ஆனால் எஸ்ராவுக்கும் ரஜினிக்கும் எப்படி?
அதையும் ரஜினியே தன் பேச்சில் குறிப்பிட்டார். எஸ்ராபெற்ற விருதைப் பற்றிக் கேள்விப்பட்ட ரஜினி அதற்கான விழாபற்றி கேட்க, ரஜினி வந்தால் நடத்தலாம் என்ற எஸ்ராவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விழா.
தான் நடிகன் மட்டும் இல்லை என்று உணர்ந்துள்ள ரஜினி மற்ற விஷயங்களிலும் தன் ஈடுபாட்டைக் காட்டிவருவது தமிழ் நாட்டுக்கு புதிது. அதிலும் ரஜினி ஒரு மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர் என்பதும் அவரால் சபையறிந்து மக்களைக் கட்டிப்போட முடியும் என்பதும் உண்மை. தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களடங்கிய பல சபைகளில் தன் முத்திரையைப் பதித்தவர் ரஜினி.
இருந்தாலும் இந்த இலக்கிய மேடையில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்பது பற்றி ஆவலாகவே இருந்தது. எதைச் சொன்னாலும் அக்கப்போருக்கு காத்திருக்கும் பலர் உள்ள இலக்கிய உலகில் ரஜினியின் பேச்சு எப்படி?
உண்மையில் அக்கப்போர் பிரியர்களுக்கு இது ஒரு ஏமாற்றம் என்றே சொல்ல வேண்டும். எடிசன் கதையை ரஜினி சொல்லும்போதே இதற்கு ஆதாரம் கேட்டு அக்கப்போர் கிளப்புவார்களே என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால் அதை ரஜினி முடித்த விதம் அருமை. ஒரு புனைவில் ஒரு ஆளுமையின் பெயர் பயன்படுத்தப் படும்போது அந்த புனைவு மற்றொரு பரிணாமம் அடைவதை சொல்லிச் சென்றார்.
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான பேச்சு இது. தனது வழக்கமான பன்ச் வசனங்கள், கதைகள், சமஸ்க்ரிதம், ஆன்மிகம் என்று இது ஒரு ரஜினி கொண்டாட்டம்.
"மனிதனுக்கு கஷ்டம் வரும்போதுதான் அவனது மூளை சிறப்பாக வேலை செய்யும்" என்று அவரது தொனியில் சொன்னபோது அரங்கு ஆரவாரித்தது. உண்மை. "முதலில் கொஞ்சம் வருத்தப்பட்டேன். Then I started to enjoy it." என்று தனது சோதனையான காலகட்டம் பற்றி சொன்னபோது உண்மையில் அதுதான் படைப்பாளிக்கான மனநிலை என்று தோன்றியது.
வெற்றுப்புகழ்ச்சிகள் இல்லை. சரளமான பேச்சு மட்டுமே அங்கு இருந்தது. ரஜினி அவரது நிலையில் நின்று, சபையறிந்து ஒரு சிறப்பான உரையை அளித்தார் என்றே சொல்லவேண்டும்.
வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி ரஜினி சொன்ன வார்த்தைகள் அருமை. வெறும் தொலைகாட்சியில் தங்கள் அறிவை மழுங்கடித்துக் கொள்வதோடு வரும் தலைமுறைகளின் அறிவையும் மழுங்கடிக்கும் மக்களுக்கு இதுபோன்ற பேச்சுக்கள் கொஞ்சமாவது உதவக்கூடும்.
நல்ல எழுத்தாளர்களின் நல்ல புத்தகங்கள் அவர் வசம் கொண்டுசேர்ப்பது இலக்கியத்துக்கும் நல்லது. விஷ்ணுபுரம் போன்ற ஒரு நாவலை ரஜினி படித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
தனக்குக் கிடைத்த ஓய்வை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ரஜினியின் செயலை பத்திரிகைகளும் மற்ற ஊடகங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அவரது பெயரை விளம்பரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் மட்டமான செயலைத்தான் இதுவரை பத்திரிக்கைகள் செய்து வந்துள்ளன. மட்டமான விளம்பரம் என்றால் என்னவென்று தெரியவேண்டுமானால் ஒரு சாம்பிள் சாரு தளத்தில் காணக் கிடைக்கிறது. மாமல்லன் தளத்தில் அவரது பதட்டம் தெரிகிறது.
ரஜினி ஒரு சரளமான உற்சாகமான ஆளுமை. அதன் வெற்றிகளை சினிமாவில் இதுவரைப் பார்த்துள்ளோம். சினிமா மற்றும் சில அரசியல் மேடைகளில் பார்த்துள்ளோம். இனி எழுத்துத் துறையிலும்..