Unordered List

21 ஜனவரி 2011

விட்டுச் சென்றவை

சந்திக்க வந்த விற்பனைப் பிரதிநதி
தன் முகவரி அட்டையை விட்டுச் செல்வதைப் போல,




வீடெங்கும் பொம்மைகளைப் பரப்பிவைத்துவிட்டு
தூங்கச் சென்றுவிடும் குழந்தைப் போல





வாசலெங்கும் தங்கள் உடல்களை விட்டுச் சென்றிருக்கின்றன
ஈசல்கள்!

11 ஜனவரி 2011

புத்தகத் திருவிழா - ஒரு யோசனை

புத்தகத் திருவிழா ஆரம்பித்துவிட்டது. "இந்த வருடம் என்ன special?"
 
இன்னும் ஒரு விஷயம் செய்தால் இந்த முயற்சி இன்னும் நலமாக இருக்கும் என நினைக்கிறேன்.
 
இங்கு அதிக கூட்டம் இருக்கும், அதிக விற்பனையாகும் அரங்குகளைக் கவனித்தால் ஒன்று புரியும். மக்கள் பொதுவாக அவர்களுக்கு நன்கு தெரிந்த புத்தகங்களையே வாங்க விரும்புகிறார்கள். 
  • பரிச்சயமான எழுத்தாளர்
  • விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களில் வந்த தொடர்களின் தொகுப்பு
  • வலைத்தளங்கள் மூலமாக பிரபலமான பதிப்பகங்கள்.
  • ஏற்கனேவே படித்த புத்தகம். மறு வாசிப்புக்கு அல்லது பரிசளிக்க
நமக்குத் தெரிந்த புத்தகங்களையே வாங்குவதற்குப் பெயர் கண்காட்சியா?
 
பொதுவாக கண்காட்சி  என்பது மக்களுக்கு சிலவற்றை அறிமுகப் படுத்தும் விதமாக இருக்கவேண்டும். அதை இந்தக் கண்காட்சி செய்கிறதா?
 
உதாரணமாக புத்தகக் கண்காட்சி நடக்கும் இதே பள்ளியில் போனவாரம் நடந்த ஒரு வீட்டு உபயோக பொருள் கண்காட்சியில் நான் ஒரு toster வாங்கினேன்.  காரணம் அதை அவர்கள் விளக்கிக் காட்டிய விதம்.
 
இது என்ன வீட்டு உபயோகப்பொருளா  Demo  காட்டுவதற்கு? எதை எதனுடன் ஒப்பிடுவது என்று இல்லையா என என் மீது கோபம் கொலைவெறி வேண்டாம்.
 
புத்தகங்களை கண்டிப்பாக இப்படி விளக்க முடியாது. சரி. என்ன செய்ய முடியும்?
 
நல்ல புத்தகங்கள் பற்றிய  அறிமுகம் உருவாக்குவது மிக முக்கியம். எந்த ஒரு கண்காட்சியின் நோக்கமும் மக்களிடம் அறிமுகம் உருவாக்குவதே. இதை இன்னும் எப்படி சிறப்பாக செய்ய முடியும்?
 
நான் கேட்பது எந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்ற ஒரு அறிமுகம்.  ஒரு பட்டியல், குறிச் சொற்களோடு தேடும் ஒரு முறை.
 
 IMDB என்ற வலைத்தளம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இப்போது மக்கள் மத்தியில் "உலக சினிமா" பற்றி உள்ள எழுச்சிக்கு முக்கிய காரணம் இந்தத் தளம்.
 
இப்போதெல்லாம் இந்த ஒரு சினிமாவைப் பற்றி கேள்விப்பட்டாலும் நான் முதலில் பார்ப்பது இந்தத் தளம் தான். இதன் மூலம் அது  என்னால் ரசிக்கக்கூடிய சினிமாவா என்ற அறிமுகம் கிடைக்கிறது.
 
படைப்பாளிக்கு எப்படி சுதந்திரம் இருக்கிறதோ  அதே போல் வாசகனுக்கும் சுதந்திரம் இருக்கிறது. எல்லா நல்ல படைப்பையும் எல்லா ரசிகனும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இதுபோன்ற ஒரு தளம் வாசகனுக்கு தனக்குத் தேவையான படைப்புகளை அடைய உதவும். படைப்பாளிகளுக்கும் தகுந்த வாசகர்களை அளிக்கும்.
 
அதைப்போன்று புத்தகங்களுக்கு என குறிச்சொல் தேடுதலோடு  ஒரு விரிவான தளம் இருந்தால் நாம் கேள்விப்படும் புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், புதிய புத்தகங்கள் பற்றி அறிமுகமாகவும் இருக்கும்.
 
ஏற்கனவே இப்படி ஒரு தளம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
 
ஏராளமான வாசகர்களும், பல முக்கிய படைப்பாளிகளும் இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இது ஒரு எளிதாகச் செய்யக்கூடியதே.
 
இந்த புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ஏன் இப்படி ஒரு முயற்சியை ஆரம்பிக்கக் கூடாது? 

04 ஜனவரி 2011

நாஞ்சில் நாடன் விழா - எனது பார்வை

வாசகனுடன் எழுத்தாளன் நடத்தும் உரையாடலே அவன் படைப்பு. எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படிக்கும்போது நம்மனதில் அவர்களின் குரலைக் கேட்கமுடியும். அப்படிப்பட்டவர்களின் குரல்களை நான் நேரடியாக கேட்ட அனுபவம் இன்று.

ஜெயமோகனின் "விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்" மூலம் நடந்த, சாகித்ய அக்காடமி விருதுபெற்றுள்ள நாஞ்சில் நாடனுக்கான பாராட்டு விழா.

இது நான் கலந்துகொண்ட முதல் இலக்கிய நிகழ்வு. மிகவும் இயல்பான, நட்பான சூழலில் கலகலப்பான விழாவாக அமைந்தது.



நான் கதவைத்திறந்து உள்ளே  செல்லும்போது எஸ்ரா உட்பட பலர் பேசி முடித்திருந்தனர். பாலு மகேந்திரா பேசிக்கொண்டிருந்தார்.
அரங்கு நிரம்பியிருந்தது. பலர் நின்றுகொண்டிருந்தனர். இருந்தும் எனக்கொரு நல்ல இருக்கை கிடைத்தது. இலக்கியத்தில் உனக்கும் ஒரு இடம் இருக்குடா" என்று என்னக்குள் சொல்லிக்கொண்டு பாலு மகேந்திராவை கவனிக்க ஆரம்பித்தேன்.

மிக இயல்பான பேச்சு அவருடையது. விருதின்மூலமாக கிடைத்த மகிழ்ச்சியை நாஞ்சில் நாடனும் அவரின் வாசகர்களும் பகிர்ந்துகொள்ளும் தருணம் என்று விழாவை வரையறுத்தார்.

ஞாநியின் பேச்சில் வழக்கம் போல் சற்று அனல் பறந்தது. சாகித்ய அகாடமி பற்றி பல செய்திகளைச் சொல்லி இந்த விஷயத்திலும் அவருக்கு அரசுமீது உள்ள விமர்சனத்தை முன்வைத்தார். அவர் சொல்லியதில் என்னைக் கவர்ந்த கருத்து அரசு விருது பற்றியது.

அரசின் மீது அதன் நடுநிலைத்தன்மை மீது நமக்கு பல விமர்சனங்கள் இருந்தபோதிலும் அரசும் அது தரும் அங்கீகரங்களும் நியாமானதாக இருக்கவேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பையும் அதற்க்கான நமது போராட்டங்களையும் எப்போதும் கைவிடக்கூடாது என்று கூறினார். உண்மைதான், நடக்கும் தவறுகளை பார்த்து அவநம்பிக்கை அடையாமல் விட, நம்பிக்கையோடு போராடித்தான் பல நன்மைகள் விளைந்துள்ளன.

எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் பேச்சு மிகவும் கலகலப்பானது. நம் பண்பாட்டு வேர்களை இழந்து தமிழ் சமூகம் செல்வதைப் பற்றிய தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பினாயக்  சென்னுக்கு  கிடைத்துள்ள தண்டனைபற்றிய தனது எதிர்ப்பையும் பலத்த கரகோஷத்தினிடையே பதிவு செய்தார். என்னைபொருத்தவரை அந்தக் தண்டனை அவரது தீவிரவாத ஆதரவுக்காக நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். இதில் கண்டிக்க என்ன இருக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இதைப் பற்றி மேலும் செய்தி அறியவேண்டும் என முடிவுசெய்துகொண்டேன்.

கணீர்க் குரலுக்கும் கலகப்பான பேச்சுக்கும் சொந்தக்காரர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். நிறைய சிரிக்க வைத்தார். எழுத்தாளர்களை சட்டசபையில் பேச அழைக்கவேண்டும் என்ற அவர் கருத்துக்கு அரங்கு முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. உண்மையில் அது மிக சிறந்த கருத்தாக எனக்குத் தோன்றுகிறது. ஆள்பவர்கள் கண்டிப்பாக எழுத்தாளர்களின் குரலைக் கேட்கவேண்டும்.

ஜெயமோகனின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்துவந்தாலும், இன்று தான் அவரின் பேச்சை முன்தான் முறையாகக் கேட்டேன். எதிர்பார்த்ததை விட மென்மையான குரல். அவரது பேச்சின் உள்ளடக்கமும் அப்படியே, மென்மையாகத் தெரிந்தாலும் பல விஷயங்களை உள்ளடக்கிப் பேசினார்.

"இடியட் என்ற நாவலில், மிஷ்கின் என்ற பாத்திரம்" என்று பேசியவர், "இடியட்... மிஷ்கின்.. இந்த வார்த்தைகளைப் வைத்து நீங்கள் எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று கலகலப்பை ஆரம்பித்தார். ரசிக்கும்படி இருந்தது அவரது பேச்சு. மேடையில் இருந்தவர்களை அவர் பெயரை வைத்து விளித்து ஆரம்பித்தது நன்றாக இருந்தது. திராவிட மேடைகளில் நாம் வழக்கமாக கேட்கும் "அவர்களே... அவர்களே" பட்டம் இல்லாமல் பேசியது நன்றாக இருந்தது.

நாஞ்சில் பேச்சு மிகவும் கலகப்பாக இருந்தது. தற்புகழ்ச்சியும் இல்லாமல், அதே சமயம் மிக முக்கியமாக வெற்று பணிவும் இல்லாமல் வெகு இயல்பாக இந்த விருது பற்றி பேசினார்.

இயக்குனர் மணிரத்னமும் இந்த விழாவிற்கு வந்திருந்தார். அவரையும் பேச வைத்திருக்கலாம்.

இங்கு பேசிய அனைவருமே இன்னும் பல விஷயங்கள் சுவையாகப் பேசக்கூடியவர்கள். நேரம் இல்லாமையால் மிக சுருக்கமாகப் பேசினார்கள் என்பது உண்மை. தொகுத்து வழங்கியவரும் மிக இயல்பாக கலகலப்புடன் வழங்கினார்.


இது எனக்கு ஒரு நல்ல அனுபவம் மற்றும் அறிமுகம். இரு புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். வாசிக்க வேண்டும்..

இந்தக்  கூட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினால், இதுபோன்ற கூட்டங்களும், கருத்தரங்குகளும் தொடர்ந்து நடந்தால் நல்லது.

28 டிசம்பர் 2010

தீவிரவாதி எச்சரிக்கை - நான் என்ன செய்ய?

நேற்று இரவு தொலைக்காட்சி செய்திகள் பார்த்ததில் இருந்து ஒரே யோசனையாக இருக்கிறது..

செய்தி இது தான்... "பெங்களூரிலும் தீவிரவாதிகள் தாக்கக்கூடும்.. அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.. ".

இந்த எச்சரிக்கையை வைத்துக் கொண்டது நான் என்ன செய்வது என்று ஒரே யோசனை.
மழை வரும் என்று எச்சரிக்கை செய்தால் குடை கொண்டுபோகலாம்.. (எச்சரிக்கை செய்தபின் மழை வருவதில்லை என்பது வரலாறு...இருந்தாலும் ஒக்கே)

எதாவது சாலையில் அரசியல் கூட்டம் என்று எச்சரிக்கை செய்தால் வேறு வழியாக போகலாம்..

சுனாமி என்று எச்சரிக்கை செய்தால் கடற்கரையை தவிக்கலாம்..

புயல் என்று எச்சரிக்கை செய்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவிர்க்கலாம்..

இந்த தீவிரவாதி எச்சரிக்கையை வைத்துக்கொண்டு நாம் என்ன  செய்வது?

...........................
நம்மை என்ன செய்ய சொல்கிறார்கள்? துப்பாக்கி எடுத்துக்கொண்டு தீவிரவாதியோடு சண்டை செய்ய சொல்கிறார்களா?

இது நம்மை ஆயத்தப் படுத்துவதற்க்காகவா இல்லை பயப்பட செய்வதற்கா?

ஆயத்தப்படுத்த என்றால், எதுமாதிரியான ஆயத்தம்?

பயம் கொள்ள செய்ய என்றால், அது தானே தீவிரவாதிகளும் ஆசைப் படுகிறார்கள்?

......................


எனக்குத் தெரிந்தவரை தீவிரவாதிகள் செய்யும் எல்லா கொடுமைகளின் நோக்கம், மக்களிடம் ஒரு பயத்தை உருவாக்குவது தான்.மக்களிடம் ஒரு பதட்டத்தை உருவாக்கி அமைதியில்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கத்தான் அவர்கள் இவ்வளவு பாடுபடுகிறார்கள்.


இப்போது நமது அரசே அவர்களின் வேலையை பாதி எடுத்துக்கொண்டதாக தோன்றுகிறது. 

ஒரு வேலை இது நமது அரசின் ஒரு புதிய வழியோ? தீவிரவாதிகள் உருவாக்குவதை விட அரசே அதிகமான பீதியை உருவாக்கிவிட்டால், ஒருவேளை அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தீவிரவாதத்தை விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ?


எவ்வளவு விளம்பரம் அவர்களுக்கு பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும்.


தீவிரவாதிகளுக்கு சிறந்த விளம்பரம் கொடுப்பதற்கு ஒரு விருது கொடுத்தால் அது நமது அரசுக்கும் பத்திரிக்கைகளுக்கும் தான் கொடுக்க வேண்டும்..

உண்மையில் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும்  எதாவது ஒரு செய்தி வந்தால் அரசும் அதற்கென உள்ள அமைப்புகளும் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அரசு இந்த எச்சரிக்கையை ராணுவத்திருக்கும், காவல் துறைக்கும், உளவுத்துறைக்கும் கொடுக்க வேண்டும்.. மக்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் அல்ல

நம் நாட்டின் காவல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இதற்கு முழு தகுதி உடையவை என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே அவர்களே தீவிரவாதிகளை சமாளித்தால் நல்லது.. இல்லாவிட்டால் இந்த எச்சரிக்கையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய?

20 டிசம்பர் 2010

வாழும் வரலாறே!!

வாழும் வரலாறே!!" என்று அரசியல் கோஷங்கள் பல பார்த்துள்ளோம்.


கிடைக்க வேண்டிய புகழ் பலருக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமலே இருந்திருக்கிறது.  இதற்கு உதாரணங்கள் பல..


ஆனால் புகழ் கிடைப்பதும் எவ்வளவு பெரிய சுமை என்று சிலருக்குத் தான் தெரியும்.
"கிரிக்கெட்டின் கடவுள்" சச்சின், "இசைக் கடவுள்" இளையராஜா, "இந்திய சூப்பர் ஸ்டார்" ரஜினி ஆகியோர் இந்த சிலரில் சிலர்.


எனக்கும் இவர்களை மிகப் பிடிக்குமென்றாலும், இந்த அதீதப் பட்டங்கள்  கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது..

"இசை ஞாநி" , "master balster" போன்றவை பரவாயில்லை.. 

"இசைக் கடவுள்" என்று இளையராஜவையோ "கிரிக்கெட் கடவுள்" சச்சின்-னையோ ஊடகங்கள்  புகழும் போது "அவர்களை வேலையைச் செய்ய விடுங்கப்பா.." என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

இந்த அதீத புகழ்ச்சியினால் அவர்களுக்கு கொஞ்சம் நன்மை போலத் தோற்றமளித்தாலும்  ஊடகங்களின் நோக்கம் பரபரப்புத் தான் (Sensationalism)
அடுத்த முறை ஒரு சின்ன தவறு என்றாலும் இதே ஊடகங்கள் இன்னொரு அதீதமான முறையில் வசைபாடவும் தயங்குவதில்லை. அதுவும் ஒரு sensation. 



இந்தப் பிரச்சனைக்குப் பயந்தே பல பிரபலங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் வேலையே குறைத்துக் கொள்கிறார்கள் அல்லது பத்திரிக்கைகள் விரும்பும்படி மாற்றிக் கொள்கிறார்கள்.  ரஜினி இதற்கு ஒரு நல்ல உதாரணம்.



இப்போதிருக்கும் சூழலில் பொறுப்பான அணுகுமுறையை ஊடகங்களிடிடமிருந்து எதிர்பார்ப்பது வீண்தான். 

பாராட்டினாலும் அல்லது திட்டினாலும் எல்லாமே ஒரு extreme தான்..

ஊடகங்கள் எவ்வளவு பாராட்டினாலும், திட்டினாலும் தன வேலையைச் தான் விரும்பும்படி செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், அதை ஒவ்வொரு முறையும் சிறப்பாகச் செய்யவது சச்சின்.


புகழ்வதோ அல்லது விமர்சிப்பதோ அது விமர்சகர்களின் வேலை. ஒரு சாதனையாளர் அதைப் பார்க்க தேவையில்லை..


ஊடகங்கள் தான் பிரபலங்களைத் தொடரவேண்டும்,  பிரபலங்கள் ஊடகங்களை ஊடகங்களைத் தொடரக் கூடாது. இதை நடைமுறையில் காட்டி வெற்றி மேல் வெற்றி படைக்கும் சச்சினுக்கு வாழ்த்துக்கள்..


5 நாள் கிரிக்கெட் போட்டியில் 50-வது சதத்தை நிறைவு செய்துள்ள master blaster  சச்சின்-னுக்கு வாழ்த்துக்கள், வரலாறாக இல்லை. ஒரு சிறந்த விளையாட்டு வீரராக.