Unordered List

13 ஆகஸ்ட் 2012

ஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம்


இவ்வளவு பெரிய நாடு, ஆனால் இவ்வளவு தான் பதக்கங்கள், என்று ஆதங்கப்படும் சிலர், இவ்வளவு கிடைத்ததே நாட்டுக்குப் பெருமை என பெருமிதப்படும் சிலர். ஆனால் இவர்களிருவரும் கவனிக்க மறந்தது. இந்த விளையாட்டுப்போட்டிகளின் பின்னுள்ள மனிதகுல அவலத்தை.

சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்ததன் காரணமாக, இப்பொதெல்லாம் முகத்தைப் பார்த்தாலே அவர் என்ன விளையாட்டு விளையாடும் ‘வீரர்’ என்று கண்டுபிடிக்க முடிகிறது, அல்லது அவர்கள் உடலைப் பார்த்து.

ஏன் ஒரு குத்துச்சண்டை வீரரின் உடலமைப்பு அதே வயதுடைய ஒரு நீச்சல் வீரரின் உடலமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்று நாம் யோசித்ததுண்டா? காரணம் மிக எளிது. பல வருடங்களாக கடுமையான பயிற்சிகளில் மூலமாக இந்த உடலமைப்பை அடைகிறார்கள். ஆனால் இது இயல்பான ஒன்று அல்ல. இவர்களுக்கு ஏன் ஒரு இயல்பான மனித வாழ்க்கை வாழும் உரிமை மறுக்கப் படுகிறது? இயற்கைக்கு மாறான இந்தச் செயலை செய்யத் தூண்டுவதுதான் விளையாட்டின் நோக்கமா?




இந்த விளையாட்டுப்போட்டிகளின் வரலாறு என்ன? அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

காட்டில் திரிந்த ஆதி மனிதனுக்கு தேவையாயிருந்த ஒரு முக்கியமான குணம், வேட்டையாடும் கொலை குணம். மனிதன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தபின், தனக்கு உயிர்பயம் வந்தபின்னர், தனக்காக சண்டையிட செய்ய படை வீரர்களை உருவாக்கினான், அவர்களின் சண்டையைப் பார்த்து வெற்றிக் களிப்படைந்தான். உயிருக்கும் ஆபத்தில்லை, கொலை செய்த திருப்தியும் கிடைக்கிறது.அந்தப் படை வீரர்களின் மரண பயத்தை குறைக்கவும், தனது குற்ற உனர்வைத் தவிர்க்கவும், நாட்டுப் பெருமை மற்றும் தலைவன் பெருமை போன்ற விழுமியங்கள் உருவாக்கப் பட்டன. அதாவது நாட்டுப் பெருமைக்காக சிலர் உயிர் இழந்தாலும் சரி, அதைப் பற்றி அனைவரும் பெருமைதான் படவேண்டும். இரு தரப்பிலும் மக்கள் ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர்.

கொஞ்சம் நாகரீக முன்னேற்றத்துக்குப் பிறகு, இதிலும் நடக்கும் உயிர் இழப்புகளை தவிர்க்க அடுத்தகட்டமாக ஒரு குறிப்பிட்ட விதிகளுடன் இவை விளையாடுப் போட்டிகளாகப்பட்டன. அதாவது எதிராளியைக் கொல்வதே வெற்றி என இருந்த நிலையில், ஒரு இலைக்கை அடைவதே வெற்றி என்னக்கொள்ளப்பட்டது. இதில் எதிராளியைக் கொல்வது என்னதான் தவிர்க்கப்பட்டாலும், வெற்றி அடைபவரின் வெற்றிக் களியாட்டமும்,தோற்றவரை மரணத்துக்கு இணையாக அவமானப் படுத்துவதும் தொடர்கிறது.





அப்படியென்றால் விளையாட்டு இயற்கையான ஒரு செயல்பாடு இல்லையா?

அப்படியும் சொல்ல முடியாது. குழந்தைகள் முதலில் ஆரம்பிப்பது விளையாட்டு தான்.விளையாடும் குழந்தைக்கு மட்டுமல்லாமல் வேடிக்கை பார்க்கும் நம் மனத்துக்கும்ஒருசேர மிக மகிழ்ச்சியை அளிப்பது அது. ஆனால் விளையட்டு எங்கே விபரீதமாகிறது?

குழந்தைகள் விளையாடில் விதிகள் கிடையாது. வெற்றி தோல்வி கிடையாது. முக்கியமாக தான் ஜெயிக்க இன்னொருவரை தோற்க்கடிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தானாக விளையாடும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் விளையாட்டுப் போட்டிகளை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும்போது முதல் பாடமே இன்னொருவரை தோற்க்கடிப்பது தான். தனது மகிழ்ச்சி மற்றவரின் அவமானத்தில்தான் உள்ளது என உணர வைப்பதே இந்த விளையாட்டுப்போட்டிகள் தான்.

...


விளையாடின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? முக்கியமாக இந்த மூன்றை சொல்லலாமா?


  • உடல் ஆரோக்யம்
  • மனதுக்கு மகிழ்சி
  • ஒற்றுமை உணர்வு


ஒரு விளையாட்டுகாக தங்கள் உடலை அமைப்பையே பயிற்சிகளின் மூலம் மாற்றி, உடல் ஆரோக்யத்துக்காக விளையாட்டு என்ற நோக்கத்திலிருந்து மாறி, விளையாட்டுக்காக உடல் என்ற பரிதாப நிலையை அடைகிறார்கள்.

இந்த விளையாட்டுகள் மகிழ்சியை அளிக்கிறதா அல்லது வெறியை அளிக்கிறதா என்று தெரிந்துகொள்ள பெரிய ஆராய்சியெல்லாம் செய்யத்தேவையில்லை.

போட்டியும் பொறாமையும் வெறியும் இருக்கும் இவ்வித்தில் ஒற்றுமைக்கு இடம் ஏது? அப்படியெ ஒற்றுமை இருந்தாலும் அதுவும் ஒரு எதிரியை வீழ்த்துவதற்காகத் தான் இருக்கும்.

பிரமாண்டமான இந்தப் போட்டிகள், இவ்வளவு நாகரீக மாற்றங்களையும் மதிப்பீடுகளையும் தாண்டி, நம் மனதில் மிச்சமிருக்கும் சகமனிதனை வென்று களியாட்டமிடும் ஆதிமனிதனின் வெறிக்கான ஆதாரமாகவே உள்ளன. .....



உங்கள் நாட்டுப்பற்றை காட்ட வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அதற்காக சிலரை பலிகடாவாக்க வேண்டாமென்கிறேன். அரசனின் நல்வாழ்வுக்காக தன் தலையை வெட்டிக்கொண்டு நாட்டை பெருமைப்பட வைத்த ‘நடுகல்’ வீரர்களுக்கும்,  இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

12 ஜூலை 2012

நான் ஈ..நானும்!

துள்ளலாக போய்க்கொண்டிருக்கும் காதல் கதையில் படத்தின் முதல் அரை மணிநேரத்திலேயே   ஹீரோ கொல்லப்பட்டும்  ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சி இல்லை என்பதே ஒரு அதிர்ச்சி தான். ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஈ இனிமேல்தான் வரப்போகிறது என்பதால் சிலர் கை தட்டுவதைக் கூட கவனிக்க முடிந்தது.

பென்சிலை சீவும் பெண் சிலையாக வரும் சமந்தா சிறிய புன்னகைகளில் வசீகரிக்கிறார். சமந்தா போல ஒரு தேவதைக் கவர என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அனைத்தையும் அழகாகச் செய்கிறான் நம்ம ஹீரோ. குட்டி குட்டி குறும்புகளில் பட்டையைக் கிளப்புகிறார். அவனுக்கு வரும் முதல் பிளான்க் எஸ்.எம்.எஸ். அதற்கு அவனது ரீயாக்சன்.. இதுதாண்டா யதார்த்தப் படம் என சொல்ல வைக்கிறது. நமது மனம் பட்டாம்பூச்சியாகப் பறக்கிறது

சின்ன சின்ன வெற்றிகளை அடுத்து, நமது ஹீரோ அந்த தேவதையின் மனதை முழுவதும் வெல்லும் நேரம். சட்டென கொல்லப்படுகிறான். அங்கே முடிகிறது காதல் கதை.

அப்புறம் ஈ கதை.

...........
உண்மையில் எனக்கும் அந்த முதல் அரைமணிநேர கதையின் முடிவு திருப்தியே. ஆனால் அது அடுத்து வரும் ஈ-யை எதிர்பார்த்து இல்லை.

தேவதையின் மனத்தைக் கொள்ளைகொண்ட பிறகு அவன் செய்யக்கூடியது என்னவாக இருந்திருக்கும்? கடலை போடுவதும், ஏன் பேசவில்லை என்று தினமும் சண்டை போடுவதும் அல்லது  கல்யாணம் செய்து அவளை சமைக்க வைத்து சாம்பார்சாதம் சாப்பிடுவதும் தானா?
இதற்கு எதற்கு தேவதையும் ஹீரோவும். எல்லா சாமானியர்களும் செய்வது இதைத் தானே?

தேவதைகளை அறிந்தவர்களுக்கும், தேவதையாக இருந்தவர்களுக்குமே இது தெரியும், ஒரு தருணத்தில் தேவதையும் ஹீரோவும் சட்டென சாதாரண மனிதர்கள்ஆகிறார்கள். நினைத்தை அடைந்த மகிழ்ச்சியும், ஏதோவொன்றை இழக்கும் சோகமும் ஒன்றுசேரும் மாய கணம் அது.

இந்தப்படத்தில், அந்த இடத்தில் காதல் கதை சட்டென முடிகிறது, நிறைவாக.
.....

சினிமாவில் தான் எவ்வளவு வசதி நினைத்த நேரத்தில் முடித்துக்கொள்ள முடிகிறது. வாழ்க்கையை அப்படி எல்லோருக்கும் முடிவதில்லையே.

27 ஜூன் 2012

ஒவ்வொரு நொடியும் ஹீரோ..

எல்லா கண்களும் அவனைப் பார்க்கின்றன. அவனை விரும்புபவர் பலர், அவன் பலரால் விரும்பப்படுவதாலேயே அவனை வெறுப்பவர்கள் சிலர். அவன் செய்யும் சாதனைகள் வரலாகின்றன. செய்யத்தவறிய செயல்கள் வசையாகின்றன. சிறு தவறும் கடுமையான விளைவுகளை உருவாக்குகின்றன  எப்படியோ எல்லாருக்கும் அவனைப் பற்றி சொல்ல ஏதாவது இருக்கிறது. அவனே ஒரு ஹீரோ.
 
போர்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அப்படியான ஒரு ஹீரோ.
 
அரங்கில் விளையாடும் அத்தனை பேரில், தன்மீதுதான் அதிகமான கவனம் உள்ளது என்பது அவருக்கு எப்போதுமே தெரிந்திருக்கிறது. அந்தக் கவனத்தை எந்தவித போலி அடக்கமும் இன்றி  அவர் மிக விரும்பி ஏற்றுக்கொள்கிறார் என்று எனக்குத் தெரிகிறது, அதுவே அவர் மீது அதிகமான மரியாதையைத் தருகிறது.
 
டிவியில் அவரைப் பார்ப்பது நல்ல பொழுதுபோக்கு.தலையலங்காரம் உட்பட தன் தோற்றத்துக்குத் தரும் கவனம், தான் சம்பத்தப் பட்ட முக்கிய தருணங்களில் அவர் முகத்தில் வரும் அபாரமான உணர்சிகளும் அதை அதிகப் படுத்தும்.  கோல் வாய்ப்பை தவறவிடும் சமயங்களில் ரொனால்டோவின் முகபாவம் ஒரு மூன்று மணிநேர சோக சினிமா கொடுக்கும் சோகத்தை நமக்குக் கொடுத்துவிடும்.
 
டிவி கேமராக்கள் எப்போதும் அவரை விட்டு விலகுவதில்லை. அவரும் தான் கோல் போட்டபின் கேமரா எங்கிருந்தாலும் தேடி அதன் முன் ஏதாவது சொல்லத் தவறுவதில்லை.
 
வெற்றியோ தோல்வியோ, ஒவ்வொரு நொடியும் கவனத்தைத் தன்னிடம் வைத்திருக்கும் ஹீரோ நம்ம ரொனால்டோ.
 
இன்று மிக நேர்த்தியான அணியான ஸ்பெயின் அணியை எதிர்த்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றிபெற எனது வாழ்த்துக்களும், எதிர்பார்ப்பும்.
 
Euro Cup 2012: Portugal vs Spain- Semi-final
27-Jul-2012

19 ஜூன் 2012

அழகு அறிவு மூடநம்பிக்கை

உங்களுக்கு புத்தகங்களின்மீது ஆர்வமிருந்தால்,இது உங்களுக்கான நிகழ்ச்சி என்ற அறிவிப்புடன் தொடங்கியது அந்த வானொலி நிகழ்ச்சி. புத்தகம் படிப்பதே அருகிவரும் நிலைமையில் இப்படி ஒரு நிகழ்ச்சியா என்று சற்று ஆர்வமடைந்தேன்.Hello FM என்று நினைக்கிறேன். நடத்தியவர் தீபா வெங்கட். அருமையான குரலுடன் கூடிய அழகான பெண். ஒரு பெண் நடத்தும் அறிவார்ந்த நிகழ்ச்சி என்பதே ஒரு ஆச்சர்யம்  தானே.
 
இருந்தாலும் இவர்கள் புத்தகம் புத்தகம் என்று சொல்வது ஆனந்தவிகடனைத் தானா என்ற பீதி லேசாகத் தலைதூக்கியது. "யாராவது பரிந்துரைத்து நீங்கள் ஏதாவது புத்தம் படித்தீர்களா?  அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வியைத் தொடங்கினார். சுவாரஸ்யமான கேள்விதான்.
 
இது நேயர்கள் தொலைபேசி உரையாடும் நிகழ்ச்சி. முதலில் ஒரு பெண் அழைத்தார்.
 
"நானெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் படித்து விடுவேன்" என்று அதிரடியாக ஆரம்பித்தார்.
 
"தினமும்  ஒரு புத்தகமா?அப்படின்னா வீட்லயே ஒரு சின்ன லைப்ரரி இருக்கணுமே" என்றார் தீபா
 
"லைப்ரேரி வீட்ல இல்லை. வீட்டு பக்கத்துல இருக்கு!!"
 
இதை கேட்டதும் எனக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது, புத்தகங்களைப் பற்றி உரையாடும் 'அறிவார்ந்த' ஒரு வானொலி நிகழ்ச்சி. அதை நடத்தும் ஒரு பெண். அதில் பங்குகொள்ளும் தினமும் படிக்கும் ஒரு பெண். இது உண்மை தானா என்று.
 
பெண்கள் எல்லாம் தொலைகாட்சியின் ஆபாசமான மெகா தொடர்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே நடப்பது என்ன?
 
"சரி உங்களுக்கு புத்தகங்கள் பரிந்துரை செய்தது யாருங்க.."
 
"அதாவது நான் எப்போதுமே டீவீல பட்டி மன்றம் தவறாமல் பார்ப்பேன். அதுல சொல்ற புக்கெல்லாம் தவறாம படிப்பேங்க என்றார்.."
 
டிவியில் வரும் பட்டிமன்றங்கள் மூலம் அறிவு வளர்கிறதா. இது இவ்வளவு நாள் நமக்குத் தெரியாமல் போச்சே.  அட ஆண்டவா..
 
இதற்க்கு தீபா வெங்கட்டின் பதில்.. "ரெம்ப நல்ல சொன்னீங்க..ரெம்ப நல்ல பழக்கம். இதை இப்படியே தொடருங்கள்.  இப்போ இந்த பாட்டைக் கேளுங்க.."
 
அடுத்து அவர் ஒலிபரப்பிய பாடல்.. எவண்டி உன்னைப் பெத்தான்... பெத்தான்..
 
--
 
புத்தகம் படிப்பதே ஒரு அறிவார்ந்த விஷயம் என்று பரவிவரும் மூடநம்பிக்கையை தகர்க்க சேவைசெய்யும் முறையில், இதுபோன்ற நிகழ்சிகளின் சேவை நாட்டுக்குத் தேவைதான்.

04 ஜூன் 2012

ரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச் செய்தி!

ரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச்  செய்தி..
 
".... இந்த நாள். இன்று அவர் பிறந்தநாள் என்பது நாம் அனைவரும் மகிழ்ச்சியடையவேண்டிய திருநாளாகும். இந்த வானொலி மூலம்  அவருக்குப்  பிறந்தநாள் வாழ்த்துக்கூற விரும்புகிறேன். தமிழ் சினிமாவுக்கும், தமிழக மக்களுக்கும் அளப்பரும் பங்களிப்பற்றிய அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நாமெல்லாம் கடமைப்பட்டுளோம். அவர் வாழும் இந்த .........."
 
இப்படி போகிறது அந்த வாழ்த்து செய்தி நானும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டே இருந்தேன். இவர் அவரை ஒரு தடவையாவது வாழ்த்துவாரா என்று. இல்லையே.. ஒரு தடவை கூட இல்லையே.. வாழ்த்த விரும்புகிறேன், ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறாரே தவிர கடைசி வரை வாழ்த்து மட்டும் சொல்லவில்லை,
 
இது வாழ்த்து அல்ல, வாழ்த்துக்கான திட்டமிடலோ?  இதெல்லாம் முடிந்தபின் தனியாக வாழ்த்துவாரோ தெரியவில்லை. இருந்தாலும் இது இது என்ன டைப் வாழ்த்து என்று  யோசிக்க நாமெல்லாம் கடமைப்பட்டுள்ளோம்..இல்லையா?