Unordered List

14 ஏப்ரல் 2011

தேர்தலில் முதல் வெற்றி..

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும், தமிழக தேர்தலில் முதல் வெற்றியாளர் யாரென்று தெரியவந்துள்ளது.

அந்த வெற்றியாளர் யார். வேறு யார்? அது தேர்தல் ஆணையம் தான்.

தேர்தல் நேர்மையாகத்தான் நடக்கிறது என்ற நம்பிக்கைதான் மக்கள் ஜனநாயத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை நிலை நிறுத்தும். அந்த நோக்கத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பாகவே செயல்படுவதாகத் தெரிகிறது.



சில குறைபாடுகள் இருந்தாலும், இன்னும் சில தேர்தல்களில் இன்னும் பல முன்னேற்றங்கள் வரலாம் என்றும் நம்பிக்கை வருகிறது.

கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் சொந்தஊருக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துக்கள்.


ஆனால் சொந்த ஊருக்குச் சென்றால் தான் வாக்கு என்ற நிலைமையை மாற்ற தேர்தல் ஆணையம் முயற்சிக்குமா?

வாக்குப் பதிவு எந்திரம், வெப் காம் கண்காணிப்பு, SMS tracking என தொழில்நுட்பத்தில் விளையாடும் ஆணையத்திற்கு இதுஒன்றும் பெரிய வேலை இல்லை.

பாஸ்போர்ட், வருமான வரி என்று பல விஷயங்களை நாம் இருக்கும் இடத்திலேயே செய்யமுடியும்போது ஒட்டு மட்டும் ஏன் முடியாது?

இதன்மூலம் வாக்கு சதவீதமும் அதிகமாகும், போக்குவரத்து செலவுகளும் குறையும்.

இதுபோன்ற பல முன்னேற்றங்கள் நமது தேர்தல் முறையில் வந்து நமது பங்களிப்பையும் நம்பிக்கையையும் பலப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு நாம்.

06 ஏப்ரல் 2011

உலகக் கோப்பை எங்கே?

இந்திய அணி உலக கோப்பையை வென்றதில் பலருக்கு ஏமாற்றம் தான். தோல்வியில் இருக்கும் பரபரப்பு வெற்றியில் இல்லை!


செய்தி தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது.


இந்தியா மட்டும் தோற்று இருந்தால், தோனியை கேப்டன் பதவியிலிருந்து தூக்கியிருக்கலாம். சச்சினை அணியிலிருந்தே தூக்கியிருக்கலாம். பலரை பந்தாடியிருக்கலாம். எல்லாம் போச்சு..


இப்போது வரும் செய்தியெல்லாம் அவருக்கு ஒரு கோடி, இவருக்கு ரெண்டு கோடி என்பது தான். ஆடி கார், பெர்ராரி கார் என மற்றும் பல செய்திகள். இதில் என்ன சந்தோசம் நமக்கு?


யாருக்கு வேண்டும் இந்த செய்திகள்? கேட்கவே வெறுப்பாய் இருக்கிறதல்லவா?



இப்படிப் பட்ட நிலைமையில் வந்தது ஒரு பரபரப்பு..


கொடுக்கப் பட்டது உண்மையான உலகக் கோப்பையே அல்ல என்பது தான் செய்தி.


அப்படியென்றால் உண்மையான கோப்பையை வைத்திருப்பது யார்?


உண்மையான உலகக்கோப்பை மும்பை சுங்கத்துறை அலுவலகத்தில் உள்ளது எனவும் கொடுக்கப்பட்டது மாதிரி கோப்பை எனவும் செய்திகள் சொல்கின்றன.


கொடுக்கப் பட்டது தான் உண்மையான கோப்பை எனவும் சுங்கத்தில் இருப்பது தான் மாதிரி கோப்பை எனவும் ஐ சி சி சொல்லுகிறது. போலி பெட்டியை வில்லனிடம் சிக்க வைத்துவிட்டு கடத்தல் தங்கம் இருக்கும் பெட்டியுடன் எஸ்கேப் ஆகும் அந்தக்கால சினிமா போல ஹீரோ போல ஐ சி சி செய்துள்ளதாக சொல்லிக்கொள்கிறது. ஆனாலும் யாரும் நம்புவதாகத் தெரியவில்லை.




எனவே உண்மையான உலகக் கோப்பை எங்குள்ளது என மக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி பரபரப்பான தகவல்கள் வந்தபடி உள்ளன.

இதைப் பற்றி தமிழக தலைவர்கள் பலரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்..

இரண்டு கோப்பைகளுமே போலிதான் என தலைவர் கூறியுள்ளார். வடஇந்திய ஊடகங்களின் மாயையில் தமிழன் மயங்கிவிடக்கூடாது என்றும் அவர் எழுதிய கடிதத்தில் கூறியிள்ளார். தொலைந்த கோப்பையைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை என்று கூறிய அவர், தான் மறுபடி ஆட்சிக்குவந்தால் அனைவருக்கும் ஒரு கிரிக்கெட் உலகக் கோப்பை இலவசமாக தரப்படும் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் பிடிக்காதவர்கள் கால்பந்து உலகக் கோப்பையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இது நாட்டுமக்களுக்கு மிகவும் தேவையான அறிவிப்பு. வெற்றி நிட்சயம் என்று கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



தலைவரின் இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் சதி என எதிர் தலைவி கருத்துகூறியுள்ளார். கிரிக்கெட் உலகக் கோப்பை கொடுக்கும் அவர் ஹாக்கி உலகக் கோப்பையை கொடுக்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் கால்பந்து உலகக் கோப்பை இரண்டுமே கொடுக்கப்படும் என கூறியுள்ளார். அதனுடன் ஹாக்கி உலகக் கோப்பையும் கொடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.


ஹாக்கி உலகக் கோப்பை அறிவித்ததன் மூலம் தலைவியின் தேசபக்தி நிருபிக்கப் பட்டுள்ளது என மூத்த அரசியல் பத்திரிக்கையாளர் கருத்துக் கூறியுள்ளார்.


கோப்பைப் பற்றி புது கட்சி தலைவரிடம் தான் கேட்கவேண்டும் என சிரிப்பு நடிகர் கூறினார். அவர் கோப்பையை பல ரவுண்டுகளுக்கு பயன்படுத்துவார் எனக் கூறினார்.

கேப்டன் என்றால் அது ஒருவர் மட்டும் மட்டும் தான். எனவே தோணியே ஒரு போலி கேப்டன் என்று கேப்டன் கட்சியினர் கருத்துக் கூறியுள்ளனர். எனவே டோனி வாங்கிய கோப்பை செல்லாது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். தமிழ் நாட்டு தேர்தலின் முடிவே தங்களுக்கு உண்மையான உலகக் கோப்பை என்று கூறினார்.



இது இப்படியிருக்க மும்பையில் இருந்து ஒரு அவசர செய்தி வந்துள்ளது..



"செல்லாது செல்லாது... எல்லாத்தையும் நிறுத்துங்க.. நான் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன்..." என்று சச்சின் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த சர்ச்சை பற்றி கேட்ட கேள்விக்கு அவர் மேற்க்கண்டவாறு பதிலளித்தார்.


2015 இல் நடக்கும் உலகக் கோப்பையை வென்று உண்மையான கோப்பையை கைப்பற்றுவேன் என அவர் பேட்டியளித்துள்ளார். இதனால் கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரரப்பு ஏற்பட்டுள்ளது..

01 ஏப்ரல் 2011

அந்தத் தேர்தல் எப்போ?

தேர்தல் வந்துவிட்டது என்று சொல்லிக்கொள்கிறார்கள்..

தலைவர்கள் பிரச்சாரம்.. பல வாக்குறுதிகள் என எங்கும் பரபரப்பு.


சரி.. அப்படி என்ன தான் சொல்கிறார்கள் சில நாட்களாக செய்திகளில் கவனிக்கும்போது கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது.


மிக்சி, கிரைண்டர், பேன், கலர் டிவி என பல வாக்குறுதிகள். இதில் யார் சொன்னதெல்லாம் சரியாக கொடுப்பார்கள், யார் சரியாக கொடுக்கமாட்டார்கள் என பரபரப்பான விவாதம்.


இதில் என்ன சந்தேகம்?


இதை சரியாக கொடுப்பார்களா என்றா? இல்லை.. அது இல்லை நமது சந்தேகம்.



இது எல்லாம் விவரம் இல்லாமல் அவசரப்பட்டு முன்னாடியே வாங்கி வீட்டில் வைத்திருப்பவர்கள் என்ன செய்வது? வீட்டில் இரண்டு மிக்சி வைத்து என்ன பண்ணுவது?



வேலை தேடும் பசங்க எல்லாம் என்ன பண்ணுறது? அடுப்பே இல்லாத அறையில் வாழும் அவர்கள் இதை வைத்து என்ன என்ன செய்வார்கள்?


இது அல்லாமல் விலைவாசி போன்ற பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் என்ன செய்வது?



ஒருவேளை இது அவர்களுக்கான தேர்தல் இல்லையோ? விலைவாசி பிரச்சனை, வேலை வாய்ப்பு, பெட்ரோல் விலை, சாலைகள், மருத்துவம், கல்வி போன்ற பிரச்சனை எல்லாம் பேசுவது வேற தேர்தலோ?



அந்தத் தேர்தல் எப்போ வருது?

25 மார்ச் 2011

வேலைக்குப்பின் கூலி - தேர்தல் ஆணையம் கண்டிப்பு


தமிழகமெங்கும் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யும் காட்சிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருகின்றன.



பணம் பட்டுவாடா, பறிமுதல், தடை என பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை.




பணமோ அல்லது பொருளோ வாக்காளர்களுக்கு கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று பொதுவாக சொல்லப்படுகிறது. கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் இருவருக்குமே பிரச்சனை இல்லாதபொழுது ஏன் இது தடுக்கப் படுகிறது என்று நம்மிடம் சிலர் சந்தேகம் எழுப்பினர்.



இலவசம் கொடுப்பது ஏன் தேர்த்தல் ஆணையத்தால் தடைசெய்யப் படுகிறது என்று நமக்கும் தெளிவாகத் தெரியவில்லை.



இப்படி புரிந்து கொள்ளலாமா?



வாக்களிப்பதற்காக இலவசம் கொடுத்தால் தவறு என்று இருக்குமோ? ஆனால் இதைவிட விலை உயர்ந்த பொருட்களை தங்களுக்கு வாக்களித்தால் தருவதாக நேரடியாகவே சொல்லப்படுகிறதே. எனவே வாக்களித்தால் இலவசம் என்பது தவறு இல்லை போலத்தான் தெரிகிறது. அப்படியென்றால் எது தவறு?


.
சரி.. இப்படி புரிந்து கொள்ளலாம்.



வாக்களர்களுக்கு பணம் அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பே கொடுத்தால் அது குற்றம். அதையே அவர்கள் வாக்களித்து வேட்பாளர் வென்றபிறகு கொடுத்தால் அது முறையானது.



ஏன் இப்படி இருக்கிறது? அதற்கும் காரணம் இருக்கும்.



ஏனென்றால் பொருளை வாங்கிவிட்டு மக்கள் ஒட்டு போடாமல் இருந்துவிட்டால் பணம் கொடுத்தவர் பாவம் ஏமாந்துவிடுவார் அல்லவா?
அதாவது வேலையை செய்யும் முன் ஊதியம் பெறுவது தவறு என ஆணையம் சொல்கிறது போலும்.



நியாயம் தான்.

21 மார்ச் 2011

ஏமாற்றபட்டது யார்... தோற்றது யார்...

அவர் நல்லவர் என்பதனால் தான் ஏமாற்றப்பட்டார் என்பது ஒரு தரப்பு. நல்லவர்கள் ஏமாற்றப்படுவது ஒன்றும் புதிதில்லையே என்பது அவர்கள் வாதம்.


அவர் ஏமாந்தததினால் தான் நல்லவர் ஆனார் என்பது மற்றொரு தரப்பு. ஏமாளியாக இருப்பதே நல்லவராக இருப்பதற்கான தகுதி என்பது இவர்கள் வாதம். பொதுமக்களும் மற்றும் எல்லாக் கட்சியினரும் அவர் மீது காட்டும் திடீர் பாசமே இதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம்.


உண்மையில் ஏமாற்றப்பட்டது அவரில்லை. அவர் தான் அவரை நம்பிக்கொண்டிருப்பவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்பது இன்னொரு தரப்பு.


ஏமாறவும் இல்லை.. ஏமாற்றவும் இல்லை... அவர் விரும்பியது இதைத்தான். இது தான் அவரது மாஸ்டர் மூவ் என்பது இன்னொரு கருத்து.


எப்போதும் ஏமாறாதவர்கள் பத்திரிக்கைகள் தான் என்பது வல்லுனர்களின் கருத்து.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!!!



........................................


நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஜெயித்திருந்தால் அது ஆஸ்திரேலியாவுடன் விளயாடவேண்டியிருந்திருக்கும. தோற்றதனால் அது பாகிஸ்தானுடன் விளையாடப் போகிறது. எனவே இது அந்த அணிக்கு வருத்தப்படவேண்டிய தோல்வியில்லை.



இதில் தோற்றிருந்தால் சிறிலங்காவுடன் விளையாடியிருக்கவேண்டிய இந்தியா இப்போது ஆஸ்திரேலியாவுடன் ஆடப் போகிறது.



உண்மையில் நேற்றைய போட்டியில் தோற்றது யார் என வரும் வியாழக்கிழமைதான் தெரியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.