Unordered List

14 மார்ச் 2011

சச்சின் - தோணி - குற்றம் எவருடையது?

"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல "

"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெயிக்க முடியல. மற்ற பிளேயர்ஸ் எல்லாம் வேஸ்ட். தோணி சரி இல்ல!! "

........................................................

இந்த இரண்டும் கிரிக்கெட் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த விவாதம். நானெல்லாம் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.


உண்மையில் சச்சின் இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறாரா?


அல்லது அணி திறமை இல்லாமல் இருக்கிறதா?



சச்சின் அடிக்கும் பெரும்பாலான போட்டிகள் ஏன் தோல்வியில் முடிகின்றன? அவர் நன்றாக விளையாடும் போட்டிகளில் ஏன் மற்றவர்கள் சாதாரணமாகக் கூட விளையாடுவதில்லை? தோணி ஏன் இப்படி முடிவுகளை எடுக்கிறார்?



சச்சின் இல்லாமலே பல போட்டிகளை வெல்லும் திறமையுள்ள இந்த அணி ஏன் சில போட்டிகளில் இப்படி சொதப்புகிறது?




யார் மீது குற்றம்?




சச்சின் இந்திய கிரிக்கெட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். உண்மையில் கிரிக்கெட் தெரியாதவர்களுக்குக் கூட சச்சினைத் தெரியும் என்பது தான் அவரது புகழின் உச்சம். பார்முலா ஒன் ரேஸ் மற்றும் கோல்ப் தெரியாதவர்களுக்குக் கூட Michael Schumacher மற்றும் Tiger Woods தெரிவது போல.



சச்சின் நன்றாக விளையாடத் தொடங்கியதுமே, நமது அணி அவருக்கு எதிராக மனதளவில் விளையாடத் தொடங்கிவிடுகிறது.


இந்தியக் கேப்டனின் ஒரு முக்கியமான குறிக்கோள் சச்சின் இல்லாமல் ஜெயித்துக் காட்டுவது தான்.



சச்சின் கிளிக் ஆகும் போட்டிகளை விட அவர் சரியாக விளையாடாத போட்டிகளை ஜெயிக்கவைக்க கேப்டன் நினைப்பதை அவர்கள் உடல்மொழியை சற்று நோக்கினால் தெரிந்துகொள்ளலாம். அப்படி ஜெயித்தபின்னர் வழக்கமான ஒரு பேட்டி கொடுக்கப் படும்
"இந்திய அணி எந்த தனிமனிதரையும் நம்பி இல்லை. இது ஒரு கூட்டு முயற்சி.. ".



இந்தப் போக்கு யார் கேப்டனாக வந்தாலும் மாறுவதில்லை. மாறப் போவதும் இல்லை. இது ஒரு பொது விதி.



தன்ராஜ் பிள்ளை புகழின் உச்சத்தில் இருந்தபோது, இந்திய ஹாக்கி அணி அவர்க்கு எதிராக விளையாடியதும் உண்டு.



விளையாட்டில் இதெல்லாம் சகஜம் தான்.



எனவே சச்சினும் இந்தியக் அணியின் போக்கும் மாறப்போவதில்லை.




இது இயல்பான ஒன்று . எல்லாம் யார்மீதும் குற்றம் இல்லை.

சரி .....ரசிகர்களான நாம் என்ன இதுபோன்ற நிலையில் செய்யவது.

இருக்கவே இருக்கிறது முதலில் சொன்ன இரண்டு கட்சிகள். இதை எதையாவது ஒன்றை எடுத்துக் கொண்டு விவாதம் செய்ய வேண்டியது தான்.



இந்திய ரசிகர்கள் கடந்த இருபது வருடங்களாக இதைத் தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

08 பிப்ரவரி 2011

முயல் ஆமை போட்டி - நடந்தது என்ன?

போட்டியில் தோற்றது முயல் தான்.


இந்த முடிவு யாருக்கு ஆச்சர்யமாக இருந்ததோ தெரியாது. ஆனால் முயலுக்கு சிறிதளவும் ஆச்சர்யம் இருக்கவில்லை.



இந்தப் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே முடிவு முயலுக்குத் தெரிந்திருந்தது. முயல் போட்டியிட்டு தோற்கவில்லை. போட்டியால் தோற்றது.



ஆமையுடன் போட்டி என்பதே முயலுக்குத் தோல்விதான்.

21 ஜனவரி 2011

விட்டுச் சென்றவை

சந்திக்க வந்த விற்பனைப் பிரதிநதி
தன் முகவரி அட்டையை விட்டுச் செல்வதைப் போல,




வீடெங்கும் பொம்மைகளைப் பரப்பிவைத்துவிட்டு
தூங்கச் சென்றுவிடும் குழந்தைப் போல





வாசலெங்கும் தங்கள் உடல்களை விட்டுச் சென்றிருக்கின்றன
ஈசல்கள்!

11 ஜனவரி 2011

புத்தகத் திருவிழா - ஒரு யோசனை

புத்தகத் திருவிழா ஆரம்பித்துவிட்டது. "இந்த வருடம் என்ன special?"
 
இன்னும் ஒரு விஷயம் செய்தால் இந்த முயற்சி இன்னும் நலமாக இருக்கும் என நினைக்கிறேன்.
 
இங்கு அதிக கூட்டம் இருக்கும், அதிக விற்பனையாகும் அரங்குகளைக் கவனித்தால் ஒன்று புரியும். மக்கள் பொதுவாக அவர்களுக்கு நன்கு தெரிந்த புத்தகங்களையே வாங்க விரும்புகிறார்கள். 
  • பரிச்சயமான எழுத்தாளர்
  • விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களில் வந்த தொடர்களின் தொகுப்பு
  • வலைத்தளங்கள் மூலமாக பிரபலமான பதிப்பகங்கள்.
  • ஏற்கனேவே படித்த புத்தகம். மறு வாசிப்புக்கு அல்லது பரிசளிக்க
நமக்குத் தெரிந்த புத்தகங்களையே வாங்குவதற்குப் பெயர் கண்காட்சியா?
 
பொதுவாக கண்காட்சி  என்பது மக்களுக்கு சிலவற்றை அறிமுகப் படுத்தும் விதமாக இருக்கவேண்டும். அதை இந்தக் கண்காட்சி செய்கிறதா?
 
உதாரணமாக புத்தகக் கண்காட்சி நடக்கும் இதே பள்ளியில் போனவாரம் நடந்த ஒரு வீட்டு உபயோக பொருள் கண்காட்சியில் நான் ஒரு toster வாங்கினேன்.  காரணம் அதை அவர்கள் விளக்கிக் காட்டிய விதம்.
 
இது என்ன வீட்டு உபயோகப்பொருளா  Demo  காட்டுவதற்கு? எதை எதனுடன் ஒப்பிடுவது என்று இல்லையா என என் மீது கோபம் கொலைவெறி வேண்டாம்.
 
புத்தகங்களை கண்டிப்பாக இப்படி விளக்க முடியாது. சரி. என்ன செய்ய முடியும்?
 
நல்ல புத்தகங்கள் பற்றிய  அறிமுகம் உருவாக்குவது மிக முக்கியம். எந்த ஒரு கண்காட்சியின் நோக்கமும் மக்களிடம் அறிமுகம் உருவாக்குவதே. இதை இன்னும் எப்படி சிறப்பாக செய்ய முடியும்?
 
நான் கேட்பது எந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்ற ஒரு அறிமுகம்.  ஒரு பட்டியல், குறிச் சொற்களோடு தேடும் ஒரு முறை.
 
 IMDB என்ற வலைத்தளம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இப்போது மக்கள் மத்தியில் "உலக சினிமா" பற்றி உள்ள எழுச்சிக்கு முக்கிய காரணம் இந்தத் தளம்.
 
இப்போதெல்லாம் இந்த ஒரு சினிமாவைப் பற்றி கேள்விப்பட்டாலும் நான் முதலில் பார்ப்பது இந்தத் தளம் தான். இதன் மூலம் அது  என்னால் ரசிக்கக்கூடிய சினிமாவா என்ற அறிமுகம் கிடைக்கிறது.
 
படைப்பாளிக்கு எப்படி சுதந்திரம் இருக்கிறதோ  அதே போல் வாசகனுக்கும் சுதந்திரம் இருக்கிறது. எல்லா நல்ல படைப்பையும் எல்லா ரசிகனும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இதுபோன்ற ஒரு தளம் வாசகனுக்கு தனக்குத் தேவையான படைப்புகளை அடைய உதவும். படைப்பாளிகளுக்கும் தகுந்த வாசகர்களை அளிக்கும்.
 
அதைப்போன்று புத்தகங்களுக்கு என குறிச்சொல் தேடுதலோடு  ஒரு விரிவான தளம் இருந்தால் நாம் கேள்விப்படும் புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், புதிய புத்தகங்கள் பற்றி அறிமுகமாகவும் இருக்கும்.
 
ஏற்கனவே இப்படி ஒரு தளம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
 
ஏராளமான வாசகர்களும், பல முக்கிய படைப்பாளிகளும் இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இது ஒரு எளிதாகச் செய்யக்கூடியதே.
 
இந்த புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ஏன் இப்படி ஒரு முயற்சியை ஆரம்பிக்கக் கூடாது? 

04 ஜனவரி 2011

நாஞ்சில் நாடன் விழா - எனது பார்வை

வாசகனுடன் எழுத்தாளன் நடத்தும் உரையாடலே அவன் படைப்பு. எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படிக்கும்போது நம்மனதில் அவர்களின் குரலைக் கேட்கமுடியும். அப்படிப்பட்டவர்களின் குரல்களை நான் நேரடியாக கேட்ட அனுபவம் இன்று.

ஜெயமோகனின் "விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்" மூலம் நடந்த, சாகித்ய அக்காடமி விருதுபெற்றுள்ள நாஞ்சில் நாடனுக்கான பாராட்டு விழா.

இது நான் கலந்துகொண்ட முதல் இலக்கிய நிகழ்வு. மிகவும் இயல்பான, நட்பான சூழலில் கலகலப்பான விழாவாக அமைந்தது.



நான் கதவைத்திறந்து உள்ளே  செல்லும்போது எஸ்ரா உட்பட பலர் பேசி முடித்திருந்தனர். பாலு மகேந்திரா பேசிக்கொண்டிருந்தார்.
அரங்கு நிரம்பியிருந்தது. பலர் நின்றுகொண்டிருந்தனர். இருந்தும் எனக்கொரு நல்ல இருக்கை கிடைத்தது. இலக்கியத்தில் உனக்கும் ஒரு இடம் இருக்குடா" என்று என்னக்குள் சொல்லிக்கொண்டு பாலு மகேந்திராவை கவனிக்க ஆரம்பித்தேன்.

மிக இயல்பான பேச்சு அவருடையது. விருதின்மூலமாக கிடைத்த மகிழ்ச்சியை நாஞ்சில் நாடனும் அவரின் வாசகர்களும் பகிர்ந்துகொள்ளும் தருணம் என்று விழாவை வரையறுத்தார்.

ஞாநியின் பேச்சில் வழக்கம் போல் சற்று அனல் பறந்தது. சாகித்ய அகாடமி பற்றி பல செய்திகளைச் சொல்லி இந்த விஷயத்திலும் அவருக்கு அரசுமீது உள்ள விமர்சனத்தை முன்வைத்தார். அவர் சொல்லியதில் என்னைக் கவர்ந்த கருத்து அரசு விருது பற்றியது.

அரசின் மீது அதன் நடுநிலைத்தன்மை மீது நமக்கு பல விமர்சனங்கள் இருந்தபோதிலும் அரசும் அது தரும் அங்கீகரங்களும் நியாமானதாக இருக்கவேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பையும் அதற்க்கான நமது போராட்டங்களையும் எப்போதும் கைவிடக்கூடாது என்று கூறினார். உண்மைதான், நடக்கும் தவறுகளை பார்த்து அவநம்பிக்கை அடையாமல் விட, நம்பிக்கையோடு போராடித்தான் பல நன்மைகள் விளைந்துள்ளன.

எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் பேச்சு மிகவும் கலகலப்பானது. நம் பண்பாட்டு வேர்களை இழந்து தமிழ் சமூகம் செல்வதைப் பற்றிய தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பினாயக்  சென்னுக்கு  கிடைத்துள்ள தண்டனைபற்றிய தனது எதிர்ப்பையும் பலத்த கரகோஷத்தினிடையே பதிவு செய்தார். என்னைபொருத்தவரை அந்தக் தண்டனை அவரது தீவிரவாத ஆதரவுக்காக நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். இதில் கண்டிக்க என்ன இருக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இதைப் பற்றி மேலும் செய்தி அறியவேண்டும் என முடிவுசெய்துகொண்டேன்.

கணீர்க் குரலுக்கும் கலகப்பான பேச்சுக்கும் சொந்தக்காரர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். நிறைய சிரிக்க வைத்தார். எழுத்தாளர்களை சட்டசபையில் பேச அழைக்கவேண்டும் என்ற அவர் கருத்துக்கு அரங்கு முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. உண்மையில் அது மிக சிறந்த கருத்தாக எனக்குத் தோன்றுகிறது. ஆள்பவர்கள் கண்டிப்பாக எழுத்தாளர்களின் குரலைக் கேட்கவேண்டும்.

ஜெயமோகனின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்துவந்தாலும், இன்று தான் அவரின் பேச்சை முன்தான் முறையாகக் கேட்டேன். எதிர்பார்த்ததை விட மென்மையான குரல். அவரது பேச்சின் உள்ளடக்கமும் அப்படியே, மென்மையாகத் தெரிந்தாலும் பல விஷயங்களை உள்ளடக்கிப் பேசினார்.

"இடியட் என்ற நாவலில், மிஷ்கின் என்ற பாத்திரம்" என்று பேசியவர், "இடியட்... மிஷ்கின்.. இந்த வார்த்தைகளைப் வைத்து நீங்கள் எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று கலகலப்பை ஆரம்பித்தார். ரசிக்கும்படி இருந்தது அவரது பேச்சு. மேடையில் இருந்தவர்களை அவர் பெயரை வைத்து விளித்து ஆரம்பித்தது நன்றாக இருந்தது. திராவிட மேடைகளில் நாம் வழக்கமாக கேட்கும் "அவர்களே... அவர்களே" பட்டம் இல்லாமல் பேசியது நன்றாக இருந்தது.

நாஞ்சில் பேச்சு மிகவும் கலகப்பாக இருந்தது. தற்புகழ்ச்சியும் இல்லாமல், அதே சமயம் மிக முக்கியமாக வெற்று பணிவும் இல்லாமல் வெகு இயல்பாக இந்த விருது பற்றி பேசினார்.

இயக்குனர் மணிரத்னமும் இந்த விழாவிற்கு வந்திருந்தார். அவரையும் பேச வைத்திருக்கலாம்.

இங்கு பேசிய அனைவருமே இன்னும் பல விஷயங்கள் சுவையாகப் பேசக்கூடியவர்கள். நேரம் இல்லாமையால் மிக சுருக்கமாகப் பேசினார்கள் என்பது உண்மை. தொகுத்து வழங்கியவரும் மிக இயல்பாக கலகலப்புடன் வழங்கினார்.


இது எனக்கு ஒரு நல்ல அனுபவம் மற்றும் அறிமுகம். இரு புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். வாசிக்க வேண்டும்..

இந்தக்  கூட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினால், இதுபோன்ற கூட்டங்களும், கருத்தரங்குகளும் தொடர்ந்து நடந்தால் நல்லது.