Unordered List

09 பிப்ரவரி 2012

நண்பன் -போலிகளின் பாசாங்கு

அவன் எழுதியதைத் தான் நானும் எழுதினேன். ஆனால் அவன் சூப்பர் மார்க், எல்லோரும் பாராட்டுறாங்க. ஆனால்  நான் பெயில், எல்லோரும் சிரிக்கிறாங்க,  என்ன உலகமடா இது என்று வருத்தப்பட்டான் 'நண்பன்' ஒருவன். அவனுக்கு தெரியாதது என்னவென்றால் இரண்டு பேரும் எழுதியது வேறு தேர்வுகள். வெவ்வேறு கேள்வித்தாள்கள்.
பிரதியெடுங்க, ஆனால் கொஞ்சம் புரிந்துகொண்டு பிரதியெடுங்க மக்களே..

 .......

கொஞ்சம் நாள் முன்பு த்ரீ இடியட்ஸ் என்று ஒரு அருமையான படம் வந்தது. அது நமது கல்வித்துறையில் இருக்கும் பல அபத்தங்களை கேள்விக்குள்ளாக்கியது. முக்கியமாக புத்தகதிலிருப்பதை அப்படியே வாந்திஎடுப்பதை சாதனையாகக் கருதும் கல்விமுறையையும் அப்படி வாந்திஎடுப்பவர்களை சாதனையாளர்கள் என கொண்டாடும் அபத்தத்தையும்.

இப்போது நடப்பது என்ன? அதை அப்படியே வாந்தியெடுத்து(உரிமம் வாங்கித்தான்) இங்கே ஒரு படம். இவர்களை சாதனையாளர்கள் என பாராட்ட ஒரு பாமரக் கூட்டம். அட ஆண்டவா..

....

த்ரீ இடியட்ஸ் என்ற படமே "Five Point Someone" என்ற நாவலின் தாக்கத்தில் உருவானது தான். ஆனால் அதில் திரைக்கதைக்குத் தேவையான  பல புதுமைகளை இயக்குனர் புகுத்தி ஒரு அருமையான வெற்றிப் படத்தைத் தந்தார்.

ஆனால் நமது 'பிரமாண்ட இயக்குனர்" தந்துள்ளது ஒரு காப்பி. அதற்குமேல் எதுவும் இல்லை. அந்தப் படம் சொல்லும் கருத்துக்கு நேர்மாறான ஒரு செயல்பாடு. இந்தப் படத்தில் இலியானாவைத் தவிர வேறேதும் புதுமையைக் காணமுடியவில்லை.

எல்லாப் படத்தையும் பிரதி எடுத்தீங்க சரி.. ஆனால் இப்படி பிரதிஎடுப்பதை விமர்சனம் செய்துவந்த படத்தையுமா பிரதிஎடுப்பீங்க?


சரி. விஜய் படத்துக்கெல்லாம் எதற்கு யோசனை. வழக்கம்போல கண்டும் காணாமல் விட்டு விடவேண்டியது தானே?  சொந்தமாக யோசிக்கமுடியாவிட்டாலும் நல்லவிஷயத்தை தானே இவர்கள் கொண்டு சேர்க்கிறார்கள் என கேள்வி எழலாம்.
இதுபோன்ற போலிகளைக்கொண்டாடுவதின்மூலம் நாம் சில உண்மையான திறமைகளுக்கு அநீதி செய்கிறோம்  என்பதை நினைவில் நிறுத்துவது நல்லது.

அறிவு குறைவானவர்கள் அப்படியே இருப்பதில் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர்களின் அறிவாளிபோன்ற  பாசாங்குகளும்,  அவர்களெல்லாம்  அறிவுரை சொல்ல  விழைவதும்தான் நமது பிரச்சனை.

08 பிப்ரவரி 2012

பச்சை

எவ்வளவுநேரம் காத்திருந்தாலும்
சிவப்பு, பச்சையாக மாறுவதில்லை.
 
சிவப்பு மறையும்நேரம், பச்சை ஒளிர்கிறது.

07 பிப்ரவரி 2012

ரஜினி எனும் படைப்பாளி



அன்று...



"நான் வெறும் நடிகன் மட்டுமல்ல. வேற ஏதாவது செய்வேன்.. அது என்னவா வேணும்னாலும் இருக்கலாம்" என்றார் ரஜினி. பல ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் நடந்த ஒரு கலைவிழாவில்.


"அது என்னவா வேணும்னாலும் இருக்கலாம். அரசியலை நினைக்காதீங்க... அரசியலை நினைக்காதீங்க..." என்று நிறுத்தியவர் "இருக்கலாம்!" என்று முடித்தபோது கரகோஷம் களைகட்டியது. (நினைவில் இருந்து எழுதுகிறேன். யாரிடமாவது லிங்க் இருந்தால் உதவவும்.)



இன்று..


கர்ணன் பரசுராமனிடம் பெற்ற சாபம் போல, தனக்கு முக்கியமான தருணங்களில் சரியாகப் பேசவருவதில்லை என்று தன்னைப் பற்றி தன்னடக்கமாகச் சொல்லிக்கொண்டு தனது பேச்சை அவர் ஆரம்பிதபொழுதே நமக்குத் தெரிந்துவிட்டது, இன்றும் ரஜினி ஒரு அட்டகாசமான உரையை நிகழ்த்தக் போகிறார் என்று.


ரஜினியை வெறும் மசாலாப் பட நாயகன் என நிறுவ பலர் எப்போதும் பதடத்துடன் முயற்சிசெய்து பார்த்தாலும் அவர் தனது ஆளுமையை தான் செய்யும் எதிலும் இயல்பாக வெளிப்படுத்தி வருபவர். அது மேடைப்பேச்சிலும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.


ரஜினி இயல்பிலேயே மக்களைக் கவரக்கூடியவர். எனவே அவர் திட்டமிட்டு செய்யும் செயல்களைவிட இயல்பாக செய்யும் செயல்கள் மிகச் சிறப்பாக இருக்கும். (சச்சின் பற்றிகூட எனக்கு இப்படி ஒரு கருத்து உண்டு.)



எஸ்ராவைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் எனக்கு ஒரு கல்லூரிப் பேராசிரியர் பிம்பம் தான் மனதுக்குள் வரும். அவர் ஒரு தகவல் சுரங்கம் என்றே சொல்லலாம். திட்டமிட்டு, தகவல்களை அடுக்கித் தரும் படைப்புகள் அவருடையது. என்றாலும் விக்கிபீடியா எல்லாம் எளிதாக கிடைக்கும் இந்தக் காலத்தில் என்னை அவரின் எழுத்துக்கள் அதிகம் கவர்வதில்லை.



எஸ்ராவின் பேச்சுக்களும் எழுத்துகளும், சினிமா விமர்சனங்களும் தகவல்களை அள்ளித்தந்தாலும், அந்தப் படைப்புகளினுள் அவரின் குரலைக் கேட்கமுடிவதில்லை என்பதுதான் எஸ்ராவைப் பற்றிய எனது மனபிம்பம்.



இப்படிப்பட்ட நிலையில் எஸ்ராவைப் பற்றி ரஜினி பேசுகிறார் என்றதும் பலரைப்போல் என்னாலும் நம்பமுடியவில்லை. பாட்சா படத்தைப் பார்க்கும்பொழுது ரஜினி மற்றும் பாலகுமாரனின் இயல்பான கூட்டணியின் வெற்றி நமக்குத் தெரிந்தது. பாலகுமாரன் ரஜினியின் இயல்பறிந்து அந்த காலகட்டத்தின் சூழ்நிலையறிந்து எழுதியவசனங்கள் ரஜினியின் இயல்போடு அப்படி பொருந்தி போனது. படமும் சூப் ஹிட். ஆனால் எஸ்ராவுக்கும் ரஜினிக்கும் எப்படி?

அதையும் ரஜினியே தன் பேச்சில் குறிப்பிட்டார். எஸ்ராபெற்ற விருதைப் பற்றிக் கேள்விப்பட்ட ரஜினி அதற்கான விழாபற்றி கேட்க, ரஜினி வந்தால் நடத்தலாம் என்ற எஸ்ராவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விழா.




தான் நடிகன் மட்டும் இல்லை என்று உணர்ந்துள்ள ரஜினி மற்ற விஷயங்களிலும் தன் ஈடுபாட்டைக் காட்டிவருவது தமிழ் நாட்டுக்கு புதிது. அதிலும் ரஜினி ஒரு மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர் என்பதும் அவரால் சபையறிந்து மக்களைக் கட்டிப்போட முடியும் என்பதும் உண்மை. தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களடங்கிய பல சபைகளில் தன் முத்திரையைப் பதித்தவர் ரஜினி.




இருந்தாலும் இந்த இலக்கிய மேடையில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்பது பற்றி ஆவலாகவே இருந்தது. எதைச் சொன்னாலும் அக்கப்போருக்கு காத்திருக்கும் பலர் உள்ள இலக்கிய உலகில் ரஜினியின் பேச்சு எப்படி?




உண்மையில் அக்கப்போர் பிரியர்களுக்கு இது ஒரு ஏமாற்றம் என்றே சொல்ல வேண்டும். எடிசன் கதையை ரஜினி சொல்லும்போதே இதற்கு ஆதாரம் கேட்டு அக்கப்போர் கிளப்புவார்களே என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால் அதை ரஜினி முடித்த விதம் அருமை. ஒரு புனைவில் ஒரு ஆளுமையின் பெயர் பயன்படுத்தப் படும்போது அந்த புனைவு மற்றொரு பரிணாமம் அடைவதை சொல்லிச் சென்றார்.




ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான பேச்சு இது. தனது வழக்கமான பன்ச் வசனங்கள், கதைகள், சமஸ்க்ரிதம், ஆன்மிகம் என்று இது ஒரு ரஜினி கொண்டாட்டம்.




"மனிதனுக்கு கஷ்டம் வரும்போதுதான் அவனது மூளை சிறப்பாக வேலை செய்யும்" என்று அவரது தொனியில் சொன்னபோது அரங்கு ஆரவாரித்தது. உண்மை. "முதலில் கொஞ்சம் வருத்தப்பட்டேன். Then I started to enjoy it." என்று தனது சோதனையான காலகட்டம் பற்றி சொன்னபோது உண்மையில் அதுதான் படைப்பாளிக்கான மனநிலை என்று தோன்றியது.




வெற்றுப்புகழ்ச்சிகள் இல்லை. சரளமான பேச்சு மட்டுமே அங்கு இருந்தது. ரஜினி அவரது நிலையில் நின்று, சபையறிந்து ஒரு சிறப்பான உரையை அளித்தார் என்றே சொல்லவேண்டும்.




வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி ரஜினி சொன்ன வார்த்தைகள் அருமை. வெறும் தொலைகாட்சியில் தங்கள் அறிவை மழுங்கடித்துக் கொள்வதோடு வரும் தலைமுறைகளின் அறிவையும் மழுங்கடிக்கும் மக்களுக்கு இதுபோன்ற பேச்சுக்கள் கொஞ்சமாவது உதவக்கூடும்.




நல்ல எழுத்தாளர்களின் நல்ல புத்தகங்கள் அவர் வசம் கொண்டுசேர்ப்பது இலக்கியத்துக்கும் நல்லது. விஷ்ணுபுரம் போன்ற ஒரு நாவலை ரஜினி படித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.




தனக்குக் கிடைத்த ஓய்வை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ரஜினியின் செயலை பத்திரிகைகளும் மற்ற ஊடகங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அவரது பெயரை விளம்பரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் மட்டமான செயலைத்தான் இதுவரை பத்திரிக்கைகள் செய்து வந்துள்ளன. மட்டமான விளம்பரம் என்றால் என்னவென்று தெரியவேண்டுமானால் ஒரு சாம்பிள் சாரு தளத்தில் காணக் கிடைக்கிறது. மாமல்லன் தளத்தில் அவரது பதட்டம் தெரிகிறது.





ரஜினி ஒரு சரளமான உற்சாகமான ஆளுமை. அதன் வெற்றிகளை சினிமாவில் இதுவரைப் பார்த்துள்ளோம். சினிமா மற்றும் சில அரசியல் மேடைகளில் பார்த்துள்ளோம். இனி எழுத்துத் துறையிலும்..

02 பிப்ரவரி 2012

இட்டலிக்கு சட்னி

இட்டலிக்கு சட்னி வேணுமா என்றார் கடைக்காரர். வேணாம் என்றான் அவன்.
அன்று அவன் சட்னி சாப்பிடவில்லை.
 
சற்றுநேரம் கழித்து பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் இன்னொருவன்.இட்டலிக்கு சட்னி வேண்டும் எனக் கேட்டான் சட்னி தீர்ந்துவிட்டது என்றார் கடைக்காரர்.
அவனும் அன்று சட்னி சாப்பிடவில்லை.
 
அடுத்த டேபிளில் மற்றொருவன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
 

 
 
 

15 ஜனவரி 2012

புத்தகமும் பேச்சும் - புத்தகத் திருவிழா 2011

தான் சென்றுவந்த எல்லா நாடுகளையும் பட்டியலிட்டுக் கொண்டிந்தார் லேனா தமிழ்வாணன். இந்தியாவில் மட்டும் தான் மக்கள் நேரத்தை மதிப்பதில்லை என நிருபிப்பது தான் நோக்கம் போல. உடனடியாக நான் நேரத்தை கொஞ்சமும் வீணாக்காமல் புத்தகக் கண்காட்சி அரங்குக்குள் நுழைந்தேன்.



அரங்கதில் சுற்றிக்கொண்டிருக்கும்பொழுது சற்றே வெளியில் பர்த்தேன். அவர் இன்னும் ஒரு நாட்டைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அரங்குக்குள் கூட்டம் அதிகரித்தது. இப்படி திரும்பத் திரும்பச் சொல்லி நேரத்தை வீணாக்கும் பழக்கம் அவர் சென்று வந்த நாடுகளிலெல்லாம் இருக்கிறதா என்ற கேட்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

சும்மா வேடிக்கை பார்த்து விட்டு வெளியிலெயே சுற்றிவிட்டுப் போகலாம் என்று வந்த கூட்டத்தையெல்லாம் அரங்குக்குள் செலுத்த இது போன்ற கூட்டத்தைக் கலைக்கும் பேச்சுக்கள் கண்டிப்பாகத் தேவை தான் போல.

----------------------------

வெள்ளிக்கிழமையெ வந்த நான் மறுபடி சனிக்கிழமையும் வந்ததற்கு காரணம் வெளிக்கிழமை பேசிய பேராசிரியர் ஞானசம்பந்தம். அலுவலகம் முடிந்து கண்காட்சிக்கு வர கிட்டத் தட்ட எட்டு மணி ஆகியிருந்தது. உள்ளே செல்வதற்குமுன் ஞானசம்பந்தம் குரலும் மக்களின் சிரிபோலியும் கவர கொஞ்சம் நேரம் கேட்டுவிட்டுத் தான் போகலாமே என்று கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பட்டிமன்றத்தின் தீர்ப்பு கட்டத்தில் இருந்தது. "படைப்பாளியா அல்லது வாசகனா என்ற பட்டிமன்றம்.

அவருக்கே உரித்தான மதுரை மொழி, நல்ல தமிழ் பாடல்கள், குட்டிக் கதைகள் மற்றும் தகவல்கள் மற்றும் நகைச்சுவைகள் என கூட்டத்தைத் தன் பேச்சால் கவர்ந்து வைத்திருந்தார். அங்கெங்கே சில புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் தந்தபடி இருந்தார்.



பட்டிமன்றம் என்றாலே வெறும் பொழுதுபோக்கு பார்முலா நகைச்சுவைதான் என்ற ஒருபோக்கு இருக்க, இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களையும் கலகலப்பாகத் தரமுடியும் என்பதே மிக மகிழ்ச்சியான விஷயம் தான்.

வாசகன் தான் படித்த அனுபவத்தை இன்னொரு வாசகனுக்கு அறிமிகப் படுத்ததை ஆற்றுப்படுத்துதல் பாடல்களுடன் மிக அழகாக ஒப்பிட்டார். பொது மக்களுக்கு படிக்கும் பழக்கத்தை உருவாக்க இவர்போன்ற பேச்சாளர்கள் கண்டிப்பாகத் தேவைதான்.

அவரது பேச்சு முடியும்வரை முழு அரங்கும் நிறைந்திருந்தது. என்ன ஒரு பிரச்சனை என்றால் இந்த சுவாரஸ்யத்தில் நான் புத்தக அரங்கிற்குள்ளேயே போகவில்லை. இதற்காகவே அடுத்தநாளான சனிக்கிழைமையும் செல்ல வேண்டியதாக ஆகிவிட்டது.

ஆனால் இதுபோன்ற கவர்ந்திழுக்கும் பேச்சுக்களில் கூட்டம் தங்குவதை புத்தக விற்பனையாளர்கள் எப்படிப் பார்கிறார்கள் எனத் தெரியவில்லை.

புத்தகக் கண்காட்சிகளில் இதுபோன்ற பேச்சுக்கள் அவசியம்தானா. இதனால் புத்தகங்களை பார்க்கும் மக்களின் கூட்டம் குறைகிறதா? அப்படியே பேசினாலும் கூட்டத்தைக் கலைக்கும் பேச்சாளர்களே போதுமா?

ஆனால் பொதுவாக மக்கள் வாங்கும் முறையைப் பார்த்தேலே அவர்களெல்லாம் தங்களுக்கு முன்பே அறிமுகமான சில புத்தகங்களை வாங்கவே விரும்புகிறார்கள். ஆனால் ஒரு கண்காட்சியின் நோக்கம் மக்களுக்கு சில புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவதாகவே இருக்கவேண்டும. அதை பேராசியர் ஞானசம்பந்தம் மிக அருமையாகச் செய்தார்.


நான் கவனித்த சிறிது நேரத்திலேயே சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம், ராமாயணம், மொழிபெயர்ப்பு இலக்கியம் என தற்போதைய ஜெயமோகனின் உலோகம் வரை பல அறிமுகங்கள்.

எனவே இதுபோன்ற பேச்சுக்கள் உண்மையில் புத்தக விற்பனையை அதிகரிக்கும் தகுதியான பேச்சாளர்கள் பேசினால்.