Unordered List

01 செப்டம்பர் 2014

உலகெலாம் புகழ் நம்ம ஏரியா VIP

நம்ம வீட்டுக்கு பக்கத்துல யாராவது வீ.ஐ.பி வீடு இருந்தால் இரு பெருமை தானே. எங்க வீட்டுக்கு பக்கத்துல இருப்பது சேக்கிழாருடையது, பெரியபுராணம் எழுதியவர். பெரியவரைப் பார்த்து ஒரு வணக்கம் வைக்காமல் இருக்கலாமா? சென்ற வாரயிறுதியில் கிளம்பிவிட்டேன்.

குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்வழியில் வலதுபுறம் செல்லும் ஒரு சிறிய சாலையில் சென்றால் இருக்கிறது அவரது வீடு, சரி கோவில்.




சிறிய கோவில்தான், ஆனால் சுத்தமாக பராமரிக்கப் படுகிறது. அதிக கூட்டமில்லை. உண்மையைச் சொன்னால் எங்களைத் தவிர யாருமில்லை அப்போது. சரிதான் இந்தக் கோவிலுக்கு எந்தப் பரிகாரமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை போல. அமைதியே சிறப்புதான் இப்படிப்பட்ட நினைவிடங்களுக்கு.

காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு மணி நேரம் தான் பூஜை நேரம் என்றாலும், கோவில் எப்போதும் திறந்திருக்கிறது. பக்கத்திலயே அவர் வழிபட்டதாகச் சொல்லப்படும் ஒரு சிவன் கோவிலும் பக்கத்திலேயே இருப்பது போனஸ்.






உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்


நிலவு உலாவிய நீர்மலி வேணியன்



அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்



மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

பெரியபுராணம் இங்கே படிக்கக் கிடைக்கிறது..


நம்ம புராணமே பெரிய புராணமாக இருக்கே இதுல இது வேறயா என்று சலித்துக்கொள்கிறீர்களா? இதையும் படியுங்கள்  :-)




31 ஆகஸ்ட் 2014

பிள்ளையாருக்கு எந்த ஊரு?

பரவசமாகத் தான் இருக்கிறது, இவ்வளவு வரலாற்றாய்வாளர்களை ஒருசேரப்பார்பதற்கு. எங்கு இருந்தார்களோ தெரியவில்லை வரவேண்டிய நேரத்துக்கு, அது தான் இந்த விநாயகர் சதுர்த்திக்கு சரியாக ஆஜராகிவிட்டனர்.

இந்த விநானகர் எங்கே இருந்து வந்தார் என்பதே கேள்வி. இவர்களெல்லாம் தமிழ் நாட்டைவிட்டு வேறு எங்கிருந்து வந்த நம்பிக்கைகளையும் பொருத்துக்கொள்ள மாட்டார்கள் போல.  வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு? இருக்கட்டும், நமக்கு வேண்டாம் இந்தப் பிரச்சனை.
நமக்கு தெரிந்தவரை பெரும்பாலான வீடுகளில் இருந்த பிள்ளையார்கள் அந்தந்த தெருமுனைகளிலோ அல்லது கடை வீதிகளிலோ தான் உருவானவர்கள். 

இன்னும் சில வீடுகளில், குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கொழுக்கட்டையில் உருவான பிள்ளையார்கள் பல. 

இதோ வீட்டில் உருவான ஒரு பிள்ளையார்.


09 ஜூன் 2014

திடுமென வந்த மழை

திடுமென இடியிடிக்க விழித்துப் பார்த்தேன். அங்கே பார்க்க ஏதுமிருக்கவில்லை. இருந்தது இருட்டுதான். உண்மையான இருட்டு. முழுமையான இருட்டைப் பார்ப்பதென்றால் அது மின்சாரம் இல்லாமலிருந்தால் தான் முடியும், இல்லையெனில் எங்கிருந்தாவது ஒளி கசிந்துவந்து  இருட்டைக் கெடுத்துவிடும். அதேபோல் முழுமையான இருட்டை அனுபவிக்கவேண்டுமெனில் அது மழைபெய்யும்போது தான் முடியும். கோடையில் உடல் தகிக்கும்  வெப்பமும் இருட்டின் அனுபவதைக் கெடுத்துவிடும்.

ஆர்வத்துடன் ஜன்னல் கதவுகளைத் திறந்தேன். அதற்காகவே காத்திருந்ததுபோல பாய்ந்துவந்து அணைத்துக் கொண்டது  மழைச் சாரல். இறுக மூடியிருந்த அறையில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குளிர்சதனம் வேலைசெய்யாமலிருந்ததால் கொஞ்சமாக வேர்க்கத் தொடங்கியிருந்த உடலில் சட்டென சாரல் பாய திடுக்கிட்டு நின்றேன், சிறு திடுக்கிடலுக்குப் பின்பு அனிச்சையாக  தடாலென ஜன்னல் கதவுகளை மூடினேன். ஓரிரு விநாடிகளில் சற்று சுதாரித்து ஜன்னலின் ஒரு கதவை மட்டும் திறந்தேன்.

வழக்கமான மழையில் இவ்வளவு சாரல் இந்த அறையில் வந்ததில்லை. மழையுடன் வந்த பெரும் காற்றின் துணைகொண்டு சாரல் உள்ளே பாய்ந்து வந்தது. கொஞ்சம் முயற்சியுடன் கட்டிலை கொஞ்சம் தள்ளி வைத்தேன்.

மழையைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு ஒரு குழப்பம், இது உண்மையா அல்லது கனவா, இரவு தூங்கப்போவதற்கு முன் துவைத்துக் காயப்போடும்போதுகூட மழை வரும் எந்த அறிகுறியும் இருக்கவில்லையே. இதெப்படி இவ்வளவு பெரிய சாத்தியம், நேற்று ஜெயமோகன்  தளத்தில் படித்த "இடவப்பாதி" கட்டுரையைக் கனவாகக் கண்டுகொண்டிருக்கிறேனா என்ற நினைவும் வராமலில்லை.

கலையில் விழிப்புவந்தபோது  மழை பற்றிய எந்த சந்தேகமும் இருக்கவில்லை. மிக இயல்பான விழிப்பு அது. உடலும் மனமும் எப்போதையும் விட மிகப்   புத்துணர்ச்சியுடன் இருந்ததை உணரமுடிந்தது. திறந்திருந்த ஜன்னலில் ஒரு குருவி அமர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அந்தக் குருவி எனக்கு  முன்பாக எழுந்து என்னைவிட உற்சாகமாக இருந்தது. அந்தக் குருவியின் வீட்டில் எத்தனை ஜன்னல் கதவுகள் இருக்கின்றன என்று கேட்கவேண்டும்.

16 டிசம்பர் 2013

இவன் வேற மாதிரி - இவன் வேற மாதிரி அரசியல்வாதி

ஒரு அமைச்சர் இருக்கிறார், அதுவும் அவர் சட்ட அமைச்சர். அவருக்கு சட்ட கல்லூரியில் சில மாணவர்களைச் சேர்க்கவேண்டியிருக்கிறது. நீங்கள் என்ன நினைப்பீர்கள், அவர் தனது பதவியை பயன்படுத்தி ஏதாவது செய்வார் என்றுதானே. ஆனால் அவர் அப்படியல்ல, மாறாக அவர் அந்த கல்லூரி முதல்வரை கல்லூரியிலேயே சந்தித்து வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் அந்த கல்லூரி முதல்வர், அமைச்சரை உதாசீனமாகப் பேசி மறுத்து அனுப்பி விடுகிறார்.

இப்போதே தெரிந்துவிடுகிறது, இதுஒரு வித்தியாசமான படம் என்று.

சரி.. இப்போது அந்த அமைச்சர் என்ன செய்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள், தனது அதிகாரத்தை பயன்படுத்துவார் என்று தானே, அதுதான் இல்லை,  தனக்குத் தெரிந்த சில மாணவர்களிடம் சொல்கிறார். அவர்கள் மற்ற சில மாணவர்களை  தாக்குகிறார்கள். அது எதற்க்கென்று தெரியவில்லை. எந்த அடிப்படையில் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் அந்த அமைச்சருக்கு எந்த பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. (செய்தியில் பார்த்த சட்ட கல்லூரிப் பிரச்சனையை படத்தில் வைக்க விரும்பியது நல்லது தான். ஆனால் அதன் பிண்ணனியை கொஞ்சமாவது இயக்குனர் ஆராய்ச்சி செய்திருக்கலாம்.)

இது இப்படி இருக்க அந்த அமைச்சருக்கு இன்னொரு பிரச்சனை. அவரது தம்பி சிலரைக் கொலை செய்து  விடுகிறார்.இப்போது என்ன நினைப்பீர்கள், அமைச்சர் தனது பதவியை பயன்படுத்தி தம்பியை கைது செய்யவிடாமல் செய்துவிடுவார் என்று தானே, அப்படியே கைதானாலும் சாட்சிகளைக் கலைத்து விடுதலை ஆக்கிவிடுவார் என்று தானே. அதுவும் இல்லை, அந்தத் தம்பி கைதும் ஆகி, தண்டனையும்  பெற்றுவிடுகிறார்.என்ன அதிசயம், தமிழ் நாட்டில் இப்படி நடக்குமா என்று ஆச்சர்யத்துடன் நாம் பார்க்கிறோம்.

வாழ்க்கை முழுவதும் சிறையிலிருக்கப்போகும் தம்பியை பதினைந்து நாள்  பரோலில் மட்டுமே எடுக்கிறார் அந்த அமைச்சர், இதுவே அதிகபட்சமாக அவர் செய்யக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் அந்த அப்பாவி அமைச்சரின் அவல வாழ்க்கையில் இன்னும் சில பிரச்சனைகளும் வருகின்றன.

----------

அதே ஊரில் தமிழ் சினிமாவின் பார்முலா படி வேலைக்குப் போகாமல் ஒருவர் சுற்றிக்கொண்டு இருக்கிறார், எனவே அவர் தான் ஹீரோ என்று நமக்கு புரிகிறது.

ஹெல்மெட் கூட போடாமல் ஊரெல்லாம் பைக்கில் சுற்றி வருகிறார்.
ஒருநாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் மீது உச்சா போகிறார். அதை மாடியிலிருந்து ஹீரோயின் பார்த்து கண்டிக்க, அவர் நேராக ஹீரோயின் வீட்டுக்குள் சென்று உச்சா அடிக்கிறார், பாத்ரூமில் தான். இதைக் கண்டு ஹீரோயின் இம்ப்ரெஸ் ஆகி காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். வாவ்.

பிறகு அவர் ஒரு இடத்தில வேலைக்கு போய், முதல் நாளே ஒரு போட்டோ எடுத்து ஒரு விளம்பர ஐடியா கொடுக்கிறார், உண்மையிலேயே அது மிக மொக்கையாக இருக்கிறது என்பது நமக்கே தெரிகிறது. அதை அந்த மேனேஜர் பக்குவமாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல், அங்கிருத்து சில அழகு மீன்களை திருடிக்கொண்டு சென்று விடுகிறார்.

இப்படிப்பட்ட பொறுப்பான ஹீரோவுக்கு, அந்த அப்பாவி அமைச்சர் மீது கோபம் ஏற்படுகிறது. ஆனால் அமைச்சர் எந்த தப்புமே செய்யவில்லையே என்ன செய்வது என்று யோசித்து,  பரோலில் வந்த அமைச்சரின் தம்பியை சட்டவிரோதமாக கடத்தி அமைச்சரை சிறை செல்ல வைக்கிறார். போலீசும் அமைச்சரைக் கடுமையாக நடத்தி அவரை சட்ட விரோதமாக கொலை செய்கிறது.

அடுத்தடுத்த பிரச்சனைகளில் அமைச்சரின் தம்பியை ஹீரோ கொலை செய்ய அதையும் போலீஸ் சட்டவிரோதமாக  மறைக்கிறது.

---

எந்த நிலையிலும் பதவியை துஷ்பிரயோகம் செய்யாத வித்தியாசமான அமைச்சரைச் சுற்றிவரும் கதையே இவன் வேற மாதிரி.

அவர் அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவோ, சட்டத்தை மீறியதாகவோ எந்த ஒரு காட்சியும் இல்லை.  அமைச்சர் தம்பியும் தான் செய்த தவறுகளுக்கு சட்டத்தின்முன்   தண்டனையை அனுபவிக்கிறார்.
ஆனால் ஹீரோ சிறிய சட்ட மீறல்களில் ஆரம்பித்து கொலைகள் வரை செய்தாலும் எந்த தண்டனையும் அவருக்கு இல்லை. எந்த மனசாட்சி உறுத்தலும் இன்றி அவர் சிரிக்க படம் முடிகிறது.

இவன் வேறு மாதிரி -  உண்மையிலேயே ஒரு வித்தியாசமான படம், திருந்த நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம்.

09 டிசம்பர் 2013

திருடுபோய்க் கொண்டிருப்பது

"டேய்ய்ய்....."

சென்னை சாந்தி தியேட்டர் வளாகத்தில் இருக்கும் சரவணபவனில் சாவகாசமாக ஒரு  மதிய உணவை முடித்துவிட்டு, நானுண்டு எனது செல்போனுண்டு என  நடந்து  வந்துகொண்டிருந்த நான் அந்தக் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

அவருக்கு ஒரு நாற்பத்தைந்து வயது இருக்கலாம். கையிலிருந்த கருப்புப்பை அவர் ஒரு விற்பனைப்  பிரதிநிதியாக இருக்கலாமென  சொல்லியது, அவரது முகத்தில் கோபம் பரவியிருந்தது.

அவர் பார்த்த திசையில் நானும் பார்த்தேன். ஒரு பத்து பையன்கள் ஓடிக்கொண்டிருந்தனர். எதோ பள்ளி சீருடையில் இருந்தனர்.  அவர் மறுபடியும் கோபமாக குரல்கொடுக்க ஓடிக்கொண்டிருந்த இரு பையன்கள் நின்று நிதானமாகத் திரும்பினர், "என்ன" என்பது போல் தெனாவெட்டாக  அவரைப் பார்த்தனர்.

அதுவரை கோபமாக இருந்த அவர் முகம் கொஞ்சம் மாற்றமடைந்தது, அதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. ஒரு அடி பின்னல் வைத்தார். அருகிலிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து
"பட்டப்பகல்ல இப்படி எடுத்துட்டு ஓடுறாங்க.. எலோரும் பார்த்துகிட்டு இருக்கீங்களே.." என்று குமுறினார். இப்பொது குரல் மிகவும் மட்டுப்பட்டே இருந்தது, இருந்தாலும் இழப்பின் வலி அந்தக் குரலில் இருந்தது. எனக்கு நிலைமை கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.



இப்படி ஒரு அனுபவத்தைப் பற்றி எனது நண்பன் ஒருமுறை சொல்லியிருந்தான்.

பஸ்ஸில் சென்ற அவனது செல்போன் திருடப்பட்டு விட்டதை கவனித்து இருக்கிறான். உடனடியாக ஒரு கும்பல் இறங்குவதையும் கவனித்துவிட்டு, உடனடியாக அவனும் இறங்கியிருக்கிறான்.பேருந்து புறப்பட்டுவிட, ஐந்தாறுபேர் இருந்த அந்த கும்பலும் அவனும் மட்டும் அந்த பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார்கள்.

இவன்  கவனித்ததைக் கவனித்த அவர்களில் வாட்டசாட்டமான   ஒருவன் "என்ன" என்று கேட்க. இவன் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு திரும்பியிருக்கிறான். வேறென்ன செய்ய?

அவர் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். இழப்பும் கையறு நிலையும் அவரது முகத்தில் தெரிந்தது.  இங்கே திருடு போயிருக்கிறது என்றும் அதற்குக் காரணம் யாரென்றும் தெரிந்தாலும் திருடுபோனது என்ன என்று எனக்கு தெரியவில்லை.



ஓடிக்கொண்டிருந்த அந்த பையன்கள் இப்போது மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். எங்களைப் திரும்பி பார்த்த அவர்களின் கண்களிலும் ஏளனம் கைகளில் கரும்பு.

ஆம், அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் கரும்பு இருந்தது. அப்போது தான் கவனித்தேன். அருகிலிருந்த அந்த கரும்பு ஜூஸ் எந்திரத்தின் அருகே சாக்கில் கட்டப்பட்ட ஓரிரு கரும்புகள் மட்டும் இவர்கள் எடுத்தது போக எஞ்சியிருந்தன. ஆளில்லாத கரும்பு ஜூஸ் வண்டியிலிருந்து எடுத்துகொண்டு அதாவது திருடிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். 
அந்த கரும்பு ஜூஸ் கடைக்காரர் அங்கே இல்லாததால், அங்கு நடந்தது யாருக்கும் ஒரு இழப்பாகத் தெரியவில்லை.

அவரை மீண்டும் கவனித்தேன். கண்டிப்பாக அவருக்கும் அந்த கரும்புகளுக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை, பிறகு ஏன் இவர் இவ்வளவு கோபமடைகிறார், இதனால் அவருக்கு என்ன இழப்பு  என்று யோசித்தேன்.

“விடுங்க சார்..கவனிக்காம அப்படியே விட்டுட்டு அப்புறம் போன பின்னாடி ஆத்திரப்பட்டு என்ன சார் பண்ண முடியும். கவனிச்சு வச்சிருந்துக்கணும்” என்று யாரொ அந்தக் கரும்புச்சாக்கை பார்த்தபடிகூற

"படிக்கிற பசங்க சார்"  என்று முனுமுனுத்தபடி அவர் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.