Unordered List

25 ஜூன் 2019

குடி வன்முறையின் வரலாற்றுத் தருணம்

சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஒரு குடிமகன் வீடியோ வெளியிட்டிருந்தார், அது சமூக ஊடகங்களில் பரபரப்பாகப்  பகிரப்பட்டது. தேர்தல் தினத்தன்று மதுக்கடைகளை மூடுவதால் தங்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப் படுவதாகவும், அதனால் சரியான மனநிலையில் ஓட்டுப்போடக் கூட முடியாத நிலையிலிருப்பதாகச் சொல்லியிருந்தார். மற்ற நாட்களைப் போல் தேர்தல் நாளன்றும் மதுக்கடைகள் அவசியம் என்பது அவரது கோரிக்கை. நம்மில் பலரும் அதைப் பார்த்து சிரித்து வீடியோவை பகிர்ந்துகொண்டாலும் அவரது கேள்வி 'சட்டப்பூர்வமானது' தானே என்று தோன்றியது.

மதுக்கடைகளுக்கு காந்தி பிறந்தநாள், மகாவீரர் ஜெயந்தி போன்ற அடையாள விடுமுறைகள் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் தேர்தல் தினம், வாக்கு எண்ணிக்கை போன்ற நாட்களில் மதுக்கடைகளை மூடுவது ஏன். இதற்குச் சொல்லப்படும் காரணம், மதுக்கடைகள் இருந்தால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியது என்பது. அப்படியென்றால் மற்ற நாட்களில் சட்டம் ஒழுங்கு தேவையில்லை என்று அரசு நினைக்கிறதா என மக்களிடம் கேள்வி எழுகிறது.


இன்னொரு விதமாகப் பார்த்தால், மற்ற நாட்களில் இல்லாமல் தேர்தல் காலத்தில் இருப்பது அரசியல். சாதாரண நாட்களை விட தேர்தல் சமயத்தில் அதிக போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை இருக்கும், இருந்தாலும் அரசியல் பின்புலமும் வன்முறையில் அனுபவமும் இருப்பவர்களை மது மிக ஆபத்தானவர்களாக ஆக்குகிறது என அரசால் அஞ்சப்படுகிறது. 

இப்படிப் பட்டவர்கள் உருவாக்கும் வன்முறைகளையும் விபத்துகளையும் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ள்ளும் போது தேர்தல் தினம் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்பது அரசின் நிலைப்பாடாக இருப்பது அபத்தம் இல்லையா 

சமுதாயத்தில் இதுபோன்ற அவலங்கள் நீறுபூர்த்த நெருப்பாக இருந்தாலாலும் அதன் மீது கவனம் கொண்டு மாற்றம் ஏற்பட ஒரு வரலாற்றுத் தருணம் தேவைப்படுகிறது. வரலாற்றுத் தருணங்களுக்கு சில பொதுப் பண்புகள் இருக்கின்றன. ஒன்று பாதிக்கப்பட்ட இடமோ அல்லது ஆளோ எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கவேண்டும். நாட்டின் தலை நகரில் நிர்பயாவுக்கு நடந்த கொடுமை, இந்தியாவில் நடக்கும் அதுபோன்ற குற்றங்க்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. சிவாஜிக்கே கள்ளஓட்டு போடப்ப்ட்டது பெரிய செய்தியானது. இரண்டாவது மக்கள் நினைவில் எளிதில் மறக்காத விஷயமாக இருக்கவேண்டும். மூன்றாவது மக்களின் பிரச்சனையாக இருக்க வேண்டும். சச்சினில் வெளிநாட்டுக் கார் இறக்குமதி போன்ற பிரச்சனைகள் இதில் வராது.

அப்படிப்பட்ட ஒன்று இப்போது நடந்திருக்கிறது.சமீபத்தில் ஒரு மளிகைக்கடையில் நடந்த வாக்குவாதத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது மதுபோதையில் இருந்த அரசியல் பின்புலம் கொண்டவரால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

குடி வன்முறைக்கு எதிரான போராட்டத்தில்ஏன் இது ஒரு வரலாற்றுத் தருணம் என்பதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1. ஒன்று எழுத்தாளர் ஜெயமோகன் பலருக்கும் தெரிந்தவர். தமிழ்நாட்டின் முக்கிய எழுத்தாளர், இடைவிடாது இலக்கியத்துக்காக தனது உழைப்பை செலவிடுபவர். தனது எழுத்தின் வழிகாகவும் பேச்சின் வழியாகவும் பலரையும் சென்றடைந்தவர். அவரது கருதியல் எதிரிகளாலும் தொடர்ந்து கவனிக்கப்படுபவர். அவரே வன்முறையால் பாதிக்கப்படும்பொது இந்த விஷயத்தின் மீது இயல்பாகவே மக்களின் கவனம் குவிகிறது.


2.  மளிகைக்கடை என்பது மக்களால் எளிதில் தொடர்புகொண்டு மனதில் நிறுத்தக்கூடிய விஷயம். மதுக்கடை, ஐந்து நட்சத்திர விடுதி போல ஒரு தரப்பினர் மட்டுமே செல்லும் இடம் இல்லை. எனவே ஒரு மளிகைக் கடை சர்ச்சை தாக்குதாக ஆகும் ஆபத்து அனைரும் புரிந்துகொள்ளக்கூடியது தான். 


3. பள்ளிகூடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டங்க்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. குடியால் நடக்கும் விபத்துக்களாலும் வன்முறைகளாலும் மக்கள் பாதிக்கப்படுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே இது அவரது தனிப்பட்ட பிரச்சனை மட்டும் அல்ல. தமிழ்நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை.


குடியிருப்புப் பகுதிகளில், கல்விக்கூடங்களுக்கு அருகில் மதுக்கடைகளை, அவை வன்முறையையும் விபத்துக்களையும் உருவாக்குகின்றன என்பதற்காக அவற்றை அகற்றக்கோரி பல போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  அவை அவ்வப்போது மீடியா வெளிச்சமும் அடைகின்றன.  சென்ற தேர்தலில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகப் பேசப்பட்டு மதுக்கடைகளைக் படிப்படியாக குறைப்பதைப் பற்றி வாக்குறுதி கொடுத்த கட்சி தான் ஆட்சியைப் பிடித்தது.


இருந்தாலும் ஏன் மதுவும் அது சம்பதமான வன்முறையும் விபத்துகளும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வளர்ந்தபடியே இருக்கிறது? உண்மையில் கட்டற்ற மதுவுக்கு எதிராகப் பேசும் அறிவுஜீவிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் இதில் உண்மையான அக்கறை இருக்கிறதா அல்லது இதுவும் ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.


பொது இடங்க்களில் மது அருந்துதல் மிக இயல்பான செயலாக இருக்கும் முன்னேறிய நாடுகளில் கூட அது சம்பந்தமான வன்முறை, மது சம்பதமான விபத்துகள் ஆகியவை மிகவும் கண்டிப்போடு அணுகப் படுகின்றன. ஆனால் இங்கு இவற்றை விட அரசியலே முக்கியமானதாக இருக்கிறது. தாக்கியவருக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் களம் நிற்பதாகக் கூறப்படுகிறது.



இவ்வளவு நாட்கள் இதைப் பற்றி பேசிகொண்டிருந்த பத்திரிகைகளும், அறிவுஜீவிகளும் செயல்பாட்டாளர்களும் இந்தத் தருணத்தை தங்கள் சுய நலத்துக்காகவோ, அரசியல் நிலைப்பாடு காரணமாகவோ தவறவிட்டால் அல்லது திசை திருப்பினால் அது இந்தத் தாக்குதலை விட தலைகுனிவைத் தருவது.